Thursday, April 30, 2020

சோழர் செப்பேடுகள் - 5

சோழர் செப்பேடுகள் -5

சுந்தரச்சோழனின் திருச்செங்கோடு செப்பேடு 1 & 2 .
தென்னிந்திய கல்வெட்டுத்தொகுதி எண் 3 ல் .. 213 மற்றும் 212 ஆம் எண் சாசனமாக இவ்விரண்டு செப்பேடு விபரங்கள் பதிவிடப்பட்டுள்ளன. பதிப்பித்தவர் H.கிருஷ்ணசாஸ்திரி. திருச்செங்கோடு முத்துச்சுவாமி அவர்களிடமிருந்து தனக்கு இந்த செப்பேடு கிடைத்ததாகவும், விபரங்களை படியெடுத்தபிறகு அவரிடமே இச்செப்பேட்டை ஒப்படைத்தாகவும் சாஸ்திரி எழுதியுள்ளார்.

இந்த செப்பேட்டில் இலட்சினை இல்லை. முழுவதும் தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. ஆங்காங்கே சில கிரந்த எழுத்துக்கள் மட்டும் உள்ளது.
முதல் செப்பேடு, இராசகேசரி வர்மனின் 5 ஆம் ஆண்டு. இந்த இராசகேசரி இராஜராஜன் என்பதாக சாஸ்திரி எழுதியுள்ளார். ஆனால் பெரும்பாலான ஆய்வாளர்கள் இந்த ராசகேசரி என்பது சுந்தரச்சோழனே என்று முடிவு செய்துள்ளனர்.


5ம் ஆட்சியாண்டு என்பதால் செப்பேட்டின் காலம் கி.பி. 962.
முதல் செப்பேட்டுத்
தொகுதயில் மூன்று ஏடுகள் உள்ளன.
தூசியூரில் எழுந்தருளியிக்கும் திருமூலஸ்தானமுடைய பரமேச்வரனுக்கு பஞ்சமாசப்தம் கொட்டும் உவச்சர்களுக்கு, கொல்லி மழவனான ஒற்றியூரன் பிரதிகண்ட வர்மன் என்பவர் நிலதானம் வழங்கும் விபரங்கள் இச்செப்பேட்டில் உள்ள முக்கியப் பகுதியாகும்.
இரண்டாம் செப்பேடு ஒரே ஒரு பட்டை மட்டும் கொண்டதாக உள்ளது. இது இராசகேசரியான சுந்தரச்சோழனின் 10 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டது. இரண்டு தனித்தனி ஆவணங்கள் தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ளன..

முதல் ஆவணம், தூசியூரில் வாங்கப்படும் வீட்டுவரிகளை நிலைநிறுத்துவது குறித்து விபரங்கள்..
இரண்டாம் ஆவணம், ஈழத்துபட்ட கொல்லி மழவன் பிரதிகண்டவர்மன் சுந்தரச்சோழனின் தந்தையின் தாகசாந்திக்காக வழங்கப்பட்ட தானம் குறித்த செய்திகள்.
இச்செப்பேட்டின் மூலம் நாம் அறியும் ஒரு வரலாற்றுத்தகவல்..
சுந்தரச்சோழனின் 9 ம் ஆட்சியாண்டில்.. ஈழப்போர் ஒன்று நடைபெற்றது. அப்போரில் கலந்து கொண்ட கொடும்பாளூர் சிற்றரசன் பராந்தகன் சிறிய வேளான் இறந்தார். இச் செய்தியை திருவெண்காடு கல்வெட்டு பதிவுசெய்கிறது. இப்போரிலே கொல்லி மழவனும் கலந்து கொண்டு இறந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து..
கொல்லிமலைப் பகுதியை ஆண்ட சிற்றரசர்கள், கொல்லி மழவர்கள் மற்றும் மழவரையன் என அழைக்கப்பட்டனர்.
தொடர்வோம்..




 




எழுத்து ; மா.மாரிராஜன்.

Refrence ..
சோழர் செப்பேடுகள்.
க. சங்கரநாரயணன்.

S.i.i. vol 3. No. 212 & 213.















சோழர் செப்பேடுகள் - 4





சோழர் செப்பேடுகள் - 4
அன்பில் செப்பேடு..
சுந்தரச்சோழன்.
கி.பி. 961.

