Thursday, December 14, 2017

தஞ்சை சோழர் சிறைச்சாலை...

              

விஜயாலய சோழன் முதல் ராஜராஜ சோழன் முடிய 8 மாமன்னர்கள் தஞ்சையை ஆண்டு இருக்கிறாகள்.படை நடத்தி வென்ற நாடுகளில் இருந்து கைதிகளை கொண்டுவந்திருக்கிறார்கள்.பெண்களையும் கொண்டு வந்து வேளத்தில் வைத்து இருக்கிறார்கள். எதிரி நாட்டு வீரர்களை அரண்மனையில் வைப்பது எவ்வளவு ஆபத்தானது என்று தெரியும்.எனவே இவர்களை மன்னரும் மக்களும் வாழும் இடத்திற்கு ஆபத்து வராத இடத்தில சிறையில் வைத்து இருக்கவேண்டும். இன்றும் எல்லா நாடுகளிலும் இதுதான் நடைமுறையில் உள்ளது.


அப்படியானால் தஞ்சை சோழர் சிறைச்சாலை இருந்தது
எங்கே ?

தஞ்சைக்கு வடக்கே வெண்ணாறு ; அதற்கும் வடக்கே வெட்டாறு ஓடுகிறது.இந்த இரண்டு ஆற்றுக்கும் இடைப்பட்டப்பகுதியில்தான் சிறைச்சாலை இருந்து இருக்கவேண்டும். சிறைச்சாலையின் கிழக்கு எல்லை இன்றைய சாரப்பள்ளம் எனப்படும் வயலூர், மேற்கு எல்லை அம்மன்பெட்டை தெற்கு எல்லை வெண்ணாறு வடக்கு எல்லை வெட்டாறு..அதாவது இன்றைய பள்ளி அக்ரகாரத்திற்கு வடக்கு பகுதி..இது ஊகமாக அல்ல. முதன்மை சான்றுகளே உள்ளன,..

இப்பகுதியில் உள்ள சிறை காத்த அய்யனாரே முதன்மை சான்றாக இருக்கிறார்.இந்த பகுதிகள் இன்று வயல் வெளியாக இருக்கிறது. இப்பகுதியை களஆய்வு செய்தபொழுது, சோழர் காலப் பானை ஓடுகள், கூரை ஓடுகள் , செங்கல் கட்டுமானச் சிதைவுகள்,   பாசி மணிகள், எங்கு பார்த்தாலும் கிடப்பதை காண முடிந்தது. ஒரு வயல் கோட்டவம், இன்னொரு வயல் கொட்டாரம் ..இப்படி வயல்கள் பெயர்கள் சிறைச்சாலையோடு  தொடர்புடையனவாக உள்ளன. அருகில் உள்ள கிராமங்கள் சிறை பெரம்பூர் ( சிறு பெரம்பூர் ),சிறை காவலூர் ( சுரைக்காவூர் ), காவலூர்,பஞ்சவன் மாதவி வே ளம் ( பஞ்சாரம் ).

மேலும் இப்பகுதி வயல் வெளிகள் களர் மண்ணாக இருப்பதை பார்க்கமுடிகிறது.சுண்ணாம்பு பொறு க்குகளும் ஏராளம். இங்கே  இருந்த   சிறைக் கைதிகள் சுண்ணாம்புக்  கலவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கவேண்டும். இப்பொழுது கைதிகள் வேலை செய்வது இல்லையா அதுமாதிரி தான்.. அரண்மனை, பெரிய கோயில் கட்டுமானப்  பணிகளுக்கு இப்பகுதியில் இருந்துதான் மூலப்பொருட்க்கள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன. இதைதான் செவி வழி செய்தியாக சாரப்பள்ளத்தில் இருந்து பெரிய கோயிலுக்கு சாரம் கட்டியதாகச்சொல்கிறார்கள்.
ஆச்சரியமான செய்தி....அம்மன் பேட்டை கிராமத்தின் பிரதான தொழிலே சுண்ணாம்புகாளவாய்தான்...1000 வருஷத்தின் பாரம்பர்யம் இன்றும்தொடர்கிறது.
எனவே சோழர் காலத்து தஞ்சையின் சிறைச்சாலை இன்றுள்ள சிறை காத்த அய்யனார் கோயிலை சுற்றி உள்ளப் பகுதியில் தான் இருந்திருக்கிறது என்பது என்னுடைய ஆய்வின் முடிவு.