ஆராய்ச்சி





(25/04/17)
மணிமங்கலத்தில் சோழர் வரலாற்று ஆராய்ச்சிக் குழு :



(படத்தில் தர்மேஷ்வரர் கோவில்)



மணிமங்கலம் இராஜகோபால சாமி கோவிலை பற்றி  திரு.கோபால் அவர்கள் முன்பே சென்று வந்த அனுபத்தை சொன்ன போதே நானும் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் என்னையும் இன்று இங்கு கொண்டு சேர்த்தது. இங்கிருக்கும் கல்வெட்டுகளை பற்றியும் கூறியிருந்தார்.

செல்வி. விஜயா, திரு.இராம் இருவரின் ஈடுபாடு பிரமிக்க வைத்தது என்னை. கோவில்லை 4.30க்கு தான் திறப்பார்கள் என்றதும், அரை மணிநேரம் உள்ளதே இதோ அடுத்த கோவில் அருகில் தான், சென்று வரலாம் வாருங்கள் எனக் கூறியதும். 

உடனே தோன்றியது,தர்மேஷ்வரர் கோவில்:

கோவில்  ASI கட்டுபாட்டில்  பராமரிக்கப்படுகிறது. அருமையாக வைத்துள்ளனர்.அந்த சூழலில் கோவில் கல்வெட்டுகளில் சொக்கி போனோம்.
(கல்வெட்டுகள்:மூன்றாம் குலோத்துங்கன்,மூன்றாம் இராஜராஜன்,ஜடாவர்மன் சுந்தர பாண்டியன,மதுராந்த பெத்தப்பித்த சோழன்்)

அடுத்ததாக சென்ற இடம் : வைகுந்த பெருமாள கோவில் :

 கேட்பாரற்று மண்ணில் புதைந்து கிடக்ககும்  இராஜராஜன்,இராஜேந்திரனின் கல்வெட்டுகளை காணும் போது வருத்தம் மேலிட்டு இதயம் கனத்தது.. இன்னும் சில நண்பர்கள் இருந்தால் அதை எடுத்து நிறுத்தி வைத்துவிட்டு வந்திருக்கலாம்...

(கல்வெட்டுகள்:முதலாம் இராஜராஜன்,முதலாம் இராஜேந்திரன்,குலோத்துங்கன்?
ஜடவர்மன் சுந்தர பாண்டியன்)

மாலை 5 மணியளவில் இராஜகோபால சாமி:

கோவில் முழுவதும் கல்வெட்டுகள கல்வெட்டு களஞ்சியம் என்றே கூறலாம்..ஒரு கல்வெட்டில் கொப்பத்து போரில் வீர மரணம் இராதிராஜன் இறந்து இரண்டாம் இராஜேந்திரன் வெற்றி மெய்சிலிர்ப்பு...
(இரண்டாம் இராஜேந்திரன்,வீர ராஜேந்திரன்,முதலாம் குலோத்துங்கன்,விக்கிரம சோழன்,இரண்டாம் இராஜராஜன்,மூன்றாம் குலோத்துங்கன்,மூன்றாம் இராஜராஜன்) இதற்கிடையில் கோபால் அவர்களின் அன்பு தொல்லை இந்த கல்வெட்டு பார்த்தீர்களா அதை படித்தீர்களா என....எங்களை வழிநடத்தும் சிறந்த வழிகாட்டி...

3 மணி நேரத்தில் 3 கோவில்கள்(இராஜகோபால சாமி,தர்மேஷ்வரர்(asi control),வைகுந்த பெருமாள் கோவில்... என மொத்தம் 26கல்வெட்டுகள் சரிபார்த்தோம்.
பம்பரமாக சுழன்றோம். மனதில் திருப்த்தியுடன்.
விடைபெற்றோம்.
------------------------------------------
#மணிமங்கலம்
ரா. பார்முகிலன்



------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

(21/04/17)
சோழர் வரலாற்று ஆய்வுக் குழுவின் FB cover picture பற்றி :



கவிதை:

மனதை ஆளும் மாமன்னர் இருவர் பேர்விளங்க

தமதை கழஞ்சு மகேச்வரி
கலனாய்-பொன்

கொடுத்தருளிய நற்சேதி சொன்ன நற்-கல் வெட்டிங்கே

எடுத்தருளி காட்சிக்  கிங்கு
கண்முன் படைத்துள்ளோம்

----------------------------------------------
அகரம் பார்த்திபன்
(சோழர் வரலாற்று ஆய்வுக் குழு)


கல்வெட்டின் பாடம்:

1 ஸ்வஸ்திஸ்ரீ உடை(யார் ஸ்ரீ) ராஜராஜ (தேவ)
2 ர் உடையார்க்கு ஸ்ரீகார்யஞ்செய்கின்
3 ற ஆற்றூருடையான் நக்கன் தோன்றி
4 உடையார் கோயிலில் திருச்சுற்று மாளி
5 கையில் ஆலையத்து உமா பரமேச்வரியார்க்கு
6 உடையார் ஸ்ரீராஜராஜதேவர்க்கு யாண்டு இருபத்தொ(ன்)
7 பதாவது வரை குடுத்தன கல்லில் வெட்டியது ஆலை
8 யத்து உமாபரமேச்வரியார்க்கு சாத்தி அருளக்குடுத்த (தார்)
9 ஒன்று பொன் ஆடவல்லானால் இரு கழஞ்சரை இவர்க்கே ஸ்ரீராஜேந்த்ர 
10 சோழதேவர் சிறுதனத்து இரட்டகுலகாலத் தெரிந்த உடநி
11 லைக்குதுரைச்சேவகரில்  உடையார் கோயில்
12 லில் எழுத்துவெட்டுவிக்கின்ற அருமொழிவளநா
13 ட்டு வண்டாழை வேளூர்க் கூற்றத்து சாத்தன்குடி வெ
14 ள்ளாளன் இரவி பாளூர் உடையார் ஸ்ரீ ராஜேந்த்ர சோழ தே
15 வர்க்கு யாண்டு மூன்றாவது வரை குடுத்த பட்டைக்கா
16 றை ஒன்று பொன் ஆடவல்லான் என்னுங்கல்லா
17 ல் நிறை முக்காலே மூன்று மஞ்சாடி