( இச்செப்பேடு சுந்தரச் சோழரின் 4 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டது. அவர் 957 ல் ஆட்சிக்கு வந்திருக்கலாம் என்னும் ஆய்வாளர்களின் கணிப்பின்படி இச் செப்பேட்டின் காலாம் கி.பி. 961)
திருச்சிக்கு அருகே உள்ள அன்பில் என்னும் ஊர். இவ்வூரில் உள்ள ஒரு விவாசாயி தனது வீட்டின் பராமரிப்பு பணியின்போது அடித்தளத்தைத் தோண்ட இச்செப்பேடு கிடைத்தது. அவ்வூரில் உள்ள லெட்சுமணன் செட்டியாரிடம் செப்பேட்டை அந்த விவசாயி கொடுத்தார். செட்டியார் அவர்கள் தமிழ்தாத்தா உ.வே. சாமிநாதஐயரிடம் கொடுத்தார். அவர் கல்வெட்டாய்வாளார் திரு.கோபிநாதராவ் அவர்களிடம் ஒப்படைத்தார்.
திரு. T.a. கோபிநாதராவ் அவர்கள் இச்செப்பேட்டு விபரங்களை Epigraphy indica vol 15 ,,ல் Page no 44 - 72 வரை பதிப்பித்தார்..
இரண்டாம் பராந்தகன் என்றழைக்கப்படும் சுந்தரச்சோழனின்
4 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டது.

தனது அமைச்சரான அன்பில் என்னும்
ஊரைச் சேர்ந்த அநிருத்த பிரம்மாதிதாசருக்கு 10 வேலி நிலத்தை கருணாகரமங்கலம் என்று பெயர் சூட்டி சுந்தரச்சோழன் கொடையாக வழங்கினார். இதற்கான ஆவனமே இச்செப்பேடு.
மொத்தம் 11 பட்டைகள் உள்ளன. பட்டைகளின் இருபக்கமும் எழுத்துக்கள் உள்ளன.



கோர்க்கப்பட்ட வளையத்தின் முகப்பு இலச்சினையில் சோழர் முத்திரை உள்ளது. அமர்ந்துள்ள புலியின் முன் இரட்டை கயல். படுக்கைவசமாய் வில். இரு விளக்குதாங்கிகள், இரு சாமரங்கள், ஒரு குடை உள்ளன. இலச்சினையின் விளிம்பில் சாசன சுலோகம் உள்ளது.
" ஸஸ்வத் விஸ்வம்பரா நேத்ரம் லஷ்மீஜய ஸரோருஹம் சாஸநம் ஸ்ரீமத் ராஜ கேஸரி வர்ம்மண "
உலகிற்கு கண் போன்றதும் இலட்சுமியின் கையில் உள்ள வெற்றித் தாமரை போன்றதுமான இந்த சாசனம் ராஜகேசரி வர்ம்மணுடையது..
திருமால் மற்றும் பரமேஷ்வரனின் காப்பு செய்யுளுடன் துவங்குகிறது.

செய்யுள் 1- 11

திருமகளின் கணவனான விஷ்ணுவின் திருவடித்தாமரைகள் உங்களுக்கு செல்வத்தை வழங்கட்டும். பிறைச் சந்திரனை சடையில் தரித்த பரமேச்வரனின் தோள்களாகிய தண்டங்கள் உங்களுக்கு பெரும் செல்வத்தை வழங்கட்டும்.சிறந்த சோழர் குலம் இவ்வுலகை காப்பாற்றட்டும். சோழமரபின் மூலமாக திகழ்வன் சூரியன். தாமரைக் கண்ணனான பெருமாளின் நாபியிலிருந்து பிரம்மா தோன்றினார். பிரம்மாவிடமிருந்து மரீசி தோன்றினார். மரீசியிடமிருந்து கச்யபர் தோன்றினார். அவரிடமிருந்து அர்யமா என்னும் பெயருடைய சூரியன் தோன்றினார். சூரியனிடமிருத்தது சிபியின் பரம்பரை தோன்றியது. அந்தக்குலத்தில் உபசத் என்னும் மகாவீரன் பிறந்தான். உருத்திரசித், சந்திரசித், உசீநரன் .. அவனுக்கு சிபி பிறந்தான். அவன் தனது உடல் சதையை வெட்டி தராசில் இட்டு புறாவைக் காத்தான்.

செய்யுள் 12 - 15

அந்தக்குலத்தில் சோழன் என்னும் மன்னன் பிறந்தான். அதன்பிறகு இம்மன்னனின் பெயரையே மற்றவர்களும் பெற்றனர். அவர்கள் ஆண்ட நாடும் சோழநாடு என்று பெயர் பெற்றது. இக்குலத்தில் சென்னி, கிள்ளி, முதலானவர்களைத் தொடர்ந்து கரிகாலன் ஆண்டான். இவர்கள் ஆண்டு சுவர்க்கம் சென்றபிறகு, எல்லா ஊர்களிலும் சிவனுக்கு கோவில் எழுப்பிய கோச்செங்கணான் பிறந்தார். இவனிடமிருந்து நல்லடிக்கோன் என்னும் மன்னன் பிறந்தான். அதன் பிறகு வளபன் தோன்றினான். அதன்பிறகு இந்திரனுக்கு சமமான ஸ்ரீகண்டன் தோன்றினான்.

