Saturday, July 29, 2017

தடங்களைத் தேடும் தடங்கள் 1/1

தடங்களைத் தேடும் தடங்கள் 
 தடம் 1 பயணம் 1
                            உத்தமசீலி                                                
(எழுத்து /படங்கள் திருச்சி பார்த்தி )

இக்கட்டுரைத் தொடர் நம் சோழ வரலாற்று ஆய்வு சங்கத்தினர், நம் பண்டைய தடம் தேடிப் பயணித்த பொழுது கிடைத்த சுவாரசியங்கள்,  அனுபவங்கள்,  சந்தித்த இடர்கள், இவற்றைப்  பிறருக்குச்  சொல்ல விழையும் ஒரு சிறிய முயற்சி!  பெற்ற 'நல் அனுபவம்'  என்னும் சுவையான கனியை மட்டும் கொடுப்பதோடு நில்லாமல், அதைப் பறிப்பதற்குப் பட்ட காயங்களையும் உங்களிடம் பகிர்ந்தால் தான்,  எங்கள் தடம் வழி பயணிக்கும் நீங்களும் நிதானமாய் அடியெடுத்து வைக்க உதவியாக இருக்கும். இக்கட்டுரைத்  தொடர் ஒரு கைகாட்டியாய் அமைய வேண்டும் என்பதே எங்கள் குழுவின் அவா!

சித்தர் வாக்குப் படி,  "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் "
எனும் உயரிய கூற்றின்படி,  நாங்கள் கண்டதை விண்டு வைக்கக் கொண்ட  முயற்சி இது! வாருங்கள் பயணிப்போம்!!!

முதல் பயணம் :

காவிரி, கொள்ளிடம் எனும் இருபெரும்  சமுத்திர நிகர் ஆறுகளைப்  பெற்றிருக்கும்  திருச்சியிலிருந்து ஆரம்பிப்போம்!

"உத்தமசீலி" -

பலமுறை நம் குழுவினர் இவ்வழியே பயணித்துள்ளோம், இப்பெயரைக் கேட்கும் பொழுது, ஏதோ ஒரு உறுத்தல்,  உந்துதல்! காரணம்,  பராந்தகரின் கடைசிப்  பிள்ளை "உத்தமசீலி "  பெயரில் கிடைக்கும் கல்வெட்டுகள் மிகச்சொற்பம்;  மேலும், வீரபாண்டியன் இவரைக்  கொன்றுதான், "சோழன் தலை கொண்ட பாண்டியன் " எனும் பெருமை பூண்டான் என்ற  வரலாற்றுச்  சான்றோர்களின் கருத்து வேறு!  இவர் நேரடியாய் நிவந்தம் கொடுத்த கோவில்கள் சில மட்டுமே (கண்டியூர், திருவிடைமருதூர், குற்றாலம்) . வேறு எங்கிலும் இம்மன்னரின் பெயரைக் காண இயலவில்லை! ஆகவே,  இயல்பாகவே ஒரு ஆர்வம் இவ்வூரின் மேல் !  ஒரு நல்ல நாள் பார்த்து (விடுமுறை நாள்)பயணிக்க யத்தனித்தோம்!  அந்த நாளும் வந்தது!

கல்லணையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் சுமார் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த ஊர் !  சென்ற முறைசென்ற பொழுது தெளிவாய் தெரிந்த பெயர்ப்பலகை, இம்முறை ;லோக்கல்'  ஜாதிகட்சி 'போஸ்டர்' உபயோகத்தால் முழுவதும் மறைந்துவிட்டது! சந்தேகத்தின் பெயரில்,  இருசக்கர வாகனத்தை நிறுத்தி,  அந்த போஸ்டரை சிறிது கிழிக்க முற்பட்டோம்! அவ்வளவுதான் தாமதம்!   ஓடி வந்துவிட்டனர்  அந்த 'போஸ்டர்' ஒட்டிய சிங்கங்கள், தடித்த  வார்த்தைகளால் சப்தமிட்டுக்கொண்டே !


ஒருவாறு பேசி சமாளித்து,  பின் அவர்களிடமே விசாரித்தோம்!  என்ன விசாரிப்பது என்று தெரியாமல் முழித்து,  பொத்தாம்பொதுவாய் "சிவன் கோவில் ஏதும் உள்ளதா தல இங்கே!?" அப்டின்னு கேட்டோம்!  பின் அதிலுள்ள பெரியவர், 'கிழக்கு பக்கம் செல்லுங்கள்; பழைய சிவன் கோவில் இருக்கும்! பூட்டி இருக்கும், வெளிய இருந்து சாமி கும்பிட்டு வந்துருங்க தம்பிகளா' ன்னு சொல்லிக்கொண்டே  கிளம்பிவிட்டார்!
கிட்டத்தட்ட பன்னிரண்டு நபர்களை விசாரித்து கோயிலை வந்தடைந்தோம்! வெளியிலிருந்து பார்த்த பொழுது கோயில் கோபுரம் தெரிந்தது!


