Wednesday, May 31, 2017

சிற்பங்களின் அடையாளம் : 4.ஏகபாதமூர்த்தி

சிற்பங்களை அடையாளம் காண்பதில் இன்று...

                           " ஏகபாதமூர்த்தி "

ஊழிக்காலம் அது.. பிரளயம் தோன்றும் சூழல்..
படைக்கப்பட்டவை அனைத்தும் புறப்பட்ட இடத்திற்கே
வந்து சேரவேண்டும்.. யுகமாறுதல் ஏற்படும் நேரம்
இது..

ஊழிக்காலத்தில் அழியாமல் இருப்பவர் சிவன் ஒருவரே.
அனைத்து ஜீவன்களும், தேவர்கள் உட்பட, சிவனிடமே
ஐக்கியமாக வேண்டும்..

படைப்பு கடவுளான பிரம்மனும்,  காக்கும் கடவுளான விஷ்ணுவும்,  சிவனின் இருபக்கங்களில் ஐக்கியம் ஆனைர்கள்...

ஒற்றைக்கால் கொண்டு, பிரபஞ்சத்தின் தூணாக,
பிரம்மாவையும் விஷ்னுவையும் தன் இரு பக்கங்களில்
ஏந்திக்கொண்ட சிவ ரூபமே...

                             " ஏகபாதமூர்த்தி "



இவ்வுலகில் தோன்றும் ஒவ்வொறு ஜீவனும்,
இறுதியில் பரம்பொருளிடம் அடைக்கலம் ஆக வேண்டும்
என்பதே... இந்த சிவரூபத்தின் நோக்கமாகும்..

இதுதான் ஏகபாதமூர்த்தி ரூபம்..


ஒற்றைக்காலில் சிவன்.. இடுப்பின் வலப்பக்கம் பிரம்மா..
இடப்பக்கம் விஷ்ணு.. பிரம்மாவும்,  விஷ்ணுவும்
கரம் கூப்பிய நிலையிலே வடிக்கப்படுகிறார்கள்..

(எழுத்து : மாரிராஜன்)

Monday, May 29, 2017

சிற்பங்களின் அடையாளம் : 3. அர்த்தநாரீசுவரர்

 சிற்பங்களை அடையாளம் காண்பதில் இன்று......

ஆலயம்தோறும் இருக்கும் வடிவம். அனைவரையும்
கவரும் வடிவம்..

ஆணுக்குப்  பெண் இளைப்பில்லை.. ஆணும் பெண்ணும்
சமம் என்பதை உலக்கு உணர்த்திய...

                " அர்த்தநாரீசுவரர் " 

சிவபார்வதி என்றும், உமையொரு பங்கன் என்றும்,
மாதொரு பாகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

" நீலமேனி வாலிழை பாகத்தொருவன் " என ஐங்குறு நூறும்

" வேயுறு தோளி பங்கன் " என தேவார பதிகங்களும்....

                 அர்த்தநாரீஸ்வரர் தோன்றிய வரலாறுதான் என்ன..?                                                

 அர்த்த நாரீசுவரர் கதை...

அவர் பெயர் பிருங்கி.  நிறைந்த சிவ பக்தர். சிவனை மட்டுமே வழிபடுவேன் என்னும் எண்ணமுடையவர்.
சிவனை மட்டுமே வலம் வருவார்.. சிவ வடிவத்தையேச்
சுற்றிச்  சுற்றி வந்து வணங்குவார்..

இதை அவதானித்த அம்பாளுக்கோ கடும் கோபம்.
என்ன இவன்,  ஈசனையே வலம் வருகிறான். தன்னை
திரும்பிக்கூட பார்ப்பதில்லையே..தன்னை அவமதிக்கிறானோ.. என்று பார்வதியும் விசனமடைகிறார்.

சிவனின் பாதி உடம்பாகத்  தன்னைப்  புகுத்துகிறாள் அன்னை.
சிவபார்வதியாக,  அர்த்தநாரிஸ்வாக,  உமையொருபாகனாக,  உருவம் பெறுகிறார்..