செய்யுள் 16 - 20

இவனுக்கு அடுத்து வெற்றிகளின் உறைவிடமாகத் திகழ்ந்த விஜயாலயன் தோன்றினான். வீரமும் வலிமையும் உடைய விஜயாலனிடமிருந்து இராசகேசரி ( ஆதித்தன்) தோன்றினான். அரசர்களில் நாரயணன் போன்றவன் அவன். காவிரியின் இரு கரைகளிலும் சிவனுக்கு கற்றளியாக பெருங்கோவில்கள் எடுத்தான். அவனிடமிருந்து வீரசோழன் ( பராந்தகன்) தோன்றினான். வீரத்தின் எல்லையாகத் திகழ்ந்த அவனது புகழ் எல்லாத் திசைகளிலும் பரவியது.

செய்யுள் 21 - 24

அவன் வேரூன்றி நின்ற மன்னர்களை விளையாட்டாய் பிடுங்கி எறிந்தான். மதுரையை கைப்பற்றினான். பழுவேட்டரையர் என்னும் கேரள மன்னனின் மகளை மணந்தான். அவர்களுக்கு அரிஞ்சயன் பிறந்தான். அவன் வைதும்பக்குலத்தில் தோன்றிய கல்யாணியை மணந்தான்.

செய்யுள் 25 - 30

அந்த வைதும்ப மகளிடத்தில் தன் பாட்டனின்( பராந்தகன்) குணத்தையும் பெயரையும் கொண்ட அரசன் தோன்றினான். மன்மதனையொத்த அழகுடைய அவன் சுந்தரன் என அழைக்கப்பட்டான்.
உதயசூரியனின் அழகைப் பெற்றிருந்தான். அவனது நாடு பல்வேறு மரங்கள் சூழ வளமுடன் இருந்தது. எல்லைக் காடுகளில் அவனது போர் யானைகள் எதிரிகளற்று தத்தம் பெண் யானைகளோடு விளையாடின. அவனது ஆட்சியில் எந்த ஒரு மனிதனும் நோயினால் இறந்தது இல்லை.அனது படைகள் எழுப்பும் புழுதி வானுலகை அடையும் அளவிற்குப் பெரிது.

செய்யுள் 31 - 46

அவனுடைய அமைச்சராக அனிருத்தர் என்னும் பெயருடையவர் இருந்தார்.
அந்தணர்களில் சிறந்தவர். குணக்குவியல்களின் இருப்பிடமாகத் திகழ்ந்தார். ஸ்ரீரங்கநாதர் கோவிலில் பங்குனி உற்சவத்தில் பெரும் அமுது படைப்பார்.அவருடைய தந்தை நாரயணன் என்னும் பெயருடையவர். அவருடைய பாட்டனார் பெயரும் அனிருத்தர் என்பதாகும். அவரும் ஸ்ரீரங்கநாதருக்கு பெரும் அமுது படைப்பார். அவருடைய கொள்ளுபாட்டனாரும் வேண்டி நிற்கும் அனைவருக்கும் தானிய மழை பொழிந்தவர். இவருக்கு அரசன் அன்பால் ஒரு கிராமத்தை அளித்தான். பத்துவேலி நிலத்தை கருணாகரமங்கலம் என்று பெயர் சூட்டி நிபந்தனைகளுடன் பெண் யானையால் எல்லை குறிக்கப்பட்டு வழங்கினான். பிரமாதிராசன் என்னும் பட்டம் வழங்கி சிறப்பித்தான். பல்லவமுத்திராதிராசன் என்போன் ஆணத்தியாக செயல்பட்டான். மாதவப்பட்டன் என்பவன் இந்த செப்பேட்டை யாத்தான்.
இத்துடன் வடமொழிப்பகுதி நிறைவுற்று, அடுத்தத் தமிழ் பகுதியில் நிலத்தின் எல்லைகள், பிடி சூழ்தல் ஆகியவை கூறப்பட்டுள்ளன.
இச்செப்பேட்டில் நமக்குக் கிடைக்கும் சில அவசிய வரலாற்று செய்திகள்..
சங்க இலக்கியங்களில் காணப்படும், இளஞ்சேட்சென்னி, நெடுமுடிக்கிள்ளி, குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன், போன்றவர்களின் பின்னொட்டு பெயர்கள் இச்செப்பேட்டில் காணப்படுகிறது.
இச்செப்பேட்டில் மட்டும் வரும் ஸ்ரீகண்டன் என்ற பெயருடைய சோழ மன்னனை தெலுங்குச் சோழர் என்று சிலர் கூறுவர். இது முற்றிலும் தவறு. வல்லம் தலபுராணத்தில் பழயாறையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் ஸ்ரீகண்டச்சோழன். ( அன்பில் செப்பேடு. ச.கிருஷ்ணமூர்த்தி)
முற்காலச் சோழர்களில் கோச்செங்கணானுக்குப் பிறகு தகவல் இல்லை என்று ஒரு கருத்து பொதுவாக நிலவினாலும், இச்செப்பேட்டில் கோச்செங்கணான் மகனாக நல்லடிக்கோன் என்பவர் இருக்கிறார்.
விஜயாலயனின் மகனான முதலாம் ஆதித்தன், காவிரியின் இரு கரைகளிலும் சிவனுக்கு பல பெருங்கோவில்கள் எடுத்த செய்தி சிறப்பான ஒன்று.
பழுவேட்டரையரின் மகளை பராந்தகன் மணந்தான். அவர்களுக்கு பிறந்தவனே அரிஞ்சயன்.
( பழுவேட்டரையரின் மகளும், பராந்தகனின் தேவியும், அரிஞ்சயரின் தாய். இவரின் பெயர் அருமொழிநங்கை. திருச்சென்னம்பூண்டிக்கல்வெட்டு. S.i.i. vol 8 no 520.)
வைதும்பர் மகளான கல்யாணியை அரிஞ்சயன் மணந்தான். இவர்களுக்கு பிறந்தவரே சுந்தரச் சோழன்.
சுந்தச் சோழரின் அமைச்சர் அனிருத்தரின் சிறப்பு. அவரது கொடையளிக்கும் குணம். அவரது முன்னோர்களின் பெருமையும் சிறப்பித்து கூறப்பட்டுள்ளது..
தொடர்வோம்..


