கட்டுரைகள்


30.04.17
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கரிகாலரின் இமயப் படையெடுப்பும் அவரது காலமும் - ஓர் ஆய்வுக் கட்டுரை.

கரிகாலர் :

               கரிகாலரைப் பற்றியும் கரிகாலர் வாழ்ந்த காலத்தைப் பற்றியும் நாம் அறிவதற்கு மயிலை சீனி. வேங்கடசாமி, கா. அப்பாத்துரையார், நீலகண்ட சாஸ்திரி, புலவர் கா. கோவிந்தனார் ஆகிய தமிழ் வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களைப் படித்தால் ஒவ்வொருவருடமிருந்தும் ஒவ்வொரு விதமான முரண்பட்ட ஆய்வுத் தகவல்களே கிடைக்கின்றன. சிலர் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் கரிகாலன் வேறு, பட்டினப்பாலையில் குறிப்பிடும் திருமாவளன் வேறு, பொருநராற்றுப் படையில் குறிப்பிடப்படும் வளவன் வேறு என்று ஆதரங்களை அடுக்கி கரிகாலன் - 1, கரிகாலன் – 2 என வகைப்படுத்துகின்றனர். அவர்கள் வெண்ணிப் போரில் வெற்றி பெற்ற கரிகாலன் வேறு; காவேரிக்கு அணை கட்டிய திருமாவவளன் என்பவன் வேறு; இமயத்திற்கு படையெடுத்த கரிகாலன் என்பவன் வேறு என்று கூறுகிறார்கள். சிலர் அதே ஆதாரங்களை மறுத்து கரிகாலன் என்பது ஒருவர் தான் என்றும் மறுக்கிறார்கள்.

சிறு வயதில் மாளிகையில் எரியூட்டப்பட்டு கால் வெந்து கரிய கால்களைக் கொண்ட கரிகால் வளவன் தான்  வெண்ணிப் போரில் தன்னை எதிர்த்த சேரன் பெருஞ்சேரலாதன், பாண்டிய மன்னன் மற்றும் பதினோரு வேளிர்களை எதிர்த்து வெற்றிபெற்றான். வாகைப் பெருந்தலையில் ஒன்பது வேளிர்களை வீழ்த்தினான். அதே கரிகாலன் தான்சிங்களர்களைக்1 கொண்டு காவேரிக்கு அணையைக்  கட்டினான். இதே கரிகாற் பெருவளத்தான் தான் இமயம் வரைப் படையெடுத்தான் என்று சிலர் கூறுகிறார்கள். பெருவளத்தான், கரிகாற் பெருவளத்தான், கரிகால் வளவன், வளவன், திருமாவளவன், இயல்தேர் வளவன் என புறநானூறு, அகநானூறு, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை மற்றும் சிலப்பதிகாரத்தில் பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுவது சோழப் பேரரசன் கரிகாலன் ஒருவனே. என்பது எனது கருத்து.

ஏனெனில் கரிகாலன் என்ற பெயரே காரணப் பெயர். கால் சுடப்பட்டதனால் கரிகாலன் என்ற பெயரைப் பெற்றான் என்று கரிகாலனின் காலத்திற்குப் பிந்தைய இலக்கியமான பழமொழி நானூறு (239) குறிப்பிடுகிறது.

சுடப்பட் டுயியர்ந்த சோழன் மகனும்

பிடர்த்தலைப் பேராணைப் பெற்று –கடைக்கால்

செயிரறு செங்கோல் செவிஇயினா ளில்லை

யுயிருடையா ரெய்தா வினை –       பழமொழி நானூறு 239.

கரிகாலன் 1, 2 எனக் கூறுகிறவர்கள் அனைவரும் முதல் கரிகாலனை விடவும் பிந்தைய கரிகாலனே சிறப்பு மிக்கவன் என்று கூறவும் செய்கிறார்கள். முதல் கரிகாலன் சிறப்பு மிக்கவனாக இல்லாமல் புகார் மற்றும் உறைந்தைக்குள்  அடங்கியவனாக இருக்கையில்; அதுவும் கால் சுடப்பட்டதனால் ஏற்பட்ட காரணப் பெயரை இமயம் வரை சென்று வெற்றி பெற்ற புகழ் பெற்ற கரிகாலன் ஏன் சூட வேண்டும்? என்ற கேள்வியும் எழச் செய்கிறது.