பிருங்கி முனிவர் வந்தார். சிவனும் பார்வதியும் ஒன்றாக
இருப்பதை கண்டார். இதில் எப்படி சிவனை மட்டும்
வலம் வருவது ..?

சீரிய சிவபக்தர் அல்லவா பிருங்கி முனிவர். சற்றும்
தயக்கம் இல்லை... ஒரு வண்டு உருவம் எடுத்தார்.
இருவருக்கும் இடையில் துளையிட்டு, அந்த துளையின்
வழியே வண்டு ரூபத்தில் சிவனை மட்டும் வலம் வந்தார்.

கோபமுற்ற பார்வதியோ,  பிருங்கி முனிவரை  வலுவிழக்குமாறு சபிக்கிறார்..  வலுவிழந்த பிருங்கி முனிவர் நடக்கமுடியாத நிலையிலும்,  தன் நிலையிலிருந்து மாறவில்லை..

தன் பக்தனை ஆசிர்வதித்த சிவனும்,  பிருங்கிக்கு மூன்றாவது காலை அருளினார்..

இதனாலே பிருங்கி முனிவரை,  
மூன்று காலுடன்  படைப்பார்கள்..

                      இதுதான் அர்த்தநாரிஸ்வரர் தோன்றிய வரலாறு..                                                

பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் மூன்று அல்லது நான்கு
கரம் கொண்டு வடிக்கப்படுவர். அவசியம் நந்தி இருக்கும்.
ஒரு சில கோவில்களில் அபூர்வமாய் நந்தி இல்லாமல்
அர்த்தநாரி இருப்பார்.. 

நின்ற நிலையிலே அதிகம் காணப்படுகிறார்..
திருக்கண்டியூர் போன்ற ஒரு சில ஆலயங்களில்
அமர்ந்த நிலையில் இருக்கிறார்..     

                                           
இவர்தான் அர்த்தநாரீஸ்வரர் தோன்றக்  காரணமாய் இருந்த
பிருங்கி முனிவர்.. 

இவரை மூன்று கால்களுடன் படைப்பது வழக்கம்.                        

நாளை மற்றொரு சிற்பம்..


 (எழுத்து : மாரிராஜன்)

Thursday, May 25, 2017

சிற்பங்களின் அடையாளம் : 2. பிட்சாடனர்


பிட்சாடனர்


நேற்றைய பதிவில்,  தட்சிணாமூர்த்தியை அடையாளம்
கண்டோம்.. அதன் தொடர்ச்சியாக இன்று அறுபத்து நான்கு சிவ ரூபங்களில் ஒருவரான பிட்சாடனரை  
அடையாளம் காண்போம்...

பிட்சாடனர்  அநேக ஆலயங்களில் இருக்கிறார்..

சோழர்கல்வெட்டுகள் இவரை பிச்சைதேவர் என அழைக்கின்றன..

பிச்சாடானார் எப்படி இருப்பார்...
இப்படி இருப்பார்..



பிட்சாடனர்...

தாருகா வனம் அது..
மிகவும் சக்தி பெற்ற ரிசி முனிவர்களும், ரிசி மாதர்களும்
வாசம் செய்தனர்..

கடும் தவத்தாலும்,  வேள்வியாலும் அரும்பெரும் சக்திகளைப்  பெற்றனர். உலக இயக்கமே நம்மால்தான்
என்னும் செருக்கு கொண்டனர்.  தங்களையே படைத்த
இறைவனை மறந்தனர். தங்களுக்கு இணை யாருமில்லை
என்னும் கர்வம் கொண்டனர்..

பார்த்தார் சிவ பெருமான்.. இவர்களை நல்வழிப்  படுத்தி
சீர்படுத்த வேண்டுமே..இவர்கள் அகந்தையை அழித்து
இறையை உணர்த்த வேண்டுமே...