தற்கால வடிவமைப்பு மாதிரி தெரியவும் அயர்ச்சி வந்தது!  பின் நா வரண்டு தாகம் எடுத்தது ! அருகேயுள்ள வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடிக்கும் சாக்கில், வீட்டில் உள்ள பெரிய அத்தாச்சியிடம் பேச்சுக் கொடுத்தோம்! அப்பொழுதுதான் தெரிந்தது, நாங்கள் பார்த்ததுதான் பழைய கோவில் என்று!  தண்ணீர் கேட்டவனுக்கு ஐஸ்மோர் கிடைச்ச மாதிரி, கோவில் சாவியும் அவர் வீட்டில் தான் இருந்தது.   மகிழ்வுடன் நம் குழுவின் நோக்கத்தையும்,  சுயஅறிமுகத்தையும் தெரிவித்து சாவியை வாங்கினோம்!
அங்கே சென்றால் அழகிய கற்றளி!  சிறப்பானதாய் இருந்திருக்கும் ஒருகாலத்தில்!  புள்ளமங்கை கோவிலை ஒத்த அமைப்பு,  அழகிய பட்டி, குமுதம், வேதிகை!



தொல்லியல்துறை எடுத்து வேலைபார்த்த(😏) அடையாளமாய் சுவர்களில் எண் இருந்தது,  கோவிலைச்  சுற்றியுள்ள சிறிய பலகங்களில்  இராமாயண, சிவபுராண சிற்பங்கள் ; 95% அழிந்துவிட்டது! மீதியும் அதிவிரைவில் அழிந்துவிடும்! இறைவனின் திருப்பெயர் கைலாசநாதர், இப்பெயர் புதிதாக வைத்த பலகையில் இருந்தது!  இதுதான் உண்மையான பெயரா, இல்லை புனைப்பெயரா என்று தெரியவில்லை! கல்வெட்டுகள் தேடியபோது, அதற்கான அறிகுறி ஏதும் இல்லை, அந்த அளவிற்கு சிறப்பாய் பூச்சு வேலை இருந்தது! இருந்தாலும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் தேடினோம், தெற்குப்புர பட்டியில் ஸ்வதி.. என்ற வாக்கியம் தெரிந்தது,மனம் குதூகலித்தது,  மகிழ்ச்சியில் மீண்டும் அத்தாச்சியிடம் சென்று இரண்டு வாளி நிறைய நீர் நிரப்பிக் கொண்டு வந்தோம். தேங்காய் நாரும் கொடுத்தார்,

பின் கிட்டத்தட்ட 1/2 மணிநேரம் போராடி,  தேய்த்ததில் "ஸ்வதிஸ்ரீ விக்கிரம சோழ... யாண்... " இது மட்டும் தான் கிடைத்தது (யுரேகா, யுரேகா)



இக்கோவிலின் பண்டைய சிறப்பு என்னவோ!  அவ்வரசகுமரன் பெயரில்தான் இன்றும் வழங்கி வருகிறது!
கல்வெட்டுகள் முழுதும்  கிடைத்திருந்தால் ஒருக்கால்,  சில புதிர்களுக்கு விடையாய் அமைந்திருக்கும்!  மதியம் 12 ஆனது, அத்தாச்சிக்கு மனதார நன்றி கூறிப்  புறப்பட்ட போது,  'அருகே பெருமாள் கோவில் உள்ளது அங்கும் செல்லுங்கள்' என்றார். நன்றி கூறி அடுத்த கோவிலை நோக்கிப்  பயணித்தோம்!


வழக்கம்போல் நடை சாத்தியிருந்தது,  அருகே விசாரித்து கெஞ்சிக் கூத்தாடி அர்ச்சகரை அழைத்து வந்து திறந்தோம்.  பெருமாள் நின்ற நிலையில் எங்களுக்குக் காட்சியளித்தார்!

கோவில் முழுக்க கல்வெட்டுகள் நிறைந்திருக்க வேண்டும், தற்சமயம் முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டு ஒன்று மட்டுமே சிக்கியது!  கோவில் அடித்தளத்திலிருந்து சுமார் 5 அடி சிமென்ட்டால் உயரம் எழுப்பியுள்ளனர்,  பாதித்  தகவல்கள் உள்ளே நிம்மதியாய் உறங்குகின்றன !

ஏக்கப்பெருமூச்சுடன் தரிசித்துவிட்டுக், கிளம்பினோம்!
இன்றைய தேடலில் ஏதும் பெரிதாய் மாட்டவில்லை என்று ஏங்கியபோது, அர்ச்சகர்  வரலாற்றுப் பொக்கிஷமான  ஒரு கோவிலுக்கு செல்லும் வழியைக் கூறிச்  சென்றார்!
ஆம்! அவ்வூரின் பழைய பெயர் "உத்தமசீலி சதுர்வேதி மங்கலம் "
சிறிது இடைவெளி கழித்து பயணிப்போம் வாருங்கள்!

(தொடரும்)

Friday, July 21, 2017

சுந்தரசோழபாண்டியனின் சேரமங்கலம் வட்டெழுத்துக் கல்வெட்டுகள்

இராசேந்திரசோழனின் மகன்களில் ஒருவன் பாண்டிநாட்டு
ஆட்சிப்பொறுப்பில் அமர்த்தப்படுகிறான். அவனுடைய கல்வெட்டுகள் இரண்டு பற்றிய ஒரு கட்டுரை.


