Sunday, June 18, 2017

மனதை மயக்கிய மாமல்லை - பாகம் 2-

மனதை மயக்கிய மாமல்லை -  பாகம் 2- 

 ஜூன் 11 2017
பிற்பகல்


 செவிவழி, கண்வழிஉள்சென்ற விருந்தால் கலைப்பசி அடங்கியது. அதனால் வயிற்றுப் பசி தெரியவில்லை. ஆயினும் உண்டோம். மனம் குதூகலித்ததினால்  வெய்யிலையும் உணரவில்லை. பல்வேறு அரசர்கள் சென்ற பாறைகள் மீதேறி   கடலையும் நகரின் விஸ்தீரணத்தையும் கண்டது கண்கொள்ளாக்காட்சி.


அதன்பின் முத்துக்குமார் அவர்களின் அயராத உரையில் மகிஷியையும்  போர்க் காட்சிகளையும் பூதகணங்களையும் திரிவிக்கிரமரையும் ஈசனையும் கண்ட பரவச உணர்வு நீங்கவேயில்லை .


இடையே எழுத்தாளர் வெற்றியின் வானவில்லி பற்றிய மணிவண்ணன் ஐயாவின் அற்புதமான அணிந்துரையும் வெற்றியின் ஏற்புரையும் மிக நெகிழ்ச்சி !

வெண்ணெய் பாறை !  யானைகளும்  யானையளவு முயற்சிகளும் அசைத்துக்கூடப்  பார்க்க முடியாத கம்பீரம். காலங்களைக் கடந்து அனைத்தையும் கண்டுகொண்டு அமைதியாய் நிற்கிறது வெண்ணெய் பாறை.  நாம் அதனடியில் சற்று  இளைப்பாறினோம்.


நாளின் உச்சபட்ச அனுபவமாய் கடற்கரை கோவில்தரிசனம். ஒவ்வொருகல்லும் ஆயிரம் கதை கூறும்.அறிந்த நண்பர்கள் விளக்கிக்கொண்டு வருகையில் நடந்தது அந்நிகழ்வு! நடந்த நண்பர் பாரி திடீரென நின்றார். குனிந்து தரையை நோக்கினார். ஆகா!

முல்லைக்குத்  தேர்கொடுத்தான் மன்னன்பாரி அன்று!  மல்லையில்சோழர் கல்வெட்டில் நம் நாயகனின் பேர் படித்தான் நண்பன் பாரி இன்று!  ஆம். நம் சோழசரித்திர நாயகனின் பெயர் பல்லவராஜ்ஜியத்தில்!

கண்ட கல்வெட்டின் விவரங்களைக் கீழே  காணலாம் ! தொடருகின்ற  கல்வெட்டுப்  பிரதியின் படத்தின் 13வது வரியே மேலே சுட்டிக்காட்டப்படுவது.

கல்வெட்டு  விவரங்கள் பற்றி. குடவாயில் பாலசுப்பிரமணியம்   ஐயா அவர்களின் கூற்று: :

"மேற்கு நோக்கித் திகழும் சிவாலயத்தின் வெளிப்புறம் தெற்கு மற்றும் வடக்கு தரைதளத்தில் மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழனின் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. அவைதாம் இக்கோயிலின் வரலாற்றை மேலும் தெளிவு படுத்துகின்றன.

இக்கோயிலினை மாமன்னன் ராஜராஜசோழன் ‘‘ஜலசயனம்’’ என்ற பொதுப்பெயரால் குறிப்பிட்டிருப்பதோடு அதில் திகழும் கிழக்கு நோக்கிய சிவாலயத்தை ‘‘க்ஷத்திரிய சிம்ம பல்லவ ஈஸ்வரகிருஹம்’’ என்றும், மேற்கு நோக்கிய சிவாலயத்தை, ‘‘ராஜசிம்ம பல்லவ ஈஸ்வர கிருஹம்’’ என்றும், நடுவில் திகழும் விஷ்ணு ஆலயத்தை பள்ளிகொண்டருளிய தேவர் கோயில் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

 க்ஷத்திரிய சிம்ம பல்லவன், ராஜசிம்ம பல்லவன் என்ற இரண்டாம் நரசிம்ம பல்லவன் பெயராலேயே அச்சிவாலயங்கள் ராஜராஜசோழனால் அழைக்கப்பெற்ற பண்புநெறியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கடற்கரைக்கோயில் ஜலசயன தேவர் கோயில் என்ற பொதுப் பெயராலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழைக்கப்பெற்றதை இச்சாஸனம் எடுத்துரைக்கின்றது.