சிவபெருமான் எடுத்தார் பிஷாடனார் உருவம். சிவனின்
ஆணைப்படி பெருமாள் மோகினி உருவம் எடுத்தார்..

கட்டிளம் காளையாக பிச்சை எடுக்கும் ரூபத்தில் 
சிவனும்,  அழகு இளம் நங்கையாக மோகினி ரூபத்தில்
விஷ்ணுவும்,  தாருகா வனத்திற்குச் சென்றனர்..

பிச்சாடனார் அழகில் மயங்கிய ரிசிமாதர்கள், அவரை
பின் தொடர...

மோகினி ரூபத்தில் மயங்கிய ரிசிகள்,  பெருமாளை
பின் தொடர...

ரிசிகளின் சிந்தை முற்றிலும் தவறியது..அவர்களது அன்றைய பணிகள் பெரிதும்  பாதிக்கப்பட்டன..

ஒரு சாதரண  யாசகம் வேண்டும் பிச்சைக்காரர்,
தம் பத்தினிகளின் மனதைக்  கலைத்தானே...

கோபம் கொண்ட ரிசிகள்,  பிச்சாடனாரை அழித்து விட
முடிவுசெய்தனர்..

யாகம் ஒன்றை வளர்த்து,  அதிலிருந்து பல ஆயுதங்களைத் 
தோன்ற செய்து,  பிச்சாடனாரை நோக்கி ஏவினர்..

யாகத்திலிருந்து தோன்றிய, புலித்தோல் சிவனின் 
ஆடையானது. நாகமும், மானும் சிவனது ஆபரணமாகவும்,  உபகரணமாகவும் மாறியது.
யாகத்திலிருந்து தோன்றிய முயலகனை, சிவன் தன்
காலில் போட்டு மிதித்தார்.. 

ஆகா,  வந்தது பிச்சைக்காரன் அல்ல. அந்தப்  பரம்பொருளே
பிச்சாடானராக வந்துள்ளார் என ரிஷிகள் உணர்ந்தனர்.

'தங்களது சக்திக்கு  மேலே ஒன்று உள்ளது.அதுவே  பரமேச்வர சக்தி'  என ரிஷிகள் தெளிவுற்றனர். அவர்கள் அகந்தை அகன்றது.

இவ்வுலகில் உள்ள அனைத்திற்கும் மேலானது..
பரமேச்வரனே என்பதை உணர்த்தத்தான்..
பிச்சாடனார் வடிவம்..


பிச்சாடனாரின் அடையாளம்...

இவர் ஆடையில்லா மேனியராக,  சர்வ லட்சணங்களுடன்
அழகு சொருபியாய் இருப்பார்..

தலையில் ஜடாபாரம் அணிந்து, பிறைச்சந்திரனை சூடி,
இடுப்பில் சர்ப்பத்தைக்  கொண்டிருப்பார்.

பின் இரு கரங்களில் மயில் தோகை அல்லது சூலம்,
முன் ஒரு கரத்தில் மானைத் தொட்டவாறு அல்லது 
மானுக்கு புல் கொடுத்தவாறு,  மற்றொரு கரத்தில்
கபாலத்தால் ஆன பிச்சைப் பாத்திரம் ஏந்தியிருப்பார்.
காலில் அவசியம் பாதரட்சை அணிந்திருப்பார்.
காலடியில் பூத கணம் ஒன்று பிச்சைபாத்திரம் ஏந்தியிருக்கும்.. 

ரிசிமாதர்களும் காட்டப்பட்டிருப்பர்.

எத்தனையோ சிற்பங்களை நாம் பார்த்திருந்தாலும்,
பிச்சாடனார் போன்று ஒரு அழகான வதனத்தைக்  காண்பது
அரிது.. அந்த அழகுக்கு இணையேதுமில்லை.
.