சுந்தரசோழபாண்டியனின் சேரமங்கலம் வட்டெழுத்துக் கல்வெட்டுகள்


முன்னுரை


      திருவாங்கூர் தொல்லியல் வரிசை என்னும் கல்வெட்டியல் நூலைப் படித்துக்கொண்டிருக்கையில், இரு வட்டெழுத்துக்கல்வெட்டுகள் கருத்தை ஈர்த்தன. திருவாங்கூர் அரசின்கீழ் பத்மநாபபுரம் கோட்டத்தில் அமையும் இரணியல் வட்டத்தில் அமைந்துள்ளது சேரமங்கலம் என்னும் சிற்றூர். அங்குள்ள விண்ணகரத்தில் கோயிலின் அதிட்டானப்பகுதியில் உள்ள இரு கல்வெட்டுகள் பற்றிய செய்திகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.


சேரமங்கலம் விண்ணகரம்

சேரமங்கலம் விண்ணகரக் கோயில் கருவறை அதிட்டானப் பகுதியில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இரண்டும் சடையவர்மன் சுந்தரசோழ பாண்டியனின் ஆட்சிக்காலத்தவை.


சுந்தரசோழபாண்டியன்


      கங்கையும் கடாரமும் கொண்ட முதலாம் இராசேந்திரனுக்கு மூன்று ஆண்மக்கள்.  இராசாதிராசன், இராசேந்திரன், வீரராசேந்திரன் ஆகியோர். இராசேந்திரனின் மறைவுக்குப் பிறகு இம்மூவரும் ஒருவருக்குப் பின் ஒருவராகப் பட்டத்துக்குவந்து ஆட்சி செய்தார்கள். இராசேந்திரன் இறப்பதற்கு முன்னரே, பாண்டி மண்டலத்தைக் காக்கும் பொறுப்பை ஓர் இளவரசனுக்குக் கொடுத்திருந்தான். அவன், சடையவர்மன் சுந்தரசோழ பாண்டியன் என்னும் பெயரோடு மதுரையினின்றும் அரசு புரிந்துவந்தான். இந்தச் சுந்தரசோழன், மேலே குறிப்பிட்ட மக்களில் ஒருவனா அன்றி வேறானவனா என்பது விளங்கவில்லை என்று டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். இவர்களேயன்றி இராசேந்திரனுக்கு வேறு ஆண்மக்களும் இர்ருந்தனர் என அவர் கூறுவதிலிருந்து இந்த இளவரசர்களில் ஒருவனாகச் சுந்தரசோழபாண்டியன் இருக்கக்கூடும். ஆக, ஒரு சோழ இளவரசன், பாண்டிய நாட்டை ஆளூம் பொறுப்பைப் பெற்றான் என்பது தெளிவு. அவன் இயற்பெயர் சுந்தரசோழனாயிருக்கக் கூடும். பாண்டிய நாட்டு மக்களுக்குத் தம் அரசன் ஒரு பாண்டியனாக இருக்கிறான் என்ற எண்ணத்தில் உள்ளத்தளவில் ஒரு பாதுகாப்பையும், அணுக்கத்தையும் அளிக்கவேண்டும் என்ற உளவியல் அடிப்படையில், அந்த இளவரசனுக்குப் “பாண்டியன்”  என்னும் அடைமொழியைத் தந்ததோடல்லாமல் பாண்டிய மன்னர்களில் பட்டப்பெயர்களில் ஒன்றான ”சடையவர்மன்” என்னும் பெயரையும் தந்து  சோழரின் மேலாண்மை தொடர்கிறது (ஜடாவர்மன், ஜடிலவர்மன் ஆகியன வடமொழி ஒலிப்பில் உள்ள பெயர்கள்). முதற் சோழபாண்டியன் இவனே.

முதல் கல்வெட்டு


முதல் கல்வெட்டு, சடையவர்மன் சுந்தரசோழ்பாண்டியனின் பத்தொன்பதாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டது. நீண்ட வரிகள் மூன்று கொண்டது. கல்வெட்டின் பாடம் கீழ் வருமாறு:


கல்வெட்டுப்பாடம்


1    வஸ்திஸ்ரீ கோச்சடையவன்மரான ஸ்ரீசுந்தரசோழபாண்டிய தேவர்க்கு   

யாண்டு பத்தொன்பதாவது சோழமண்டலத்தில் அருமொழிதேவ  வள

(நா)ட்டு புறங்


2 கரம்பை நாட்டு முக்கரையான மும்முடிசோழபுரத்து இருக்கு(ம்)   சங்கரபாடியான் கழனி (வெண்ணியேன்) றம்பி  திருவொற்றைச் சேவக மாயலட்டியேன் இராசராச தெ(ன்)னாட்டு சேரமங்கலத்து தேவர் தென்திருவரங்கமுடையார்(க்)குச்