ஆமூர் கோட்டத்து ஆமூர் நாட்டு நகரம் (வணிக மையம்) ஆன மாமல்லபுரத்து ஊர் நிர்வாக அமைப்பான நகரத்தாரும், பேரிளமையார் எனப்பெறும் உழுகுடி வேளாண் மக்களும் இணைந்து இக்கோயில்களுக்கு அளித்த பொற்கொடை பற்றி ஒரு சாஸனம் எடுத்துரைக்கின்றது.

மற்றொரு கல்வெட்டோ ராஜராஜசோழனின் அதிகாரியான புதுக்குடியான் ஏகதீரன் ஐம்பதின்மன் என்பான் மாமல்லபுரத்து நிலங்களை நூறு பங்குகள் உள்ள நான்கு பிரிவுகளாகப் பகுத்து அவற்றில் 25 பங்குகளை அவ்வூரில் உள்ள கடும்பிடுகுச்சேரி என்ற பகுதியைச் சார்ந்த சங்கரம்பாடியார் (எண்ணெய் வாணியர்) வசமும், மற்ற 75 பங்குகளை மற்ற அனைத்துக் குடியினருக்கும் கொடுத்ததை விவரிக்கின்றது.

மாமல்லபுரத்து ஜலசயனம் என்னும் கடற்கரைக்கோயில் திருமங்கையாழ்வார் காலத்துக்கு முந்தையது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தற்போது மாமல்லையில் உள்ள தலசயனக் கோயில் கி.பி.12ம் நூற்றாண்டுக்கு முந்தைய சிற்பங்களோ, கல்வெட்டுகளோ காணப்பெறவில்லை"


கட்டுரையின் முத்தாய்ப்பாய் என் உணர்வினை விளக்க ஓர் அசட்டுக்கவிதை !

இதுகாறும் நாம் பார்த்த
மல்லை இது இல்லை!
இன்று கண்ட காட்சிகள்
பிரமிப்பின் எல்லை!
இச்சரித்திர உணர்வைப்
பரப்புவோம் இது திண்ணம்!
அதுவே இக்குழுவின் எண்ணம்!
இது இறைவனின் கைவண்ணம்!

நன்றி!

எங்கள் பரிந்துரை :
1. புலிக்குகை
2. தலசயனப்பெருமாள் கோவில்தரிசனம்
3. அர்ஜுனன் தபஸ்
4. ஐந்து ரதம்
உணவு
5. கலங்கரை விளக்கம் (முடிந்தால் )
6. மகிஷாசுரமர்தினி
7. வரிசையாக சிற்பமண்டபங்கள்
8. வெண்ணை பாறை
9. கடற்கரை கோவில்

*************************************************************************
எழுத்து : ஸ்ரீராம்
படங்கள் : முத்துக்குமார்

கல்வெட்டு விவரங்கள்: நன்றி : திரு.குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள்

Friday, June 16, 2017

மனதை மயக்கிய மாமல்லை! - பாகம் 1.



ஜூன் 11  2017 முற்பகல்

விவேகசிந்தாமணியின் 8வது பாடல்- "தண்டாமரையின் உடன்பிறந்தும் தண்டேநுகரா மண்டூகம். ..". இதை அசலாய் உணரவைத்தது எங்களின் கடல்மல்லை என்கிற மாமல்லபுரம் பயணம்! எவ்வளவு முறை எத்தனை அருகில் பார்த்திருப்போம்? ஆனால் அதன் சிறப்பை உணர்ந்திருக்கவில்லை!