இனி நீங்கள் கோவிலுக்குச்செல்லும்போது  பிச்சாடானாரை அடையாளம் காணுங்கள். பொறுமையாய்
உற்றுநோக்கி அவதானியுங்கள்...பார்க்கப்  பார்க்கப்  பரவசம்
ஏற்படும்..

அந்த அழகு வதனம்.. துள்ளும் மான், .பாத்திரம் ஏந்திய
குள்ள பூதம், சிவனின் அழகு.. ரிஷிமாதர்களின் சௌந்தர்யம்...  மொத்த சிற்பத்தின் நெளிவு.. சுழிவு..
பொறுமையாய் நன்கு அனுபவித்துப்  பாருங்கள்.


மேலும் ஒரு விடயம்..

பிச்சாடானாரை போலவே,  கங்காளமூர்த்தியும் இருப்பார்.
ஆனால் சில வேறுபாடுகள் உள்ளது...

கங்காளமூர்த்தி பற்றி மற்றொரு பதிவில்...


(எழுத்து : மாரிராஜன்) 

Wednesday, May 24, 2017

சிற்பங்களின் அடையாளம் : 1. தட்சிணாமூர்த்தி

சிற்பங்களின் அடையாளம் 

இப்போதெல்லாம் கோவிலுக்குச் செல்லும் வழிமுறை
மிகுந்த முன்னேற்றம் கண்டுவிட்டது..


முன்பெல்லாம் கோவிலுக்குச் சென்றால், சாமி கும்பிட்டு,கோவிலை வலம் வந்து,  சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து முடிந்தால் அர்ச்சனை ஒன்று செய்து,  வீடு திரும்புவோம். ஆனால் இன்றைய வழிமுறையோ முற்றிலும் மாறிவிட்டது.. 


நமது குழுக்களைப்போல் பல வாட்ஸ்அப் குழுக்களில்ப யணித்ததன் விளைவு, நம் நண்பர்களின் ஆலயபிரவேசத்தில் பலத்த மாற்றம்..


கல்வெட்டுகளை தேடுகிறார்கள். எழுத்துக் கூட்டி படிக்க முயல்கிறார்கள். சிற்பங்களை உற்று நோக்கி அடையாளம்   காண விரும்புகிறார்கள்..

இங்குதான் ஒரு தெளிவு தேவைப்படுகிறது..

விதவிதமாய்,  வகை வகையாய், காணப்படும் சிற்பங்கள் என்ன..? அவைகள் அல்லது அவர்கள் யார்?  என்ன நோக்கம்.? என்ன தத்துவம்?  எத்தனை வகையான சிவ வடிவங்கள்.? எப்படி பிரித்தறிவது.?


மேற்கண்ட வினாக்கள் அனைத்தும், ஒரு குழுவில் கோரிக்கையாக வைக்கப்பட்டது..!பல்லாயிரக்கணக்கான சிற்பங்களை அடையாளம் காணுவது சற்று சிரமம் என்றாலும்....

மிக முக்கியமான ஒரு சில சிற்பங்களை அடையாளம்
காணலாம். .


கோவிலில் காணப்படும் சிற்பங்களை அடையாளம் காணுவதே இந்த தொடர்பதிவுகளின் நோக்கம்.


இன்று தெட்சிணாமூர்த்தி....

1.தட்சிணாமூர்த்தி

அனைத்து பாடல் பெற்ற சிவாலயங்களிலும்,  கருவறையின் தென் சுவற்றில் வீற்றிருப்பார். அறுபத்து நான்கு சிவ வடிவங்களில் இவரும் ஒருவர்..
ஞானக்கடவுள் என்றும், குருபகவான் என்றும் இவரை அழைப்பார்கள்..

பிரம்மாவின் புதல்வர்கள் சனகாதி முனிவர்கள். இவர்கள் ஞானம் பெற சரியான குருவை தேடி அலைந்தார்கள்.இந்த சனகாதி முனிவர்களுக்கு ஞானம் கற்பிக்க. ஈசன் எடுத்த திருமேனிதான் தட்சினாமூர்த்தி..