எழுத்து மா.மாரிராஜன்.

Reference.
சோழர் செப்பேடுகள்.
க.சங்கரநாரயணன்.

சுந்தரச்சோழனின் அன்பில் செப்பேடுகள்.
ச.கிருஷ்ணமூர்த்தி.








Monday, April 27, 2020

சோழர் செப்பேடுகள் -3

சோழர் செப்பேடு -3


வேளஞ்சேரி செப்பேடு.

முதலாம் பராந்தகன்.

கி.பி. 932.






6.10.1977 ஆம் வருடம்.
திருத்தணி அருகே உள்ள வேளஞ்சேரி என்னும் கிராமத்தில் உள்ள ஒருபள்ளிக்கூடம். பள்ளி மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும்போது புதைந்திருந்த சிலைகள் சிலவற்றைக் கண்டார்கள். விடயம் அறிந்து வந்த தொல்லியல் துறையினர் அங்கே கிடந்தவற்றை ஆய்வு செய்தனர். தொல்லியல் இயக்குநர் இரா.நாகசாமியின் மேற்பார்வையில் திரு.நடன காசிநாதன் அவர்கள் அந்த பள்ளிக்குச் சென்று அங்கே கிடைத்த பொருட்களை பார்வையிட்டார். அதில் இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க செப்பேட்டுத் தொகுதிகள் இருந்தன.
பராந்தகச்சோழரின் செப்பேடு ஒன்று. அபராஜிதப் பல்லவரின் செப்பேடு ஒன்று.



பராந்தகனின் செப்பேடு வேளஞ்சேரி செப்பேடு என்றும், அபராஜிதனின் செப்பேடு திருத்தணிச் செப்பேடு என்றும் தொல்லியல் துறையால் அழைக்கப்பட்டன.
இந்த செப்பேடுகளில் காணப்படும் விபரகளை திரு. நாகசாமி அவர்கள், திருத்தணி மற்றும் வேளஞ்சேரி செப்பேடுகள் என்னும் தலைப்பில் தொல்லியல் துறை வெளியீடாக ஒரு நூலை வெளியிட்டார்.
வேளஞ்சேரி செப்பேடு ஐந்து பட்டைகளைக் கொண்டது. பட்டைகளின் இருபுறமும் எழுத்துக்கள் உள்ளன. இப்பட்டைகள் ஒரு வளையத்தில் கோர்க்கப்பட்டு வளையத்தின் முகப்பில் இலச்சினை உள்ளது.
வட்ட வடிவமான இலச்சினையில் சோழர்களின் முத்திரை.
இரு மீன்களின் முன் ஒரு புலி அமர்ந்துள்ளது.
இரு புறமும் இரு விளக்குத் தாங்கிகள் உள்ளன. மேலே குடைகளும் சாமரங்களும் உள்ளது.
மொத்த அமைப்பின் கீழ் வில் ஒன்று படுக்கை வசமாக உள்ளது.. இலச்சினையின் விளிம்பில் கிரந்த எழுத்தில் சுலோகம் உள்ளது.
" ஸ்ரீமத் சந்ரந்த்யதேரேவ
சோளம்ஸ ஸ்ரீகாமணே |
சாஸனம் சோளபூபர்த்து பரகேசரி வர்ம்மண||
" சந்திரனை போன்ற ஒளி கொண்டவனும் சோழத்தின் தலையிற் சூடும் மணியை போன்றவனுமான பரகேசரிவர்மனின் சாசனம். "
செப்பேட்டின் முதல் பகுதியில் 29 வரிகள் வடமொழியிலும், இரண்டாம் பகுதியில் 48 வரிகள் தமிழிலும் உள்ளன.
முதலாம் பராந்தகளிள் 25 ஆம் ஆட்சியாண்டில் இச் செப்பேடு வெளியிடப்பட்டது.
மேலிருஞ்சேரு என்னும் கிராமத்தைச் சேர்ந்த அந்தணர்களுக்கு நிலம் வழங்கிய அரசனின் ஆணைதான் இச் செப்பேடு..
முதல் பகுதியில் மங்கல வாழ்த்தோடு துவங்குகிறது..