ஜூன் 11 பயணம் மல்லையின் சிறப்பை அறியவும் உணரவும் வைத்தது. சென்னையில் இருந்து சென்றவர்களின் முதல் நிறுத்தம் புலிக்குகை. இந்தப் பெயருக்கும் கண்ட காட்சிக்கும் உள்ள முரண்களை நண்பர் முத்துகுமார்  (இவரே சுவாரசிய முரண்- காவல் ஆய்வாளர் / சரித்திர ஆர்வலர்) விளக்கியபொழுது தொடங்கியது இந்த நாளின் பிரமிப்பு!

மல்லையில் சிற்றுண்டி முடிக்கையில் காஞ்சியில் இருந்து வந்த   (கைலாசநாதரை தரிசிக்கக் கொடுத்துவைத்த) நண்பர்கள் இணைந்தனர். அனைவரும்  முதலில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றும் பல்லவ மற்றும் நாயக்கர்களின் கட்டிட வேலைப்பாடுகளைக் கொண்டதும் ஆன ஸ்தலசயனப் பெருமாள் இருப்பிடம் சென்று வணங்கினோம். அதன்பின் நகரின் மையத்தில் உள்ள அர்ச்சுனன் தபஸ்!

இதுவரை பார்த்து மட்டுமே இருந்த இச்சிற்பத் தொகுப்பை நண்பர் முத்துக்குமார் மற்றும் பாரியின் விளக்கத்தில் உள்வாங்கினோம். சூரியசந்திரர் உள்ளிட்ட தேவர்களின் உலகம், பூவுலகம் மற்றும்  பாதாளஉலகம் இவற்றின் நிரை.  பாசுபதஅஸ்திரம் வாங்கும் அர்ச்சுனன் தவமா அல்லது கங்கையைகொணர பகீரதன் முயற்சியா இச்சிற்பத் தொகுப்பு? ஐயம் நீங்கவில்லை.  ஐயம் மட்டுமா? குடம் சுமக்கும் பெண்ணையும் பன்றியையும் நாகத்தையும்தலையற்ற தவசிகளையும் தத்ரூபமாய் கண்ட சிலிர்ப்பும்   நீங்கவில்லை! உவகையுடன் நகர்ந்தோம் ஐந்துரதம் நோக்கி.

இதுவரை வடிவங்களாய் கண்ட சிற்பரதங்கள்   நண்பர்களின் விளக்கத்தில் உயிர் பெற்றது. திரெளபதி ரதம் காண்கையில் அவரது பிறப்புச் சிறப்பும் விளக்கப்பட்டது. பீமரதமும் மற்ற ரதங்களும் எண்ணற்ற இணையற்ற கடவுளர் சிற்பங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன .
மதிய உணவுக்கான நேரம்  வந்தது !



எழுத்து : ஸ்ரீராம் 

Friday, June 2, 2017

சிற்பங்களின் அடையாளம் : 6. உமா மகேசுவர மூர்த்தி



சிற்பங்களை அடையாளம் காண்பதில் இன்று...
அனைத்து ஆலயங்களிலும் தவறாமல் இடம் பெறும்

                  "உமா மகேசுவர மூர்த்தி " 

உமையவனும்,  உமையவளும் அருகருகே அமர்ந்திருக்கும் ரூபம்.. இதை 

                " கௌரி பிரசாத மூர்த்தி "   என்பார்கள்..

ஒரு சிறந்த, தரமான,  ஆதர்ச தம்பதியினரே 
இவ்வுலகின் முதல் கடவுள் என்பதை நமக்கு உணர்த்துவதே,  இந்த ரூபத்தின் நோக்கமும் !

அதனால்தான்.. கோவில்களின் கோபுர உச்சியில்
இந்த உமா மகேசுவர ரூபத்தை வடிக்கிறார்கள். 

