Sunday, April 23, 2017

அறிமுகம் : பஞ்சவன் மாதேவியார்

கவிதை:

:சதயமுடையாள்:

அவனிபுரத்து
 சுந்தரியாம்!
ஆடல்கலையின் 
நாயகியாம்
அருன்மொழியின் 
காதலியாம்!
மாதர் குலத்தின்
மாணிக்கமாம்!
பவஞ்சவன் மாதேவி!

மசக்கை 
கொள்ளவில்லை!
மாங்காய் 
கடிக்கவில்லை!
ஜணன,மரண
 ரணமுமில்லை!
பேறுகொண்டாள்
 மகவெனவே!
மாவீரனவனை!

தாய்பாலும்
 கொடுத்ததில்லை!
தாலாட்டும்
அறிந்த்தில்லை!
வீறுகொண்டாள்
வளர்த்திடவே!
ராஜேந்திரன்
தானவனை....

பட்டம் 
சூடவில்லை!
பாரும் 
ஆண்டதில்லை!
சட்டங்களும்
போடவல்லை!
தர்பாரும்
 நடத்தவில்லை!

சதயத்தைத்
 தான்கொண்டு,
சதயத்தில் 
தானுறைந்து
அருன்மொழியின் 
நிழலெனவே

அன்பென்ற
 மூன்றெழுத்தில்
சோழனென்ற
மூவெழுத்தில்
 சிறந்து நின்ற
ஈரறணை
ஆண்டு வந்தாள்!
அன்பினிலே!
பழுவூரின் 
பண்பினிளே!
பஞ்சவன் மாதேவி
 யெனும் தாயவளே!

                           *கவின்மொழிவர்மன்...*




பஞ்சவன்மாதேவியார் :

அவனி சுந்தர்புரத்து பழுவூர் தேவரின் திருமகள் பஞ்சவன்மாதேவியார்.இவர் தளிச்சேரி பெண்டிர்(தேவதாசி) இனத்தை சேர்ந்தவர்.அதாவது சிறுவயதிலேயே ஆடல்வல்லானின் மேலுள்ள அன்பினால்,ஆடல்கலைகளில் சிறந்து விளங்கினார்.ஒருசமயம் தில்லையம்பதி வந்த அருண்மொழிதேவர்.
இவர்மேல் காதல்கொண்டு இவரை தன் அனுக்கியாக வரிந்துகொண்டு
திருமணம் செய்து கொண்டார்.அன்றுமுதல் ராஜராஜரின்
ஒவ்வொரு செயலிலும் பக்கப்பலமாக இருந்து வழி நடத்தியவர் பஞ்சவன்மாதேவியார்.தன் மூத்தாளின் மகனாகிலும் தன் சொந்த பிள்ளைபோல் கொண்ட அன்பினால் தனக்கு வாரிசுவரின் ராஜேந்திரன்
ஆள்வதற்க்கு இடையூறு வரும் என்றெண்ணி யாருக்கும் தெரியாமல் தன் கருப்பையை மலடாக்கி, கருப்பையையே கருவறுத்தவள் ஆயினள்.
ராஜேந்திரனின் ஓவ்வொரு வளர்ச்சியிலும் உறுதுணையாக இருந்து
அவருக்கு அனைத்து திறன்களையும் வளர்த்த பெரும்பங்கு இவரையே
சாரும். பஞ்சவன்மாதேவியார் போர்திறனும் கற்றுணர்ந்தவர். ஒவ்வொருமுறை ராஜராஜர் போருக்கு செல்லும்போதும் தானும் உடன்செல்வார்.ராஜராஜர் தஞ்சை பிரகதீஷ்வரர் கோவில் அமைத்த காலத்தில் அவருடன் இருந்து அனைத்து வித்த்திலும் உதவியவர்.இவருடைய
நடனக்கலையின் பாவங்களை இன்றும் நாம் பெரியகோவிலில்
காணமுடியும்.அத்தகைய சிறப்பு பெற்ற அன்னைக்கு ராஜேந்திர சோழன் பழையாறை அருகே பட்டீஸ் வரம் என்னும் ஊரில் இவருக்கு கோவில் எடுத்து சிறப்பு செய்துள்ளார்.இதை தனது ஏழாம் ஆட்சியாண்டு கல்வெட்டிலும்
உறுதிசெய்து தனது சிற்றன்னையை பெருமைபடுததியுள்ளார்.இவ்வாறு இருபெரும் பேரரசர்களை அன்பால் ஆண்ட  பஞ்சவன்மாதேவியின் பள்ளிப்படை கோவிலுக்கு தீபமேற்றும் விழா சோழர்
வரலாற்று ஆய்வுமன்றம் சார்பாக கடந்த சித்திரை 1ஆம் தேதி நடை பெற்றது.
                        