விருட்சம் (ஆலமரம்) ஒன்றின் அடியில் பகவன் அமர்ந்துள்ளார். அவரின் வலதுகால் முயலகன் என்னும் அரக்கனை மிதித்தவாறு உள்ளது. அதாவது அபஸ்மரா என்னும் அறியாமையை மிதித்துள்ளார்..


அவரின் நான்கு கரங்கள். மேல் இருகரங்கள் உடுக்கை அல்லது சர்ப்பம்,  மற்றொன்றில் பற்றி எரியும் நெருப்பு. கீழ் ஒரு கரத்தில் ஓலைச்சுவடி மற்றொன்றில்,  சின் முத்திரை,காலடியில் அந்த நான்கு நான்கு சனகாதி முனிவர்களும் இருப்பர். சிவ சிற்பங்களில் நந்தி இருக்கும். இல்லாமலும்
இருக்கும்..


இதுதான் தட்சிணாமூர்த்தியின் அடிப்படை நிலையாகும்.

இவ்விரங்களை கொண்டு தட்சிணாமூர்த்தியை எளிதில் அடையாளம் காணலாம்.




இது தாராசுரத்திலுள்ள தட்சிணாமூர்த்தி..கோவிலின் தென்புறச்சுவற்றில், தனிச்சன்னதியில் வீற்றிருக்கிறார்.மரத்தடியில் அமர்ந்த பகவானின் அழகு,  அவர் முகத்தில்பொங்கிவழியும் கருணைப்பிரவாகம்.காலடியில் முயலகன்,  உபதேசம் பெறும் முனிவர்கள்,அற்புத சிற்பம்  இது..!




இந்த தட்சிணாமூர்த்தியை அவதானியுங்கள்..என்னவொறு ஆனந்த சொரூபம்.. இவரை யோக மூர்த்தி என்கிறார்கள்.. இவரை உற்றுநோக்கினாலே பரவசம் ஏற்படும்..


ஆலமரத்தடி,  அமர்ந்த சுகாசனம், நான்கு கரங்கள், காலடியில் உபதேசம் பெறும் முனிவர்கள்..



இது பல்லவர்கால தட்சிணாமூர்த்தி உபதேசம் பெரும் முனிவர்கள் மேலே இருக்கிறார்கள்.

இனி சிவலாயங்களுக்கு செல்லும் போது, தட்சிணாமூர்த்தியை அடையாளம் காணுங்கள். பொறுமையாய் உற்று நோக்கி நன்கு அவதானியுங்கள்..


எழுத்து : மாரி ராஜன்











Tuesday, May 16, 2017

"அரசாணிப் பானை"

ஒற்றர்கள், மாப்பிள்ளை என்ற பெயரில் சோழ மண்ணில் ஊடுருவுவதையும் தடுக்க "அரசாணிப் பானை"
=============
சோழர் கல்வெட்டு ஆவணங்களில் அரசுக்குக் குடிமக்கள் செலுத்த வேண்டிய  பல வரியினங்களில் 
ஒன்று....கண்ணால கானம் ...அதாவது திருமண வரி.. கண்ணாலம்  இன்னும் - பாமரர் வழக்கிலுள்ள தமிழ் சொல்.
முதற் பராந்தக சோழன் கல்வெட்டில் இந்த வரி அரைக்கால் பணம் என அறியப்படுகிறது. கல்யாணத்திற்குக் கூடவா வரி...?இதென்ன அநியாயம் ..? சோழர் ஆட்சி அவ்வளவு மோசமானதா என நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் சோழ நாட்டின் பாதுகாப்பையும் ஒற்றர்கள், மாப்பிள்ளை என்ற பெயரில் சோழ மண்ணில் ஊடுருவுவதைத் தடுக்கவும் கண்காணிக்கவுமே இப்படி ஒரு வரி நடைமுறையில்  அன்று இருந்திருக்கிறது. .அதுதானே நிர்வாகம் !