3   சந்திராதித்தவல் நின்றெரிய வைச்ச தராவிளக்கு வெள்ளிக்கோலால் நிறை

அறுபது இவ்விளக்கு திருவொற்றைச் சேவகன் என்பது சந்திராதித்தவல் நின்றெரியும்படித் திருவொற்றை சேவக மாயலட்டி வைச்ச திருநந்தாவிளக்கு


கல்வெட்டுச் செய்திகள்


கொடையும் கொடையாளியும்:

சேரமங்கலத்தில் இருக்கும் விண்ணகரக் கோயிலுக்கு, நிலையாக எரியும் நந்தாவிளக்கு கொடையாக அளிக்கப்படுகிறது. கொடையாளி திருவொற்றைச் சேவக மாயலட்டி என்பவன். இவனுடைய இயற்பெயர் கொடுக்கப்படவில்லை. ஆனால், இவன் சோழமண்டலத்தைச் சேர்ந்த சங்கரபாடியான் கழனி வெண்ணி என்பவனின் தம்பியாவான். அண்ணனும் தம்பியும் எண்ணெய் வணிகச் செட்டிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள். கொடைப்பொருள் நின்றெரியும் நந்தாவிளக்கு. இவ்விளக்கு, தராவிளக்கு என்னும் வகையைச் சேர்ந்தது. தரா என்பது செம்பும் காரீயமும் சேர்ந்த உலோகக்கலவை. எனவே, தராவிளக்கு, இந்த உலோகக் கலவையில் செய்யப்பட்ட விளக்காகும்.

சோழப் பேரரசில் இருந்த நாட்டுப்பிரிவுகள்

கல்வெட்டில் இரண்டு நாட்டுப்பிரிவுகள் குறிப்பிடபெறுகின்றன. கொடையாளி சோழமண்டலத்து அருமொழிதேவ வளநாட்டில் புறங்கரம்பை நாட்டைச் சேர்ந்தவன். புறங்கரம்பை நாடு, தற்போதுள்ள மன்னார்குடிக்குத் தெற்கும், பட்டுக்கோடைக்குச் சற்று கிழக்கிலும் அமைந்த ஒரு பகுதி எனதெரிகிறது. சோழர் ஆட்சியின்கீழ் இருந்த மலைமண்டலத்துச் சேரமங்கலம் இராசராச தென்னாட்டைச் சேர்ந்திருந்தது.


சோழர் சமுதாயத்தில் தொழில் மற்றும் பணி

சோழர் ஆட்சியில் வணிகத்தில் ஈடுபட்ட செட்டிகள் இருந்துள்ளனர். இவர்கள், ஐந்நூற்றுவர் என்னும் வணிகக் கூட்டமைப்பின் உறுப்பினர் குழு ஆவர். சங்கரபாடி என்பது அக்காலத்தில் இருந்த எண்ணெய் வணிகக் குழுவினைக் குறிக்கும். மாயிலட்டி என்பது செட்டிகளுக்குக் கொடுக்கப்படும் ஒரு பட்டப்பெயராகும். வணிகத்தில் சிறப்புப் பெயரைப் பெற்ற கொடையாளி, வணிகத்தில் ஈடுபடவில்லை எனத் தெரிகிறது. சோழப்படையில் பணியாற்றியவன் என்பதை “ஒற்றைச்சேவகன்”  என்னும் தொடர் சுட்டுகிறது. ”ஒற்றைச்சேவகர்” என்னுன் இராணுவபெயர், பாண்டியர் கல்வெட்டுகளிலும் (மாறன் சடையன், வீரபாண்டியன் ஆகியோர் கல்வெட்டுகள்) காணப்படுகிறது. ஒற்றைச்சேவகர் என்னும் தொடர் ஒற்றாடல் பணியில் ஈடுபட்ட படைவீரர்களைக் குறிப்பதாகக் கொண்டால், கல்வெட்டில் அத்தொடர் ”ஒற்றச் சேவகன்”  என்றோ அல்லது “ஒற்றுச்சேவகன்” என்றோ குறிப்பிடப்படவேண்டும். ஆனால், கல்வெட்டில் “ஒற்றைச்சேவகன்” என்று இருப்பதால் ஒற்றாடலோடு தொடர்பு படுத்த இயலாது.