தெளிவுரை: இராசராசனின் இருபத்தொன்பதாவது ஆண்டில் கொடுக்கப்பட்ட ஒரு கொடைச் செய்தி


சோழர் வரலாற்று ஆய்வுக் குழுவின் FB cover picture பற்றி :



கவிதை:

மனதை ஆளும் மாமன்னர் இருவர் பேர்விளங்க

தமதை கழஞ்சு மகேச்வரி
கலனாய்-பொன்

கொடுத்தருளிய நற்சேதி சொன்ன நற்-கல் வெட்டிங்கே

எடுத்தருளி காட்சிக்  கிங்கு
கண்முன் படைத்துள்ளோம்

----------------------------------------------
அகரம் பார்த்திபன்
(சோழர் வரலாற்று ஆய்வுக் குழு)


கல்வெட்டின் பாடம்:

1 ஸ்வஸ்திஸ்ரீ உடை(யார் ஸ்ரீ) ராஜராஜ (தேவ)
2 ர் உடையார்க்கு ஸ்ரீகார்யஞ்செய்கின்
3 ற ஆற்றூருடையான் நக்கன் தோன்றி
4 உடையார் கோயிலில் திருச்சுற்று மாளி
5 கையில் ஆலையத்து உமா பரமேச்வரியார்க்கு
6 உடையார் ஸ்ரீராஜராஜதேவர்க்கு யாண்டு இருபத்தொ(ன்)
7 பதாவது வரை குடுத்தன கல்லில் வெட்டியது ஆலை
8 யத்து உமாபரமேச்வரியார்க்கு சாத்தி அருளக்குடுத்த (தார்)
9 ஒன்று பொன் ஆடவல்லானால் இரு கழஞ்சரை இவர்க்கே ஸ்ரீராஜேந்த்ர 
10 சோழதேவர் சிறுதனத்து இரட்டகுலகாலத் தெரிந்த உடநி
11 லைக்குதுரைச்சேவகரில்  உடையார் கோயில்
12 லில் எழுத்துவெட்டுவிக்கின்ற அருமொழிவளநா
13 ட்டு வண்டாழை வேளூர்க் கூற்றத்து சாத்தன்குடி வெ
14 ள்ளாளன் இரவி பாளூர் உடையார் ஸ்ரீ ராஜேந்த்ர சோழ தே
15 வர்க்கு யாண்டு மூன்றாவது வரை குடுத்த பட்டைக்கா
16 றை ஒன்று பொன் ஆடவல்லான் என்னுங்கல்லா
17 ல் நிறை முக்காலே மூன்று மஞ்சாடி


குறிப்பு :  கல்வெட்டுப்பாடத்தில் சில

எழுத்துகள் கிரந்த எழுத்துகள் ஆகும்.

கல்வெட்டுச் செய்தி

இராசராசனின் இருபத்தொன்பதாவது ஆண்டில்(ஆண்டு வரையில்)

கொடுக்கப்பட்ட ஒரு கொடைச் செய்தி இக்கல்வெட்டில் முதலில் கூறப்படுகிறது. பெரிய்கோயிலின் நிர்வாகத்தைச் சேர்ந்த (ஸ்ரீகார்யம் செய்கின்ற) நக்கன் தோன்றி என்பான் (இவன், ஆற்றூரைச் சேர்ந்தவன்-ஆற்றூருடையான்) கோயிலின் திருச்சுற்றாலையில் அமைந்திருந்த உமா பரமேசுவரி ஆலயத்தில் இறைவிக்குச் சாத்துவதற்காகப் பொன்னாலான மாலை (தார்) கொடையளிக்கிறான். 