கரிகாலன் என்பவர்கள் இருவராக (பலர்?!) இருந்தால் அதைப் பற்றி ஏன் சோழர்களின் பிற்கால இலக்கியங்கள் குறிப்பிடப்படவில்லை???

கரிகாலரை வெண்ணிப் போரில் எதிர்த்த சேரர், பாண்டியர்:

வெண்ணிப் போரில் கரிகாலன் எதிர்த்த சேர மன்னன் பெருஞ்சேரலாதன் என்பதை கழாஅத் தலையார் (புறம் 65) மற்றும் வெண்ணிக் குயத்தியார்  (புறம் 66) ஆகியோரின் பாடல்களிலிருந்து அறிந்துகொள்ளலாம். ஆனால், வெண்ணிப் போரில் பங்குபெற்ற பாண்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி எந்தத் தகவலும் நேரடியாகக் கிடைக்கவில்லை. ஆனால், அப்பாண்டிய மன்னன் யாராக இருக்கலாம் என்பதற்கு இலக்கியத்தில் ஒரு குறிப்பு மறைமுகமாகக் காணப்படுகிறது.

பழமொழி நானூறு நூலில் 239வது பாடல் கரிகாலனின் பெயர்க் காரணத்தைக் குறிப்பிடுகிறது. பட்டினப்பாலை வெண்பாவும் இதைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதே பழமொழி நானூறு நூல் இரும்பிடர்த்தலையன்2 எனும் பிடர்த்தலைப் பேராணைப் பற்றியும் குறிப்பிடுகிறது. பழமொழியின் கொலுக்குறிப்பில் இப்பிடர்த்தலையன் கரிகாலரின் தாய்மாமன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இரும்பிடர்த்தலையன் அழுந்தூர் இளவரசன்.

இதே இரும்பிடர்த்தலையனின் பாடல் ஒன்று புறநானூறு 3ல் வருகிறது. இரும்பிடர்த்தலையர் ‘பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி’ என்பவனுக்கு ‘உன் ஆட்சியை இழக்க நேர்ந்தாலும் நீ சொன்ன சொல் தவறாதே’ என்று அறிவுரை வழங்குகிறார். பழமொழிக் கூற்றின் மூலம் இரும்பிடர்த்தலையன் கரிகாலரின் மாமன் எனக் கொண்டால் பிடர்த்தலையர் அறிவுரை கூறிய ‘பெரும்பெயர் வழுதி’யே கரிகாலன் காலத்திய பாண்டிய மன்னனாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.


கரிகாலரின் வடசெலவு:

உறுதியான கல்வெட்டு ஆதாரம் இல்லாமல் இலக்கிய ஆதாரம் மட்டுமே கொண்டிருப்பதால் கரிகாலரின் வடநாட்டுப் படையெடுப்பை வெறும் கட்டுக்கதை என்றும், அது பிற்காலத்தில் பெருமைக்காக சேர்க்கப்பட்டது என்றும் கூறி ஆராய்ச்சியாளர்கள் பலர் குறிப்பாக வடநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கரிகாலரின் இமயப் பெரும் வெற்றியை ஒதுக்கித் தள்ளிவிடுகிறார்கள். இதே நிலைதான் சேரன் செங்குட்டுவனின் வடநாட்டுப் படையெடுப்புக்கும். பிற்காலச் சோழப் பேரரசர் கோப்பரகேசரி மதுராந்தக இராஜேந்திரரின் கங்கைப் படையெடுப்பைத் தவிர மற்ற முற்கால தமிழக மன்னர்களான சோழப் பேரரசன் கரிகாற் பெருவளத்தான் மற்றும் சேரன் செங்குட்டுவன் ஆகியோரின் வடநாட்டுப் படையெடுப்பு என எதற்கும் நேரடியான கல்வெட்டு ஆதாரங்கள் இல்லை.