(கட்டுரை ஆசிரியர் குறிப்பு :  ஒற்றைச்சேவகர் பற்றிய ஒரு குறிப்பு, தொல்லியல் துறையின் 1909-ஆம் ஆண்டறிக்கையில் காணப்படுகிறது. அக்குறிப்பின்படி, [“எபிகிராஃபியா இண்டிகா”  தொகுதி 7-பக்கம் 141 ] முதலாம் பராந்தகனின் 33-ஆம் ஆட்சியாண்டில் “மலையாண ஒற்றைச்சேவகர்” என்னும் பெயரில் ஒரு சோழப்படைப் பிரிவு [REGIMENT] இருந்துள்ளதாகவும், அப்படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்தவன் முதலாம் பராந்தகனின் புதல்வர்களில் ஒருவனான “அரிகுல கேசரி” ஆவான் என்பதாகவும் செய்தி உள்ளது. எனவே, மேற்படி கல்வெட்டில் குறிப்பிடப்படும் கொடையாளி, முதலாம் பராந்தகன் காலம் முதல் சுந்தர சோழபாண்டியன் காலம் வரை இயங்கிவந்த “மலையாண ஒற்றைச்சேவகர்” படையைச் சேர்ந்தவன் என்று புலனாகிறது. முதலாம் பராந்தகனுக்கு உத்தம சீலி என்றொரு மகனும் உண்டு. உத்தமசீலி, அரிகுலகேசரி ஆகிய இரு இளவரசர்களும் தனித்தனியே அரசபதவியில் இருந்து ஆட்சி செய்யவில்லை என்பதும், அதன் காரணமாகவே திருவாலங்காட்டுச் செப்பேட்டில் சோழ அரசரின் குடி வழியில் [GENEALOGY] இருவர் பெயரும் விலக்கப்பட்டுள்ளன என்பதும் 1909-ஆம் ஆண்டறிக்கை தரும் கூடுதல் செய்தியாகும்.)


சுசீந்திரம் கோயில் கல்வெட்டுகளிலும் சேனாபதி, படைத்தலைவர், தண்டநாயகன் ஆகிய இராணுவப் பதவிப் பெயர்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டில் குறிக்கப்படும், கொடையாளியின் தமையனான கழனி வெண்ணி என்பான் சுசீந்திரம் விண்ணகரக் கோயில் கல்வெட்டிலும் குறிக்கப்பெறுகிறான். அக்கல்வெட்டும் இதே சுந்தரசோழ பாண்டியனின் காலத்தது. மேற்படி கழனி வெண்ணி என்பான், அக்கல்வெட்டில், மதுராந்தகப் பேரரையன் என்னும் சிறப்புப் பெயரில் குறிக்கப்பெறுகிறான். சோழ அரசில் உயர் அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பெறும் சிறப்புப் பெயர் “பேரரையன்”  என்பதாகும். குடித்தொழிலால் எண்ணெய் வணிகனாயினும் சோழ அரசில் கழனி வெண்ணி பெரும்பதவியிலிருந்தமை கருதத்தக்கது.

ஆள்கள் பெயரில் அரண்மனை, சிம்மாசனம், மண்டபம் மற்றும் கொடைப்பொருள்

அரண்மனை, மண்டபம், சிம்மாசனம் ஆகியவற்றுக்கு அரசர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதைக் கல்வெட்டுகளில் காண்கிறோம். அதுபோலவே, நிவந்தங்களுக்கும், கொடைப்பொருள்களுக்கும் அரசன் மற்றும் கொடையாளிகளின் பெயர் சூட்டப்படுவதுண்டு. எடுத்துக்காட்டாக, அவிநாசி சிவன் கோயிலின் சந்தி வழிபாட்டுக்கு தண்ணாயக்கன் கோட்டை (இன்றைய வழக்கில் டணாயக்கன் கோட்டை)த் தண்டநாயக்கன் சிதகரகண்டன் என்பவன்  அளித்த  நிவந்தம் அவன் பெயரால் சிதகரகண்டன் சந்தி என்று வழங்கிற்று. அதே கோயிலில், வீரபாண்டியன் திருவோலக்க மண்டபம் என்றொரு மண்டபம் இருந்துள்ளது.  இங்கே, சேரமங்கலக் கல்வெட்டில், கொடைப்பொருளான நந்தாவிளக்குக்கும் ஒரு பெயர் இடப்படுகிறது. இப்பெயர் கொடையாளியின் பெயரைக்கொண்டு, ”திருவொற்றைச்சேவகன்”  எனக் கல்வெட்டில் குறிக்கப்படுகிறது.

சோழர் காலத்தில் வழங்கிய நிறுத்தல் அளவை

சோழர் காலத்தில் செப்புத்திருமேனிகள், விளக்குகள், கலன்கள் ஆகியவற்றின் எடை கல்வெட்டுகளில் குறிக்கப்படும்போது “பலம்”  என்னும் அளவு காணப்படுகிறது. இக்கல்வெட்டில், கொடைப்பொருளான விளக்கின்  எடை அறுபது பலம் என்று குறிக்கப்படுகிறது. வெள்ளிக்கோல் என்னும் ஒரு வகை நிறுக்கும் கோல் பயன்பாட்டில் இருந்ததை அறிகிறோம்.


இரண்டாம் கல்வெட்டு


இக்கல்வெட்டு சுந்தரசோழபாண்டியனின் ஆறாவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டது. கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் சில முதுகுடி செந்தில் ஆயிரவதேவன் என்பானுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. அவன், அந்நிலங்களைக்கொண்டு  ஈட்டும் வருவாயில் கடமை என்னும் நிலவரியினைச் செலுத்தவேண்டும். இந்தப் பொறுப்பிலிருந்து அவன் விலகினால் அதற்குப் புணை ஏற்பவன் (SURETY) சேரமங்கலத்தைச் சேர்ந்த மன்றாடியான இறையான் ஆச்சன் என்பவன். தவறினால், அரசனுக்கு ஆறு கழஞ்சுப் பொன் தண்டமாகச் செலுத்தவேண்டும். இப்படி உடன்பட்டு இருவரும் கையெழுத்திட்டு ஒப்பந்த ஆவணத்தை ஊர்ச் சபையார்க்குக் கொடுக்கிறார்கள்.