பொன்னின் அளவு இரண்டரைக் கழஞ்சு. ஆடவல்லான் என்னும் நிறை 

கல்லால் நிறுக்கப்பட்டது. இங்கே, இரண்டரைக் கழஞ்சு என்று தற்காலம் நாம் சொல்கின்ற வழக்கு, கல்வெட்டில் “இரு க்ழஞ்சு அரை”

எனப்பயில்வதைக்காண்க. மற்றொரு கொடை, சாத்தன்குடி என்னும் ஊரைச்சேர்ந்த வெள்ளாளன் இரவிபாளூர் என்பவன் கொடுத்தகொடை பற்றியது. சாத்தன்குடி என்னும் ஊர், அருமொழிதேவ வளநாட்டில், வண்டாழை வேளூர்க் கூற்றத்தைச் சேர்ந்தது. இவன் இராசேந்திரனின் மூன்றாவது ஆண்டில் கொடையளிக்கிறான். இவன், இராசேந்திரனின் படைப்பிரிவுகளில் ஒன்றான தெரிந்த உடநிலைச் சேவகத்தைச் சேர்ந்தவன். உடநிலைச்சேவகர் என்பவர் நெருங்கிய வீரர் குழுக்களில்

ஒருவர் என்பது அகராதி விளக்கம். தெரிந்த என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட என்னும் பொருளுடையது. குறிப்பாக இந்தப்

படைப்பிரிவு குதிரைப்படை வகையைச் சேர்ந்தது எனக் கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். குதிரை என்னும் சொல், எக்காரணத்தாலோ

“குதுரை” என இங்கே எழுதப்பட்டுள்ளது. சிறுதனம் என்பது, சோழப்படைப்பிரிவுகளில் ஒன்று. இதுபோலத் தெரிந்த படைப்பிரிவுகளின் பெயரில் அரசனின் பெயர் முன்னொட்டாக

அமையும். இங்கே அரசனின் சிறப்புப் பெயரான இரட்டகுலகாலன் என்னும் பெயர் முன்னொட்டாக வருகின்றது. இரட்டபாடியை 

வென்றதால் கிடைத்த சிறப்புப்பெயர். இந்தக் கொடையாளி, பெரிய கோயிலில் எழுத்து வெட்டுவிக்கின்ற பணியையும் சேர்த்துச் செய்திருக்கிறான் என அறிகிறோம்.  கல்வெட்டுகள் பொறிக்கும் 

பணிகளில் உயர் அதிகாரிகள் கண்காணிப்பு, மேற்பார்வைப் பணிகளில்

ஈடுபட்டனர் எனத்தெரிகிறது. இவன் கொடுத்த கொடை, பொன்னால் செய்யப்பட்ட பட்டைக் காறை என்பதாகும். இது ஒருவகைக் கழுத்தணியாகும். இக்கொடை, மேலே குறிப்பிட்ட உமா மகேசுவரியார் இறைவிக்கே கொடுக்கப்பட்டது. பொன்னின் நிறை மூன்றே முக்கால் மஞ்சாடி என்னும் அளவு கொண்டது. மஞ்சாடி என்பது இருபது குன்றிமணிகள் சேர்ந்த எடையாகும். (முனையில் மட்டும் கருப்புப்புள்ளி கொண்ட, மற்ற பகுதி முழுதும் சிவப்பு வண்ணம் கொண்ட,  நீள்வட்ட வடிவில் உள்ள ஒரு மணி போன்ற விதை. பொற்கொல்லர்கள் இதைப் பயன்படுத்துவர்.)


-----------------------------------------------------------------------------------------------------------------

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை(சோழர் வரலாற்று ஆய்வுக் குழு)