கரிகாலரின் காலத்திற்குப் பிறகு இயற்றப்பட்ட சிலம்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் கரிகாலரின் இமயப் படையெடுப்பு பற்றிய தகவல் கரிகாலரின் சமகாலத்திய இலக்கியமான பட்டினப்பாலை, பொருநராற்றுப்படை, அகநானூறு மற்றும் புறநானூறு பாடல்களில் குறிப்பிடப்படவில்லை என்ற காரணத்தினால் கரிகாலரின் வடநாட்டுப் படையெடுப்பு ‘இல்லை’ என்று ஆகிவிடாது. கரிகாலரின் காலத்தில் இயற்றப்பட்ட பாடல்கள் அவரது படையெடுப்பு நிகழ்வதற்கு முன் கூட இயற்றப்பட்டிருக்கலாம் அல்லது அதற்கு போதிய முக்கியத்துவம் அக்காலத்தில் கொடுக்கப்படாமல் கூட இருந்திருக்கலாம். கரிகாலரின் இமயப் படையெடுப்பை உள்ளடக்கிய பாடல்கள் நமக்குக் கிடைக்காமலும் போயிருக்கலாம்.

சேர மன்னன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோவடிகளின் பெரும் காப்பியமான சிலப்பதிகாரம், பிற்காலச் சோழர் குலோத்துங்கனது கால போர் இலக்கியமான கலிங்கத்துப்பரணி, ஒட்டக்கூத்தரின் குலோத்துங்க பிள்ளைத் தமிழ் மற்றும் பிற்காலப் பாண்டியன் கி.பி பதிமூன்றாம் நூற்றாண்டின் முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியனின்திருவள்ளறைக் கல்வெட்டு ஆகியவற்றில் சோழப் பேரரசர் கரிகாற் பெருவளத்தானின் வடநாட்டுப் படையெடுப்பிற்கான ஆதாரம் இருக்கின்றன. மேற்கண்ட தகவல்களை தனித்தனியாக நோக்கினால் அது வெறும் செய்தியாக மட்டுமே நமக்கு கிடைக்கும். ஆனால், அனைத்தையும் ஒன்றிணைத்து நோக்கினால் கரிகாலரின் வடநாட்டுப் படையெடுப்பிற்கான உறுதியான ஆதாரம் கிடைக்கும்.

சேரன் செங்குட்டுவரின் தம்பியும், புலவருமான இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில்
இரு நில மருங்கின் பொரு நரைப் பொறாஅச்

செருவெங்காதவின், திருமாவளவன்

வாளும், குடையும் மயிர்க்கண் முரசும்,

நாளொடு பெயர்ந்து. “நண்ணார்ப் பெறுக; இம்

மண்ணக மருங்கின்என் வலிகெழு தோள்”, என்ப

புண்ணிய திசைமுகம் போகிய அந்நாள்,

அசைவில் ஊக்கத்து நசை பிறக்கு ஒழியப்,

இமையவர் உறையுஞ் சிமையப் பிடர்த்தலைக்

கொடுவரியொற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு

மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்

கோன் இறை கொடுத்த கொற்றப்பந்தரும்,

மகத நன் நாட்டு வாளவாய் வேந்தன்

பகைப் புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்,

அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த

நிவந்தோங்கு மரபின் தோரண வாயிலும்,

பொன்னினும் மனியிலும் பனைந்தன ஆயினும்

நுன்வினைக் கம்மியர் காணா மரபின;

துயர்நீங்கு சிறப்பினவர் தொல்லோர் உதவிக்கு

மயநன் விதித்துக் கொடுத்த மரபின; இவை தாம்

ஒருங்குடன் புணர்ந்தாங்கு உயர்ந்தோரேத்தும்

அரும் பெறல் மரபின் மண்டபம்...  (சிலம்பு  5: 89 – 110)