கல்வெட்டின் பாடம்  

1 ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடையவன்மரான ஸ்ரீசுந்தரசோழ பாண்டியதேவர்(க்)கு யாண்டு ஆறாவது தென் திருவரங்கமுடையார் கோவிலில் முதுகுடி செந்தில் ஆயிரவ

2  (தே)வன் மன்றுமாறி போகில் தன்கட(மை) ஆக இறை புணைபடுவேன் இவ்வூர் மன்றாடி

3  இறையான் ஆச்சன்னேன் இப்படி அன்றென்(எ)ல் அன்றாடு கோவினுக்கு அறுகழ(ஞ்)சு பொன் படுவொதாக

4 ஒட்டி தீட்டு செலுத்துவதாக ஒட்டி கைய்த்தீட்டுக் குடுத்தோம் இவ்விருவோம் சேரமங்கலத்து ஸபையார்க்கு

5   இப்படி அறிவேன்


இக்கல்வெட்டில் ”மன்றுமாறி போகில்”  என்னும் தொடர் குறிப்பிடத்தக்கது. மன்று என்பது ஊர்ப்பொதுவிடம். வழக்குகள் முறையிடப்படும் இடமாகவும், தீர்க்கப்படும் இடமாகவும் இது அமையும். ”மன்றுமாறி போகில்” என்பது, ”மன்றில் ஒப்புக்கொண்டதற்கு மாறாக  நடந்துகொண்டால்” எனப் பொருள் தரும் எனலாம்.  தீட்டு என்பது ஒப்பந்த ஆவணத்தைக் குறிக்கும். கைய்த்தீட்டு என்பது கையெழுத்திடுவதைக் குறிக்கும். ஒட்டி என்பது உடன்படுவது என்னும் பொருள் கொண்டது. ”அன்றாடு கோ”  என்னும் தொடர், கல்வெட்டு சுட்டும் காலத்தில் ஆட்சி செய்கின்ற அரசன் என்று பொருள் தரும்.


தென் திருவரங்கமுடையார் கோயில்


சேரமங்கலம் கல்வெட்டில், சேரமங்கலத்தில் உள்ள விண்ணகரக் கோயில் (பெருமாள் கோயில்), தென் திருவரங்கம் என்று குறிக்கப்படுகிறது. பக்திப் பெருக்கு நிறைந்த அடியார்களாக இருக்கும் மக்கள், பெருங்கோயில்களின் பெருமையின் தாக்கத்தால் தாம் வாழுகின்ற ஊரில் எழுப்பப்பட்டுள்ள கோயிலையும் பெருமைப் படுத்தும் உணர்வோடு, தம் ஊர்க்கோயிலை அப்பெருங்கோயிலின் ஈடாகவோ அன்றிச் சாயலாகவோ கருதி அதன் பெயரிலே வழங்குவர். எனவேதான், தென்னாட்டில் பல “தென்காசி”களும், தமிழகத்தில் பல ”தென் திருப்பதி”களும் காணப்படுகின்றன. திருவரங்கமும் இவற்றோடு சேர்ந்ததே. சேரமங்கலத்துக் கல்வெட்டில், அவ்வூர் விண்ணகரக்கோயில் “தென் திருவரங்கமுடையார் கோவில்”  எனக் குறிப்பிடப்படுவது இவ்வகை மரபில் அமைந்ததாக இருக்கவேண்டும். 



குறிப்பு :  நூலில் கல்வெட்டுப்படம் கிடைக்கவில்லை. கல்வெட்டுப் படம் இல்லாமல் கட்டுரை முழுமை பெறவில்லை என்பதே கட்டுரை ஆசிரியரின்  மன ஓட்டம்.

எழுத்து:
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

(சோழர் வரலாற்று ஆய்வு சங்கம்)

Thursday, July 20, 2017

சிற்பங்களின் அடையாளம் - 8

                          சிற்பங்களை அடையாளம் காண்பதில் இன்று...                       

"பதஞ்சலி முனிவர்"  மற்றும்  "புலிக்கால் முனிவர்"

பதஞ்சலி முனிவர்..

இவரின் சரியான வரலாறு குறித்து தகவல் இல்லை.

ஆதிசேசனின் ரூபம் என்கிறார்கள். சிவ  நடனத்தைத் 
தரிசிப்பதற்காகத்  தில்லையில் பிறந்தார்.. யோக சூத்திரங்களை எழுதியவர் இவர் என்கிறார்கள்..

இறைவனின் நடனத்தை  அருகில் இருந்து பார்க்கும்
பாக்கியம் பெற்றவர்..

பாம்பு உடலும் மனிதத் தலையும் கொண்டவர்..

புலிக்கால் முனிவர்

இனி ஒரு கதை..