அண்டை நாடுகள் ஒன்றுடன் ஒன்று போரிட்டுக்கொண்டிருந்த காலம். கல்யாண உறவு என்ற போர்வையில், பகை அரசர் குடிகள் தம் நாட்டில் ஊடுருவி வாழ்வது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அல்லவா ? அரண்மனைக்கு வரி செலுத்தும்போது மணமகன், மணமகள் இரு வீட்டார் தகவல்களும் முழுமையாகப் பதிவு செய்யப்படும்,  வரி செலுத்துவதன் மூலம் . திருமணமும் பதிவு செய்யப்படுகிறது. இதனால் வேண்டாத பின் விளைவுகள் எதிர் காலத்தில் ஏற்படாமல் தடுக்கலாம் அல்லவா ?
மணமகன்,மணமகள், இரு வீட்டுப் பெரியோர்களும் ,கிராம சபையில் கூடி , விவாதித்து விளக்கம் பெற்று, இக்  கண்ணாலத்தால், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்காது என்று உறுதி செய்து, ஒப்புதல் பெற்று, இரு வீட்டார்  மற்றும் கிராம சபையார் கையெழுத்துடன் , வரியையும் பெற்று , மன்னனின் அங்கீகாரம் பெற  அரண்மனைக்கு அனுப்பி வைக்கப்படும்..
அரண்மனையில் வரி பொத்தகத்தில் பதிவு செய்து, கண்ணால விவரங்கள் மன்னனுக்குத் தெரியப் படுத்தப்படும். கிராம சபையார் பரிந்துரையை ஏற்று மன்னனும் இக்  கண்ணாலத்திற்கு ஒப்புதல் ஆணையில் கையொப்பம் இடுவான். உடன் வந்த ஊர் சபையாரும் சாட்சியாகக்  கையழுத்திடுவார்கள்.. இது கண்ணாலத்திற்கு அரசன் ஒப்புதல் அளித்து இட்ட ஆணை. அரசர் ஆணையை, அரசன் தன் நாட்டுப் புது  மணத்  தம்பதிகளுக்குப் பரிசாக வழங்கும் பானைகளுடனும், பரிசுப் பொருட்களுடனும் மணப் பெண்ணின் வீட்டிற்கு  அனுப்பி வைப்பார்..
மணவிழா நாளன்று அரசன் ஆணையுடன் வரும் பரிசுப் பானைகளை மேளவாத்தியங்களுடன் எதிர் கொண்டு அழைத்து ஊர்வலம் வந்து, திருமணத்திற்கு அரசன் ஆணை கிடைத்து விட்ட தகவல் ஊராருக்கும் தெரியப்படுத்தப்படும். மணவிழா மேடையில் ஈசான்ய திசையில் வைக்கப்பட்டு ,மாவிலை,  தர்ப்பையுடன் சிவப்பு வஸ்திரமும் கட்டி , மஞ்சள் குங்குமம் இட்டு சகல் மரியாதைகளும் அரசனுக்கு செய்வது போல் செய்யப்படும், இப்பானைகள் மூன்று கிளையாகப் பிரிந்த ஒரு ஒதியம் போத்துடன் சேர்த்து இணைக்கப்படும்.  இவற்றின் முன்னிலையில்தான் திருமண சங்குகள் நடைபெறும்..

மணப்பெண்ணிற்கு மங்கல  நாண் பூட்டியதும், மணமக்கள் அரசன் தங்களுக்கு  அனுப்பி வைத்த பரிசுப் பொருட்களை , தண்ணீர் நிரம்பியுள்ள பெரிய பானையில்  ஒரே நேரத்தில் கைகளைவிட்டு துழாவி எடுப்பார்கள். இதன் பின்னர் மணப்பெண் அரசன் வழங்கிய பானையுடன் கணவனுடன் நீர் நிலைக்குச் சென்று நீர் நிரப்பிக்கொண்டு வருவாள்.
இந்த 'அரசர் ஆணைப் பானை'யே சிதைந்து  இன்று அரசாணிப் பானை ஆகிப்போனது..