‘பரந்த இவ்வுலகில் தன்னோடு எதிர்த்துப் போரிடும் அரசர் எவரும் இல்லாததால் போர் ஆர்வம் மிக்க கரிகால்  திருமாவளவன் வான், குடை மயிர் நீக்காத தோல் போர்த்த எதிர்க்கவல்ல பகைவரைப் பெறலாம் என்ற வேட்கையால் வடநாடு நோக்கிச் சென்றபோது, இமையவர் இருக்கும் இமயப் பெருமலை அவன் ஆசை அழியுமாறு இடை நின்று தடுத்து, அவன் ஊக்கத்தை உருக்குலைத்து விடவே அம்மலையின் மீது பெரும் சினம் கொண்டு அதன் பிடரியில் தன் புலிச் சின்னத்தைப் பொறித்துவிட்டுத் திரும்பினான் கரிகாலன். மனம் சலித்து மீள்பவனுக்குக் கடல் அரண் கொண்ட வச்சிர நாட்டு அரசன் திறையாகக் கொடுத்த முத்துப் பந்தர், வாட்போரில் வலிமையான மகதத்து மன்னன் கரிகாலருடன் போரில் தோற்றுக் கொடுத்த பட்டிமண்டபம், அவந்தி வேந்தன் உவந்து அளித்த தொழில் நலம்பிக்க வாயில் தோரணம் என்ற பொன்னும், மணியும் கொண்டு தொழில் வல்ல கம்மியனால் பண்ணப்படாத, இவர்களின் குல முன்னோர், தனக்கு இடர் வந்துற்ற போது, ஓரொரு கால் செய்த உதவிகளுக்குக் கைம்மாறாக மயனால் செய்து கொடுக்கப்பட்ட இம்மூன்றையும் வைத்து உயர்ந்தோர் ஒன்று கூடிவந்து ஏத்தும் மண்டபம்’ எனக் கரிகாலரின் வடநாட்டுச் செலவு பற்றி இளங்கோவடிகள் கூறுகிறார்.


பிற்காலச் சோழர் குலோத்துங்கனின் அவைக்களப் புலவர் செயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணி இராசபாரம்பரியம் பகுதியில் குலோத்துங்கனின் முன்னோரின் புகழினைக் கூறும் இராசபாரம்பரியத்தில் கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பு பற்றியும் அவன் தனது புலிக்கொடியை இமயத்தில் பொறித்ததைப் பற்றியும் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

செண்டு கொண்டு கரிகாலன் ஒரு காலின் இமயச்

சிமைய மால்வரை திரித்து அருளி மீள அதனைப்

‘பண்டு நின்றபடி நிற்க இது’ என்று முதுகில்

பாய் புலிக் குறிபொறித்து, அது மறித்த பொழுதே.(பட்டினப்பாலை இராசபாரம்பரியம் - 179)
‘கரிகாற்சோழன், தமிழகத்தில் தன்னோடு எதிர்த்துப் போர் புரியும் பகைவர் எவரும் இல்லாததால் வடதிசையை நோக்கிப் படையெடுத்தான். எதிர்த்த மன்னர்கள் அனைவரையும் போரில் தோற்கடித்து வடக்கு நோக்கிச் சென்ற சமயத்தில், சிகரங்களையுடைய பெரிய மலையாகிய இமயமானது அவனை மேலே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியது. அதனால் சினங்கொண்ட கரிகாலன் தன் கைச் செண்டால் அம்மலையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டான். அவ்வாறு புரட்டியவன், “இம்மலை முன்பு நின்றது போலவே நிற்கட்டும்” என்று எண்ணி, பாய்ந்து செல்லும் புலியின் வடிவம்பொறித்த தனது  கொடியை அம்மலையின் முதுகில் பதித்து, அம்மலையை மீண்டும் முன்போல நிலை நிறுத்தினான்’ என்று கரிகாலரின் வடநாட்டுப் போரைப் பற்றி இலக்கிய சுவையுடன் கூறுகிறார் செயங்கொண்டார்.