                                               
இது கொடும்பாளூர் கோவில் ...
                                   கோபுர உச்சியில் உள்ள உமாமகேசுவரர்.                                                
வழக்கம் போல் புள்ளமங்கை !
(புகைப்படம் - கரிகாலன் மற்றும் சங்கீரணி)
உமாமகேசுவர ரூபத்தின் பல ரூபங்களை  அற்புதமாக
ஒரு  தொடர் சிற்பமாக வடித்துள்ளனர் ! ஒரு அடிக்கு ஒரு அடி கற்பலகையில்,  ஒரு காவியமே படைத்துள்ளனர்..

முதல் காட்சி...
ஒரு ஏகாந்த நேரத்தில், சற்று ஓய்வாக அமர்ந்துள்ளார்
சிவன். கால் மேல் கால் போட்டு, கரம் ஒன்றை நந்தி மேல்
வைத்தவாறு ஒரு பகுமானத் தோற்றத்தில் சிவன்.
அவர் காலடியிலோ பூதகணங்கள்..  ஒரு மூலையில்
வெட்கத்துடன் அழகுப்   பதுமையாய் பார்வதி. கடைக்கண்களால் சிவனைப்  பார்க்கிறாள்..

இரண்டாவது காட்சி...
உமையவள் மெதுவாக வந்து சிவனின் அருகே அமர்ந்து,
தன்னவனைப்  பார்க்கிறாள். சிவனும் அம்மையை நோக்குகிறார். இக்காட்சியை கண்ட பூத கணம் கண்கள்
விரிய ஆனந்தமடைகிறது..

மூன்றாவது காட்சி..
சிவனும் பார்வதியைத்  தொட... அடடா அந்த ஸ்பரிசம்தான்
பார்வதியை கிளர்ச்சியடைய செய்கிறது. உமையவளின்
அந்த வெட்கம். ஒரு விரலைக் கன்னத்தில்   வைத்து
ஈசனின் தழுவலை ஆனந்தமாய் உள்வாங்குகிறாள்..
பார்வதியின் மற்றொரு கரத்தைப்  பாருங்கள்.
பூதகணத்தின் தலையில்  கரத்தை வைத்து அழுத்தி,
இனி உனக்கு  வேலையில்லை கிளம்பலாம் என்கிறது.

நான்காவது காட்சி...
ஆறுமுகக்  கடவுளாம் முருகன் அவதரித்தார்..
சிவனின் மடியில் ஒரு குழந்தை. சுற்றிலும் கார்த்திகைப் 
பெண்கள் ஆறுபேர். அவர்கள் ஐந்து பேரில் கைகளில்
ஐந்து குழந்தைகள்...

ஒரு அடிக்கு ஒரு அடி கற்பலகைகளில் ...
எத்தனை ஜீவனுள்ள சிற்பங்கள். ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன் செதுக்கப்பட்ட சிற்பங்கள் இன்றும்
உயிரோட்டமாய் இருக்கிறது...
                                             
ஆலயம் நாடி,  இவரைத்  தேடி..
இந்த கௌரி பிரசாத மூர்த்தியை  தரிசிப்பதை விட
வேறு என்ன ஆனந்தம் இவ்வுலகில் இருந்து விடப்போகிறது..

   (புகைப்படம் - திரு. சசிதரன்)   
  
                     
ஒரு சிறந்த ஆதர்ஷ தம்பதியினரே..
உலகின் மிகச்சிறந்த பாக்கியவான்கள்.!

இது ஒன்றே இவ் வடிவம் உணர்த்தும் உண்மையாகும்.!

(எழுத்து : மாரிராஜன்)

Thursday, June 1, 2017

சிற்பங்களின் அடையாளம் :5.கஜசம்ஹாரமூர்த்தி



"கஜசம்ஹாரமூர்த்தி"

சிற்பங்களை அடையாளம் காண்பதில் இன்று..

      " கஜசம்ஹாரமூர்த்தி "

சோழக் கல்வெட்டுகள் இவரை..

    " ஆனை உரிச்ச தேவர் "

என்கின்றன..