இந்த முறை பெரும்பாலும் அரச குடும்பத்தினருக்கும், போர்த்தொழிலில் ஈடுபடும் சமூகத்திற்கும் மட்டுமே அன்று நடை முறையில் இருந்ததாகத் தெரிகிறது. தொன்று தொட்டு வரும் இந்தப் பழக்கம் பொருளறியாது இன்றும் தமிழர் திருமணங்களில் நடைமுறையில் உள்ளது.
தன் நாட்டின் குடி மக்களின் திருமணத்தை அரசன் அங்கீகரித்து ஆணையிடுவதுடன், குடும்பம்  நடத்திடத் தேவையான  பானைகளையும் பரிசுப் பொருட்களையும் சோழ மன்னர்கள் ஆசீர்வதித்து அனுப்பிவைத்தார்கள், திருமணத்தை சிறப்பித்தார்கள் என்பது  1000 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் நினைவாகப் போற்றப்படுகிறது என்பதே நம் பாரம்பரியத்திற்க்கு நாம் தரும் கெளரவம்.
   
ஒதியம் போத்தை  மணமகள் தன் கணவன் வீட்டிற்கு எடுத்துச் சென்று வீட்டின் கொல்லையில் நட்டு அதனை வளர்த்து வருவாள். வண்ணம் தீட்டிய  பானைகளும் தானியங்கள் சேமித்து வைக்கும் கொள் கலனாகப் பாதுகாப்பாக வைக்கப்படும்.
இனிமேல் கல்யாணத்திற்குப் போனால்  அரசாணிப் பானை எடுப்பு சடங்குகளை கவனித்துப் பாருங்கள்......

---செல்வராஜ் நாயக்கவாடியார்

Tuesday, May 2, 2017

ஆற்றூர்த்துஞ்சிய தேவரான அரிஞ்சய சோழருக்கு முதலாம் இராசராசன் எடுப்பித்த பள்ளிப்படைக் கோயில் கல்வெட்டு. 