வழக்கமான நேரம் அது.. இன்னும் சிறிது நேரத்தில் 
பரமேச்வரனின்  நாட்டியம் ஆரம்பிக்க இருக்கின்றது. ஆனந்த சபையை தேவர்கள் தயார்ப் படுத்தினர். பூதகணங்கள் வாத்தியக்  கருவிகளைச்  சரிபார்த்தனர்.

நந்தி தேவருக்கோ சற்று அகந்தை..
பிரதோச காலத்தில் சிவன், தன் கொம்புகளுக்கிடையே
நடனமாடினாரே.. அது என்ன ஒரு அற்புதம்..
தன் கொம்புகளை நினைத்து கர்வம் கொண்டார் நந்தி.

புலிக்கால் முனிவருக்கும் ஒரு அகந்தை..
ஆகா.. நம் கால் புலியின் கால் போன்று உள்ளதே..
நாமும்  நடனம்  ஆடமுடியுமே.. சிவன் அருளிய
புலிக்கால் அல்லவா இது..
தன் காலை நினைத்து புலிக்கால் முனிவருக்கும் அகந்தை.

இருவரும் பதஞ்சலி முனிவரைப்  பார்த்தனர். .
'என் கொம்புகளால் எனக்கு பெருமை' என்றார் நந்திதேவர்.
'என் கால்களால் எனக்கு பெருமை' என்றார் புலிக்கால்முனிவர்..

'உன் பாம்பு உடலால் உனக்கு ஒரு பயனும் இல்லை' 
என்று பதஞ்சலி முனிவரை இருவரும் பரிகாசம் செய்தனர்..

இதைக் கேட்ட.
பதஞ்சலிமுனிவரோ சற்று வாடித்தான் போனார்.

அனைத்தும் அறிந்தவராய் வந்து சேர்ந்தார் பரமேஷ்வரன்.

பதஞ்சலி முனிவரை நோக்கி..

ஐயா பதஞ்சலியாரே...
இன்று எமது ஆட்டத்திற்குப்  பதம் எழுத போகிறவர் தாங்கள்தான் .. " கொம்பு " மற்றும் " கால் " இல்லாதாவாறு
பதம் எழுதுங்கள் என்றார்..

அதாவது ஒற்றைச்சுழி இரட்டைச்சுழியான "கொம்பு"
இல்லாமலும்,  துணைக்  "கால்" இல்லாமலும் பதம்
எழுதவேண்டும்..

இதைக்கேட்ட நந்தியும், புலிக்காலரும் பேரதிர்ச்சி அடைந்தனர்.
பெரும்பாக்கியம் பெற்ற பதஞ்சலி முனிவரோ..
" கொம்பு மற்றும் கால் " இல்லாமல் பதம் எழுதி ஜதி சொல்ல .. பரமதிவ்வயமாய் ஆடவல்லானின் ஆட்டம்
அரங்கேறியது..

கொம்பும் .. காலும்.. இல்லாத பதஞ்சலி முனிவர் எழுதிய
பதம் இதுதான்..

“அநந்த நவரத்ன விலசத் கடக கிங்கிணி சலஞ்சல சலஞ்சல அரவம்!
முந்த விதி ஹஸ்தக தமத்தல லய த்வநி திமித்திமி நர்த்தந பதம்!
சகுந்தரத பர்ஹிரத நந்திமுக தந்திமுக ப்ருங்கிரிடிஸங்க நிகடம்!
ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ..!

பாடலை வாசித்துப் பாருங்கள்..
பரமனின் ஆட்டம் உங்கள் கண்முன்..

எழுத்து : மாரிராஜன் 

Tuesday, July 18, 2017

சிற்பங்களின் அடையாளம் - 7 கங்காதரர்




சிற்பங்களை அடையாளம் காண்பதில் இன்று......

" கங்காதரர் "

சிவன், கங்கை நதியைத்  தன் சடா முடியில் ஏந்திய
வடிவம்..

இதே சிவன் உமையவளுடன் இருந்தால்..

சிவகங்காதாரர் என்பர் !


பகீரதன் என்னும் மன்னன்.  இவனது முன்னோர்கள் முனிவர் ஒருவரின் சாபத்தால் சாம்பலாகிப்  போனார்கள்.
அவர்களது ஆத்மா சாந்தியடைய, தேவ நதியான கங்கை
நீரால் நற்பேறு பெற வேண்டும்.

பகீரதன் கடும் தவம் புரிந்து விண்ணுலக  நதியான கங்கையை பூமிக்கு அழைத்தான். அவனது தவத்தின்
வீரியத்தால், கங்கையும் பூமியை நோக்கிப்  பாய்ந்தாள்.

ஆகா.. கங்கையின் வேகம் பல மடங்கு அபரிதமானதே.!
அப்படியே பூமியில் பாய்ந்தால், பிரளயப்  பெரு வெள்ளத்தால் பூமி முழுவதும் மூழ்கிவிடுமே !

பார்த்தார் பரமேஷ்வரன்.. அப்படியே கங்கா தேவியைத் 
தன் சடாமுடியில் ஏந்திக்கொண்டார். 