செய்யுள் 1-7

திருமால் வாழ்த்து. திருமாலின் நாபியில் உதித்த பிரம்மா. அவருக்கு பின் மரீசி. அவருக்கு மகனாக கச்யபர். அவருக்குப்பின் சூரியதேவர். இக்குலத்தில் உசிநரன் என்னும் மன்னன் பிறந்தான். சோழர்குலத் திலகம் சிபி பிறந்தான். அக்னித்தேவன் அவனை சோதிக்கும் பொருட்டு பருந்தாக வந்தபோது, தன் சதையை பருந்துக்குக் கொடுத்து புறாவைக் காத்தான்.

செய்யுள் 8 - 

பனிமலையின் தடத்தை பதித்தவனும், காவிரியை இரு கரைக்குள் அடக்கியவனுமான கரிகாலன் அக்குலத்தில் பிறந்தான்.கரிகாலனது ஆணையால் காஞ்சியில் மேகத்தைத் தொடும் மாளிகைகள் உண்டாயிற்று.

செய்யுள் - 9

சிலந்தியின் தியாகத்தால் உவகை கொண்ட சிவன் அதை சோழர் மரபில் மன்னனாக பிறக்கச் செய்தார். கோச்செங்கண்ணான் என்னும் பெயரில் சிலந்தி சோழ மன்னனாகப் பிறந்தது.

செய்யுள். 10 - 15

அந்தக் குலத்தில் ஒற்றியூரன் என்பவன் பிறந்தான். அவனுக்கு, எதிரிகளாகிய தொடர்களுக்கு காட்டுத்தீயானவன் ( விஜயாலயன்) பிறந்தான். அவனுக்கு குபேரனுக்கு சமமான பெருமையுடைய ஆதித்தன் பிறந்தான். ஆதித்தனிடமிருந்து எதிரிகளுக்கு கூற்றுவன் போல் பராந்தகன் தோன்றினான். அவன் இராமேஷ்வரம் ,கன்னியாகுமரி, ஸ்ரீரங்கம், இவற்றில் தன் வீரத்தால் கொண்டுவரப்பட்ட தங்கத்தைக் கொண்டு துலாபாரம் ஏறினான்.

செய்யுள் 16 - 17

ப்ரம்மவிருத்திராசன் வேண்டுகோள் விட, கிளிநல்லூரைச் சேர்ந்த சர்வதேவன் என்பவன் இச்சாசனத்தின் ஆணத்தி ஆவான். தானத்தை பராந்தகச் சோழன் நீர் வார்த்து பக்தியோடு அளித்தான். உருத்சன் என்னும் பெயரையுடையவன் இச்சாசனத்தைச் செய்தான். இந்த தர்மத்தை காக்க வேண்டி வீரசோழன் யாசிக்கிறான்..

அடுத்து..
தமிழ்ப்பகுதியில் தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகள் வரையறைகள் குறிக்கப்பட்டுள்ளன.
இச்செப்பேட்டில் நமக்குக்கிடைக்கும் சில அவசியத்தரவுகள்.
கரிகாலன் இமயமலையில் தடம்பதித்த செய்தி. காவிரியாற்றுக்கு கரை எழுப்பியது. காஞ்சியில் மாளிகைகள் எடுத்தது.
கோச்செங்கணானின் முற்பிறப்பான சிலந்தி வரலாறு. விஜயாலனின் தந்தை பெயர் ஒற்றியூரன்..
தொடர்வோம்...


எழுத்து: மா.மாரிராஜன்.

Refrence ..

சோழர் செப்பேடுகள்.

க. சங்கரநாரயணன்.