கயாசுரன் என்னும் அசுரன். வழக்கம் போல் பிரம்மாவை 
நினைத்து தவம் செய்து,  வழக்கம் போல் வரம் பெற்றான்.
ஜீவனுள்ள ரூபங்கள் எதுவாகினும்,  அதுவால் தனக்கு
மரணம் நேரக்கூடாது.  இதுவே அசுரன் பெற்ற வரம்.

வரம் பெற்ற அசுரர்கள் என்ன செய்வார்களோ,  அதையே
கயாசுரனும் செய்தான்.. வழக்கம்போல் தேவர்களைத்  
தாக்கினான்.. 

தேவர்கள் பிரம்மாவிடம் சென்றனர். பிரம்மாவோ,
'நான் அளித்த வரம். என்னால் ஏதும் செய்ய இயலாது'
என்றார். 

விஷ்ணுவிடம் சென்றனர். 'கயாசுரன் பெற்றது அபரிமிதமான 
சக்தி கொண்ட வரம். அவனை அழிக்க ஈசுவரனால் 
மட்டுமே முடியும்' என்றார்..

இறுதியாக சிவனைத்  தஞ்சமடைந்தனர் தேவர்கள்..

கயாசுரன், யானை ரூபத்தில் தேவர்களைத்  துரத்த, 
யானை வடிவம் கொண்டு வரும் அசுரனை எதிர்கொண்டார் சிவன்.. ஒரு ஜீவனற்ற அரூபமாய்
ஒரு ஜோதிப் பிழம்பாய் யானையின் உடலில் புகுந்தார்..

யானையைக் கிழித்து,  யானையின் தோலைப்  போர்வையாகப் 
போர்த்தி,  கஜசம்ஹார மூர்த்தியாய் வெளிப்பட்டார்
பரமேஷ்வரன்..


இந்த கஜசம்ஹார ரூபத்தை சிற்பமாக வடிப்பதில்
கைதேர்ந்தவர்கள்  சோழ சிற்பிகள்..

தஞ்சைக்கு அருகே உள்ள புள்ளமங்கை ஆலந்துறையார் 
ஆலயம். கோபுர அதிஷ்டானத்தில்,  ஒரு அடிக்கு ஓர்
அடி கற்பலகையில்,  கஜசம்ஹாரமூர்த்தியின் வடிவத்தைப் 
பாருங்கள்..

சிவனின் ஆக்ரோசம் அப்பட்டமாய் தெரிகிறது.
யானைவடிவ அசுரனை சூலம் கொண்டு கிழித்து,
யானைத் தலையை காலில் இட்டு மிதித்து, யானைத்தோலை உரித்து,  அதை விரித்து பிடித்து.,
நடனம் ஆடுகிறார்..

சிற்பத்தின் கீழ்பகுதியை பாருங்கள்...
யானைத்தலையின் அருகே ஒரு குள்ளபூதம்..
அது தன் இரு விரலை வாய்க்குள் வைத்து,  அசுரனைப்  பார்த்து,  " வவ்வே " காட்டுகிறது.. 
"யாருகிட்ட வந்து உன் சேட்டையை காட்டுர"...

மேலே ஒரு  குள்ளபூதம்,  இந்தக்  காட்சியைப்  பார்த்து
" அடடா " என மெய்சிலிர்க்கிறது..

சிவனின் இந்த கோரதாண்டவத்தை கண்டு அஞ்சிய
பார்வதி தேவியோ, சற்று ஒதுங்க, தேவியின் இடுப்பில்
இருந்த குழந்தை முருகனோ, தாதிப்  பெண்ணை நோக்கித்
தாவுகிறார்... 

இத்தனை விபரங்களும்,  ஒரு அடிக்கு ஒரு அடி கல்லில்
செதுக்கப்பட்டுள்ளன..


இது தாராசுர,  கஜசம்ஹாரமூர்த்தி..
இந்த சிற்பம் தற்போது தஞ்சை அருங்காட்சியகத்தில்
உள்ளது...
சோழசிற்பங்களின் மாஸ்டர் பீஸ் இது என ஆய்வாளர்களால் புகழப்படுகிறது..


எழுத்து : மாரிராஜன்