கங்கையின் வேகத்தை குறைத்த ஈசன், பகீரதன் வேண்டுகோளுக்கிணங்க, சற்று மெதுவாய் கங்கையை
விடுவித்தார். கங்கை நதியும் பூமியில் பாய்ந்தது.
பகீரதனும் தன் பெற்றோருக்குரிய  நீத்தார்  கடனைச்  செய்து முடித்தார்..

சிவ பெருமான்,  கங்கை நதியைத்  தன் தலை முடியில்
ஏந்திய வடிவமே கங்காதாரர் வடிவம்..

இங்குதான்  ஆரம்பித்தது ஒரு பிரச்சனை..
 உமையவளிடன் ஊடல்...  என்னதான் அம்பிகையாய்
இருந்தாலும் அவளும் ஒரு பெண்தானே!

நான் ஒருத்தி இருக்க,  நீ எப்படி இன்னொரு பெண்ணைத் 
தலையில் ஏந்தலாம்..?

இப்படித்தான் ஆரம்பம் ஆனது..
சிவனுக்கும் பார்வதிக்குமான ஊடல்...

இதை வைத்து நம் சோழ சிற்பிகள் செதுக்கிய சிற்பங்கள்
ஒவ்வொன்றும், உணர்வுகளின் வெளிப்பாடு..

கங்காதரர், தஞ்சைப் பெரிய கோவிலில் !
இது தஞ்சைப்  பெரியகோவில் கங்காதாரர்..

நான்கு கரங்கள் கொண்ட சிவன் ..
பின் இரு கரங்களால் மான் மழு ஏந்தியும்.. முன் இடக்கரத்தை தொடைமீது ஏந்தியும்,  முன் வலக்கரத்தை
தலைக்கு மேல் உயர்த்தி தன் சடை முடியை விரிக்கிறார்.
வானிலிருந்து கூப்பிய கரங்களுடன் ..பாதி பெண்ணாகவும் மீதி நீர்த்திவலைகளாகவும் கங்கா தேவி
சிவனின் சடாமுடியில் இறங்குகிறாள்..

அற்புதமான சிற்பம் இது.
உமையவள் அருகே இல்லாத கங்காதாரர் வடிவம் இது.

பல்லவர் கால கங்காதரர் 
இது பல்லவர் கால கங்காதாரர்.

திருச்சி மலைக்கோட்டையில் உள்ள குடவரை புடைப்புச்
சிற்பம்..

விண்ணிலிருந்து இறங்கும் கங்கையைத்  தன் விரிசடையால் பரமன் ஏந்துகிறார்.. 

அவரது வலக்காலை பூதகணம் ஒன்று தாங்குகிறது.
இடது கால் தரையில் அழுத்தமாய் பதிந்துள்ளது.

சுற்றிலும் அடியார்கள் ஈசனை வணங்குகின்றனர்.


ஆகா.. என்ன ஒரு அருமையான படைப்பு...

தன்வலது கையால் தன் இரு முடிக்கற்றைகளை   சிவன்
நீட்டுகிறார். அதில் கங்கா தேவி இறங்குகிறாள்..

இதை கண்டு கடும் கோபம் கொண்ட பார்வதியோ..
அவ்விடத்தை விட்டு அகல முயற்சிக்கிறார்..
 'என்ன ஒரு அநியாயம். நான் இருக்க,  மற்றொரு பெண்ணைக்  கரத்தில் ஏந்துவதா?'  என்பது பார்வதியின்
நிலைப்பாடு.

 அவ்விடத்தை விட்டு அகல்வது  போல் உமையவள்
தன் ஒரு கால் எடுத்து நகரும் தோரணை, எவ்வளவு
அழகாக செதுக்கப்பட்டுள்ளது  பாருங்கள்..

பதறிப்போனார் பரமேஷ்வரன் !
தன் ஒரு கரத்தால் உமையின் இடுப்பை அணைத்து..
மறு கரத்தால் அவர்  தாடையைப்  பிடித்து அவரை
ஆசுவாசப்படுத்துகிறார்..

 " அதெல்லாம் முடியாது.. என்னை விடுய்யா..."
    என்பது போல் பார்வதியின் முக பாவம்.. அவர் முகத்தில் அந்த சிணுங்கல்,  பொய்க்க்கோகோபம் ! 

" அப்படியெல்லாம் ஒண்ணுமில்லம்மா "
 என்பது போல் சிவனின் முக பாவம். அவர் முகத்திலோ
ஒரு கசிவு,  உமையவள் மேல் கொண்ட பாசம் அப்பட்டமாய் தெரிகிறது..

சிவனின் முகத்தையும்,  பார்வதியின் முகத்தையும்
உற்றுப் பாருங்கள்.. 

ஒரு நீண்ட வாக்குவாதத்தின் ஆரம்பமாய் இருக்கலாம் !

கொடும்பாளூர் பாணி கங்காதரர் 

இது கொடும்பாளூர் காட்சி..

முகத்தை தூக்கி வைத்துக்கொண்ட. சக்தி..

கெஞ்சுகிறார் சிவன்..

அது சரி., 
அகில உலகத்தை இரட்சித்து காக்கும்..
 சாட்சாத் பரமேஷ்வரனாய் இருந்தாலும்.....

எழுத்து : மாரிராஜன்