சோழர் செப்பேடுகள் 2


சோழர் செப்பேடு -2

உதயந்திரம் செப்பேடு.
முதாலாம் பராந்தகன்.
கி.பி. 922

சோழர்களது செப்பேடுகளில் காலத்தால் மிகவும் மூத்தது உதயேந்திரம் செப்பேடு ஆகும்.
கி.பி. 1850 ஆண்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள உதயேந்திரம் என்னும் ஊரின் சௌந்திரராஜபெருமாள் கோவில் தர்மகர்த்தாவிடம் இச்செப்பேடு தொகுதிகள் இருந்தது.
இச்செப்பேட்டை வாசித்த கல்வெட்டாய்வாளர் திரு ஹூல்சு அவர்கள் தென்னிந்திய கல்வெட்டுத்தொகுதி எண் 2 பாகம் 3 ல் 76 ம் எண் சாசனமாக பதிப்பித்தார்.
மதுரை கொண்ட கோபரகேசரி பராந்தகனின் 15 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டது.


இச்செப்பேட்டில் 7 பட்டைகள் உள்ளன. செப்பேட்டின் முதல் பகுதி வடமொழியிலும், இரண்டாம் பகுதி தமிழ் மொழியிலும் உள்ளது.
907 ல் ஆட்சிக்கு வந்த பராந்தகசோழனின் 15 ம் ஆட்சியாண்டில் இச் செப்பேடு வெளியிடப்பட்டதால் இச்செப்பேட்டின் காலம் கி.பி. 922.
கங்கமன்னன் இரண்டாம் பிருத்விபதியின் வேண்டுகோளை ஏற்று,
உதயச்சந்திரமங்கலம் என்னும் ஊரில் வாழும் பிராமணர்களுக்கு இரண்டு கிராமத்தை தானமாக வழங்கினார் சோழ வேந்தன் பராந்தகன். தானமாக வழங்ப்பட்டபகுதி வீரநாரயணச்சேரி என்று பராந்தகனது பெயராலே வழங்கப்பட்டது. இதற்கான அரச ஆணைதான் உதயேந்திரம் செப்பேடு.
இச்செப்பேட்டில் அதிமுக்கியமான வரலாற்றுத்தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



சோழ சரித்திரத்தில் மிகப்பெரும் பங்காற்றிய திருப்புறம்பியம் போர் பற்றிய குறிப்பு இச்செப்பேட்டில் மட்டுமே காணப்படுகிறது.
இனி செப்பேட்டில் காணப்படும் செய்திகளின் அவசியாமானவைப் பற்றியத் தொகுப்பு.
முதல் பகுதியில் சோழ அரச பரம்பரை பற்றியும், இரண்டாம் பகுதியில் கங்க மன்னர்களின் வரிசையும் உள்ளன. பிறகு தானம் பற்றிய செய்தி..
ஆரம்ப செய்யுட்கள் கடவுள் வாழ்த்துகளுடன் துவங்குகின்றன.
செய்யுள் 1&2
பெருமாள், சிவன், பிரம்மா, வாழ்த்துகள்.

செய்யுள் 3

திருமாலின் நாபியிலிருந்து பிரம்மா தோன்றினார். பிறகு மரீசி. அதன் பிறகு கோத்திரத்தை உருவாக்கிய கச்யபர், அதன் பிறகு சூரியன். பிறகு ருத்திரசித், சந்திரசித் .. இந்தக் குலத்தில் அரசர்களின் உத்தமனான சிபி தோன்றினான். அவன் புறாவை காத்தவன்.

செய்யுள் 4 - 11

கோக்கிள்ளி, சோழன், கரிகாலன், கோச்செங்கணான் போன்ற அரசர்கள் தோன்றிய சோழர்குலத்தில் வெற்றித்திருமகனான விஜயாலயன் தோன்றினான். அவனுக்கு மகனாக ஆதித்தன் பிறந்தான். அந்த ஆதித்தனுக்கு மகனாக ஸ்ரீவீரநாரயணன் ( பராந்தகன்) தோன்றினான். எதிரிகளுக்கு காட்டுத்தீ போன்றவன் கோவில்கள் எடுப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டான்.கேரள அரசனின் மகளை மணந்தான். இரு பாண அரசர்கள் மற்றும் வைதும்பர்களை வென்றான். பாண்டியர் தலைவனை போரில் சீர்குலைத்த அவனது படை மதுரையை கைப்பற்றியது. பாண்டியன் இராசசிம்மன் தோற்று பின்வாங்கினான்.