இதில் அவர் அந்த கோவில் விளக்கு போடுவதற்கு கொடுத்தவையும் வருகின்றன ...
கவிதை:
ஆற்றூர்தன்னில் அரிதுயில் கொண்ட
போற்றுதற்குரிய அரிஞ்சய தேவோய்தமக்கு
மாற்றுக்குறையா மன்னோர் மன்னன்
சாற்றச்சொன்ன பள்ளிப்படை விளக்கு
----------------------------------
அகரம் பார்த்திபன்(சோழர் வரலாற்று ஆய்வுக் குழு)
கல்வெட்டின் பாடம்:
1 ஸ்வஸ்திஸ்ரீ திருமகள்போலப் பெருநிலச்செல்வியுந்த
2 னக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச்சா
3 லை கல்மறுத்தருளி வேங்கைநாடுங் கங்கபாடியும் னு ளம்ப
4 பாடியுந்தடிகைபாடியுங் குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும்
5 எண்டிசை புகழ்தர வீழ மண்டலமுமிரட்ட பாடியேழரையிலக்கமுந்திண்டி
6 றல் வென்றித் தண்டாற்கொண்ட தன்னெழில் வளர் வுழியெல்லா
7 யாண்டுந்தொழுதகை விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொ
8 ள் ஸ்ரீ  கோராஜராஜ ராஜகேஸரி வர்மரான ஸ்ரீ ராஜராஜ தேவற்கு யாண்டு
9 ...ஆவது ஜயங்கொண்ட சோழமண்டலத்துப் பெரும்பாணப்பாடித் தூஞாட்டு
10 மேற்பாடியான ராஜாச்ரயபுரத்து ஆற்றூர்த்துஞ்சின தேவற்குப் பள்ளிபடை
11 யாக உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் எடுப்பித்தருளின திருவறிஞ்சீச்வரத்து
12 மஹாதேவற்கு வெண்குன்றக்கோட்டத்து மருதாட்டு வெள்ளாளன் அ...வாக்
13 கி (மு)த்தி கண்டனேன் வைத்த திரு நந்தா விளக்கு ஒன்றினுக்கு
14 (வைத்த) சாவா மூவாப்பேராடு தொண்ணூற்றாறுங் கைக்கொண்டு
15 நி(சதம்) உழக்கு நெய் ராஜ கேசரியால் சந்திராதித்தவற் அட்டு....நேன்  இராசாச்ரயபுரத்து 
16 இடையன் ஏணி கெங்காதிரநேன்
கல்வெட்டு பற்றிய செய்திகள்:
1  சில எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.. 
2. முதல் ஏழு வரிகள் முதலாம் இராசராசனின் மெய்க்கீர்த்தி வரிகள். முதலாம் இராசராசனின் கல்வெட்டு என்பதனால், தஞ்சைப்பெருவுடையார் கோயிலில் உள்ளது போலவே மிக அழகாக வெட்டப்பட்ட எழுத்துகளைக் காண்கிறோம். தஞ்சையைக் காட்டிலும் சற்று மிகையான் வளைவுகளை எழுத்துகள் கொண்டுள்ளன. வடசொற்கள் வரும் இடங்கள் மட்டுமே எ்ன்றில்லாமல் ”ந்த”, ”ந்தா”, ”ந்தொ”, “க்க”, “க்கே”, “க்கு” , “க்கோ”  என ஒற்றெழுத்துச் சந்திகள் வருமிடங்களிலும் கிரந்தக் கூட்டெழுத்துகளை நிறையப் பயன்படுத்தியுள்ளனர். தமிழ் எழுத்துகளைத் தவிர்த்துள்ளனர். இது அரிதாகக் காணப்படுவது.“வூழி” (ஊழி)  என்பது பிழையாக ”வுழி” என எழுதப்பட்டுள்ளது. 
3. இராசராசனின் ஆட்சியாண்டு கல்வெட்டில் தெளிவாகக் காணப்படவில்லை.
4. தொண்டை மண்டலம் முழுதும் ஜயங்கொண்ட சோழ மண்டலம் எனக் கருதுகிறேன். தூஞாட்டு என்பது தூ(ய்)நாட்டைக் குறிக்கும். மேற்பாடி, இந்தத் தூய் நாட்டில் இருந்தது. மேற்பாடிக்கு “ராஜாச்ரயபுரம்”  என்னும் சிறப்புப் பெயர் இருந்தது. சாளுக்கியரை வென்றதால் இராசராசன் பெற்ற சிறப்புப் பெயர் “ராஜாச்ரயன்”  என்பதாகலாம். 
5 கொடை, நந்தாவிளக்கு. கொடைக்கு வேண்டும் முதலாகத் தொண்ணூற்றாறு ஆடுகள் வைக்கப்படுகின்றன. கொடையாளி வெண்குன்றக்கோட்டத்தைச் சேர்ந்த மருதாடு நாட்டைச் சேர்ந்த முத்திகண்டன் என்ற வெள்ளாளன். ஆடுகள், கெங்காதிரன் என்னும் இடையன் வசம் ஒப்படைக்கப்படுகின்றன. அவன், நாள்தோறும் (நிசதம்) ஓர் உழக்கு நெய் கோயிலுக்கு அளிக்க(அட்டுதல்)வேண்டும்.
இவ்விடையன் மேல்பாடி ஊரினன். 
6 ”ராஜகேசரி”  என்னும் பெயரால் அமைந்த முகத்தல்   அளவுக் கருவி இருந்தது.
------
து.சுந்தரம்,  கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,(சோழர் வரலாற்று ஆய்வுக் குழு)