குறிப்பு :  கல்வெட்டுப்பாடத்தில் சில

எழுத்துகள் கிரந்த எழுத்துகள் ஆகும்.

கல்வெட்டுச் செய்தி

இராசராசனின் இருபத்தொன்பதாவது ஆண்டில்(ஆண்டு வரையில்)

கொடுக்கப்பட்ட ஒரு கொடைச் செய்தி இக்கல்வெட்டில் முதலில் கூறப்படுகிறது. பெரிய்கோயிலின் நிர்வாகத்தைச் சேர்ந்த (ஸ்ரீகார்யம் செய்கின்ற) நக்கன் தோன்றி என்பான் (இவன், ஆற்றூரைச் சேர்ந்தவன்-ஆற்றூருடையான்) கோயிலின் திருச்சுற்றாலையில் அமைந்திருந்த உமா பரமேசுவரி ஆலயத்தில் இறைவிக்குச் சாத்துவதற்காகப் பொன்னாலான மாலை (தார்) கொடையளிக்கிறான். 

பொன்னின் அளவு இரண்டரைக் கழஞ்சு. ஆடவல்லான் என்னும் நிறை 

கல்லால் நிறுக்கப்பட்டது. இங்கே, இரண்டரைக் கழஞ்சு என்று தற்காலம் நாம் சொல்கின்ற வழக்கு, கல்வெட்டில் “இரு க்ழஞ்சு அரை”

எனப்பயில்வதைக்காண்க. மற்றொரு கொடை, சாத்தன்குடி என்னும் ஊரைச்சேர்ந்த வெள்ளாளன் இரவிபாளூர் என்பவன் கொடுத்தகொடை பற்றியது. சாத்தன்குடி என்னும் ஊர், அருமொழிதேவ வளநாட்டில், வண்டாழை வேளூர்க் கூற்றத்தைச் சேர்ந்தது. இவன் இராசேந்திரனின் மூன்றாவது ஆண்டில் கொடையளிக்கிறான். இவன், இராசேந்திரனின் படைப்பிரிவுகளில் ஒன்றான தெரிந்த உடநிலைச் சேவகத்தைச் சேர்ந்தவன். உடநிலைச்சேவகர் என்பவர் நெருங்கிய வீரர் குழுக்களில்

ஒருவர் என்பது அகராதி விளக்கம். தெரிந்த என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட என்னும் பொருளுடையது. குறிப்பாக இந்தப்

படைப்பிரிவு குதிரைப்படை வகையைச் சேர்ந்தது எனக் கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். குதிரை என்னும் சொல், எக்காரணத்தாலோ

“குதுரை” என இங்கே எழுதப்பட்டுள்ளது. சிறுதனம் என்பது, சோழப்படைப்பிரிவுகளில் ஒன்று. இதுபோலத் தெரிந்த படைப்பிரிவுகளின் பெயரில் அரசனின் பெயர் முன்னொட்டாக

அமையும். இங்கே அரசனின் சிறப்புப் பெயரான இரட்டகுலகாலன் என்னும் பெயர் முன்னொட்டாக வருகின்றது. இரட்டபாடியை 

வென்றதால் கிடைத்த சிறப்புப்பெயர். இந்தக் கொடையாளி, பெரிய கோயிலில் எழுத்து வெட்டுவிக்கின்ற பணியையும் சேர்த்துச் செய்திருக்கிறான் என அறிகிறோம்.  கல்வெட்டுகள் பொறிக்கும் 

பணிகளில் உயர் அதிகாரிகள் கண்காணிப்பு, மேற்பார்வைப் பணிகளில்

ஈடுபட்டனர் எனத்தெரிகிறது. இவன் கொடுத்த கொடை, பொன்னால் செய்யப்பட்ட பட்டைக் காறை என்பதாகும். இது ஒருவகைக் கழுத்தணியாகும். இக்கொடை, மேலே குறிப்பிட்ட உமா மகேசுவரியார் இறைவிக்கே கொடுக்கப்பட்டது. பொன்னின் நிறை மூன்றே முக்கால் மஞ்சாடி என்னும் அளவு கொண்டது. மஞ்சாடி என்பது இருபது குன்றிமணிகள் சேர்ந்த எடையாகும். (முனையில் மட்டும் கருப்புப்புள்ளி கொண்ட, மற்ற பகுதி முழுதும் சிவப்பு வண்ணம் கொண்ட,  நீள்வட்ட வடிவில் உள்ள ஒரு மணி போன்ற விதை. பொற்கொல்லர்கள் இதைப் பயன்படுத்துவர்.)


-----------------------------------------------------------------------------------------------------------------

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை(சோழர் வரலாற்று ஆய்வுக் குழு)

No comments:

Post a Comment