செய்யுள் 12 

முதல் கங்கர்களின் வம்சம் பற்றிய செய்திகள் ...
கங்கர்குல முதல்வன் கொங்கணி , பாணர்களை வெல்வதற்காக பட்டாபிசேகம் செய்யப்பட்டான். ஸ்ரீவிஷ்ணுகோபன், அரி, மாதவன், துர்வினீதன், பூவிக்ரமன் பிறப்பால் பெருமைகொண்ட கங்கர் குலத்தில் சிவமாரனின் மகனாக பிருதிவீபதி ( முதலாம்)
தோன்றினான்.
உதயேந்திரம் செப்பேட்டின் 18 வது செய்யுள் திரும்புறம்பியம் போர் பற்றிய செய்தியை பதிவு செய்கிறது.
வீரனான பிரிதிவீபதி திரும்புறம்பியத்தில் நடந்த போரில் வரகுணபாண்டியனை வென்றான். அபராஜிதனின் வெற்றியை உறுதி செய்துவிட்டு அப்போர்க் களத்தில் இறந்தான்.

செய்யுள் 19 - 28

முதலாம் பிருதிவீபதியின் மகனாக மாரசிம்மன்.அவனுக்கு (இரண்டாம்) பிருதிவீபதி பிறந்தான். இவன் அரசர்களில் சிங்கம் போன்றவன். பராந்தகச் சோழனிடமிருந்து பாணர்களுக்கு அரசனாகும் ஆணையான மாவலிவாணராயன் என்னும் பட்டம் பெற்றான். மகாபலியின் வழிவந்த பாணர்களின் அரசு அவனுக்கு வழங்கப்பட்டது அத்திமல்லன் என்னும் பெயரைப் பெற்றான். தான் வழங்கும் தானத்தை பராந்தகச் சோழன் பாதுகாக்கவேண்டும் என்று தலையால் வணங்கி கேட்கிறான். கடைக்காட்டூர் என்று பெயருள்ள கிராமத்தை உதயச்சதுர்வேதிமங்கலத்திற்குக் கொடுத்தான்.சமணர்களுக்கு உரிமையான இரண்டு பட்டிகளை விலக்கி அரசன் நிலத்தை வணங்கினான்.
அடுத்தப்பகுதியில்....

அரசனின் ஆணையும், நில எல்லைகளும் வரையறை செய்யப்படுகின்றன.
இத்துடன் இச்செப்பேட்டு செய்திகள் நிறைவு பெறுகின்றன..
இச்செப்பேட்டில் நமக்கு கிடைக்கக்கூடிய அவசியத்தரவுகள்.
விஜயாலயன் மகன் ஆதித்தன். அவனது மகன் பராந்தகன். அவன் கேரள இளவரசி ஒருவரை மணந்தான். வாணர் மற்றும் வைதும்பர்களை வென்றான். இராசசிம்ம பாண்டியனை வென்று மதுரையைக் கைப்பற்றினான்.
திருப்புறம்பியம் போர் பற்றிய செய்தி இச்செப்பேட்டில் மட்டுமே காணப்படுகிறது. வேறு எந்த ஒரு சோழர் சாசனத்திலும் திருப்புறம்பியம் போர் பற்றிய செய்தி இல்லை.
சோழ கங்கர்களின் உறவு மற்றும் கங்க அரசர்களின் பட்டியலும் இச்செப்பேடு மூலம் நமக்குக் கிடைக்கிறது..
அடுத்த செப்பேடான வேளஞ்சேரி செப்பேடு..
தொடர்வோம்..


அன்புடன்
எழுத்து ; மா.மாரிராஜன்.
Refrence
சோழர் செப்பேடுகள். க. சங்கரநாரயன்.





S.i.i.vol 2. No. 76.

Wednesday, April 22, 2020

சோழர் செப்பேடுகள் 1




சோழர் செப்பேடு -1

வரலற்றுத்தரவுகளை நமக்குத் தரும் ஆவணங்களில் கல்வெட்டுகளைப் போல செப்பேடுகளும் மிக முக்கியமானதாகும்.
ஒரு சில அவசியத் தகவல்களை செப்பேடுகள் மட்டுமே நமக்குத் தருகிறது.
வழக்கம் போல் ஒரு அரசனின் நில தானங்கள், கொடைகள்,சலுகைகள்... இதைக்குறித்த அரசனின் ஆணைகளை செம்புத் தகடுகளில் பொறிக்கப்பட்டு அவைகள் ஆவணங்களாக அறிவிக்கப்படும். இந்த செம்பு பட்டயங்களே செப்பேடுகள் எனப்படும்.



இந்த செப்பேடுகளில் தானம் குறித்த செய்தி பிரதானமாக அமைந்தாலும், மேலும் பலத் தகவல்களும் பதிவுசெய்யப்படுகிறது.
அரசனின் விபரம், அவனின் முன்னோர், அவனது வாரிசு விபரம், அவனது வெற்றி, இன்னும் பல விபரங்கள் அச் செப்பேட்டில் காணப்படுகிறது. இவ்விபரங்கள் மிகச்சிறந்த வரலாற்றுத் தரவுகளாக உள்ளன..


அரசன் வழங்கும் கொடையானது முடிவு செய்யப்பட்டு, அதன் விபரங்கள் ஒரு ஓலையில் எழுதப்படும். ஓலையில் எழுதப்பட்ட விபரங்களை அரசு உயர் அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். அதன் பிறகு ஓலையில் உள்ள விபரங்கள் செப்பேடுகளில் பொறிக்கப்படும்.

செம்பு கட்டிகளை உருக்கி அடித்து பட்டைகளாக செய்வார்கள். அதன் இலகுவான பரப்பின் மேல் விபரங்களை ஒரு பண்டிதர் எழுத்தால் எழுதுவார். அதன் பிறகு பட்டயங்கள் நன்கு காய்ந்த பிறகு எழுத்தின் மேல் உளி கொண்டு செதுக்கி செப்பேடுகள் முழுமையடையும். ஒவ்வொறு பட்டையத்திலும் எண்கள் இடப்படும்.

பட்டைகளின் ஓரத்திலோ, நடுவிலோ துளைகள் இடப்படும்.
இவ்வாறு எழுதப்பட்ட செப்பு பட்டயங்கள் ஒரு வளையத்தில் கோர்க்கப்படும். வளையத்தின் முகப்பில் அரசனது முத்திரையும் செம்பில் செதுக்கி இணைப்பார்கள்.



சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், மற்றும் பல சிற்றரசர்கள் ஏராளமான செப்பேடுகளை வெளியிட்டுள்ளனர்..
இவற்றில் சோழர் காலத்திய செப்பேடுகளில் காணப்படும் விபரங்களை அடுத்தடுத்த தொடர் பதிவுகளாக அறிய இருக்கிறோம்.
இதுவரை சோழர் காலத்திய செப்பேடுகளாக நமக்கு கிடைத்திருப்பவை..

1. உதயேந்திரம் செப்பேடு..
( முதல் பராந்தகச் சோழனால் வெளியிடப்பட்டது
கி.பி. 922)

2 வேலஞ்சேரிச் செப்பேடு.
( முதல் பராந்தகச் சோழனால் வெளியிடப்பட்டது.
கி.பி. 932)

3 அன்பில் செப்பேடு. (சுந்தரச் சோழனால் வெளியிடப்பட்டது
கி.பி 961.)

4 . திருச்செங்கோடு செப்பேடு. -
( இராசகேசரி. வெளியிடப்பட்டது.
கி.பி.961)

5 . திருச்செங்கோடு செப்பேடு - 2
6. சென்னை அருங்காட்சியகச் செப்பேடு.
( உத்தமச் சோழனால் வெளியிடப்பட்டது.
கி.பி. 986)

7. பெரிய லெய்டன் செப்பேடு.
(இராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்டது.
கி.பி. கி.பி. 1005)

8. திருவாலங்காட்டுச் செப்பேடு.
(இராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்டது.
கி.பி. 1018)

9. கரந்தைச் செப்பேடு.
(இராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்டது.
கி.பி. 1020)

10. திருக்களர்ச் செப்பேடுகள்
(இராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்டது.
கி.பி. 1030)

11. எசாலம் செப்பேடு.
( முதலாம் இராஜேந்திரன்.
கி.பி. 1037)

12 . திருக்களர் செப்பேடு. 2
(முதலாம் இராசாதிராசன்)

13. சாராலச் செப்பேடு.
( வீரராஜேந்திரன்.
கி.பி. 1069)

14.சிறிய லெய்டன் செப்பேடு.
( முதலாம் குலோத்துங்கசோழனால் வெளியிடப்பட்டது.
கி.பி. 1090)

15. திருக்களர்ச் செப்பேடு. - 3
( முதலாம் குலோத்துங்கன்.
கி.பி.1098 )

16. திருக்களர்ச் செப்பேடுகள் - 4 (இரண்டாம் இராஜராஜன்.
கி.பி. 1164)

17. திருக்களர்ச் செப்பேடு. - 5
மூன்றாம் குலோத்துங்கன்.
கி.பி. 1207)

18. திருவிந்தளூர் செப்பேடு..
( இரண்டாம் இராஜேந்திரன்)
மேற்கண்ட செப்பேடுகள் ஒவ்வொன்றின் விபரத்தை சுருக்கமாக அடுத்தடுத்தப்பதிவில் தொடர்வோம்..
நாளை ...

பராந்தகச்சோழனின் உதயேந்திரம் செப்பேடு விபரங்கள்..
தொடர்வோம்.


எழுத்து  : மா.மாரிராஜன்..

Reference ..
சோழர் செப்பேடுகள்.
க. சங்கரநாரயணன்.

தமிழிணியம் தகவலாற்றுப்படை இணையப்பக்கம்.