தத்து நீர் வரால் குருமி வென்றதுந்

தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன்

பத்தொடு ஆறுநூறு ஆயிரம் பெறப்

பண்டு பட்டினப் பாலை கொண்டதும்(இராசபாரம்பரியம்-199)

‘வரால் மீன்கள் துள்ளிப் பாய்கின்ற தடாகங்களை உடைய ‘குருமி’ (இந்தக் குருமி என்பது எந்த நகரம் என்று அடையாளம் காண இயலவில்லை) என்னும் நாட்டை வெற்றி கொண்ட தன்மையும், இனிமை பொருந்திய செந்தமிழ்ச் செய்யுளைப் பாடும் கவிவாணராகிய ‘கடியலூர் உருத்திரங்கண்ணனார்’ பதினாறு இலட்சம் பொன்னைப் பரிசாகப் பெறும்படி, முன்பு ‘பட்டினப்பாலை’ என்னும் நூலைத் தனக்கு உரிமையாகக் கொண்ட தன்மையுடையவர்’ என்று கவிச்சக்கரவர்த்தி செயங்கொண்டார் சோழப் பேரரசர் கரிகாலரின் இமயச் செலவு மற்றும் பட்டினப்பாலைக்கு பரிசளித்ததைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

கவிச்சக்கரவர்த்தி சோழப் பேரரசர் கரிகாலரின் இமயப் படையெடுப்பைப் பற்றி குறிப்பிடும் அதே வேளையில் ஒட்டக்கூத்தர் இயற்றியுள்ள குலோத்துங்கன் பிள்ளைத் தமிழில்

முழுகுல நதிக்கரசர் முடிகொடு வகுத்தகரை

முகில்தொட அமைத்தது அறிவோம்

இருபுறமும் ஒக்க நினது ஒருபுலி பொறிக்க வட

இமகிரி திரித்தது அறிவோம்.

என கரிகாலர் காவேரியின் இரண்டு கரைகளுக்கும் கரை எடுத்ததைப் பற்றியும், இமயப் படையெடுப்பு பற்றியும் குறிப்பிடுகிறார். மற்றொரு பாடலில்

அன்று கவிக்கு வியந்து நயந்து தரும் பரிசிற் கொடுபோர்

ஆழியில் வந்து தரா தலம் நின்று புகாரில் அனைத்துலகும்

சென்று கவிக்கு மகத்தது தூண் வயிரத்தினு முத்தினிமெய்

செய்ததொர் பொற்றிரு மண்டபம் நல்கிய செயகுல நாயகனே'

என்று பட்டினப்பாலை இயற்றிய கடியலூர் உருத்திரங்கண்ணனாருக்கு பதினாறு நூறாயிரம் பொன் மற்றும் பட்டி மண்டபத்தையும் கரிகாலர் பரிசாக அளித்தார் என்று ஒட்டக்கூத்தர் கூறுகிறார்.இந்த மண்டபம் கரிகாலர் வடநாடு சென்றபோது அவரை எதிர்த்துத் தோற்ற மகத மன்னன் அளித்த பட்டி மண்டபம் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறுகிறார்.

இப்படி கரிகாலரின் வட இந்தியப் போர் மற்றும் கடியலூர் உருத்திரங்கண்ணனாருக்கு கரிகாலர் அளித்த பதினாறு நூறாயிரம் பொன் மற்றும் பட்டி மண்டபம் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் மட்டுமே கிடைக்கும் வேளையில் முதல் முறையாக சோழர் அல்லாத பாண்டியர் கல்வெட்டில் அதாவது கி.பி 13ம் நூற்றாண்டின் முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியனின் திரு வள்ளறைக் கல்வெட்டில் கரிகாலரின் வட இந்தியப் போர் பற்றிய தகவல் மறைமுகமாகப்  பொதிந்து கிடக்கிறது.

வெறியார் தளவத் தொடைச் செயமாறன் வெகுண்டதொன்றும்

அறியாத செம்பியன் காவிரி நாட்டிலரமியத் துப்

பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக் கன்று

நெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே.

மாறவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி 13 ம் நூற்றாண்டில் சோழ நாட்டின் மீது படையெடுத்து சோழ நாட்டின் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தையும், அவர்களின் அரண்மனை இருந்த பழையாறை மற்றும் தஞ்சை நகரத்தையும் அழித்து சூறையாடினான். சோழ நாட்டின் பெரும்பட்டினங்கள் அனைத்தையும் அழித்த மாறவர்மன் சுந்தர பாண்டியன் புகாரில் கரிகாலரால் புலவர் உருத்திரங்கண்ணனாருக்கு அளித்த பதினாறு கால் பட்டிமண்டபத்தை மட்டும் புலவரின் மீதும் கரிகாலரின் மீதும் கொண்ட பெரும் மதிப்பினால் அழிக்காமல் விட்டுச் சென்றான் என்று கூறுகிறது மேற்கூறிய கல்வெட்டு.
சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, குலோத்துங்கச் சோழனுலா போன்ற இலக்கியச் செய்தி அல்லாமல் கரிகாலரின் வடநாட்டுச் செலவு பற்றி மறைமுகமாக செய்தி குறிப்பிட்டிருப்பது இந்தப் பாண்டியக் கல்வெட்டு ஒன்றில்தான். இந்தக் கல்வெட்டில் மாறவர்மன் சுந்தர பாண்டியன் ‘கரிகாலர் உருத்திரங்கண்ணனாருக்கு அளித்த பதினாறு கால்களை உடைய மண்டபத்தை மட்டும் இடிக்காமல் சென்றான்’ என்று கல்வெட்டில் கூறுவதால் கரிகாலர் உருத்திரங்கண்ணனாருக்குப் பட்டி மண்டபத்தைப் பரிசாக அளித்தார் சென்ற செய்தி உறுதியாகிறது. அந்தப் பட்டி மண்டபம் எங்கிருந்து கிடைத்தது என்றதை நோக்கினால் கரிகாலரின் வட நாட்டுப் படையெடுப்பின்போது தோல்வியடைந்த மகத நாட்டு மன்னனால் கப்பமாக கட்டிக் கொடுக்கப்பட்டது விளங்கும்.

மகத மன்னன் கரிகாலருக்கு அளித்த பட்டி மண்டபம் இருந்தது உண்மை என்றால் கரிகாலரின் இமயப் படையெடுப்பு நிகழ்வும் உண்மை என்பது விளங்கும்.

கரிகாலரின் இமயப் படையெடுப்பை பராந்தகச் சோழனின் 25 ஆவது ஆட்சி ஆண்டு (பொ.யு.பி 932) வேளஞ்சேரி செப்பேட்டுச் சுலோகம் 8குறிப்பிடுகிறது.

ப்ராலேயாத்ரி-தடேஷீ யஸ்ய ந்ருபதே: சக்ரே பத3ம் கூவேரி

காவேரீ தட-யுக்3ம-ருத்3த4-ஸலிலா ஜாதா சராஜ்ஞா-வசாத்

யச்யாஜ்ஞைவ சகார காஞ்சீ-நக3ரீம் ப்ரஸாத3- லேலாம்பு3தா3ம்

சோளேந்த்3ர-கரிகால-ஸம்ப4வம4த் பி3ப்4ரத்-கு3ணை: தத்குலே   - 8

பனிமலையின் தடத்தில் தனது ஆணையால் குபேரனின் வளமையை (அழகை) உண்டாக்கியவனும் காவிரியை இருகரைகளுக்குள் அடங்கிய நீருள்ளவலாய் செய்தவனுமான கரிகாலன் என்னும் சோழர் குல இந்திரன் பிறந்தான். அவன் நற்குணங்களை உடையவன்.அவனது ஆணையால் காஞ்சி நகரம் மேகத்தைத் தொடும் அரண்மனைகளை உடையதாயிற்று.

கரிகாலரின் இமயப் படையெடுப்பை பெரியபுராணத்தில் சேக்கிழார் பின்வருமாறு கூறுகிறார்.

பொன் மலைப் புலி வென்று

ஓங்கப் புதுமலை இடித்துப் போற்றும்

அந் நெறி வழியே ஆக

அயல் வழி அடைத்த சோழன்  (பெரியபுராணம் 552 : 1 – 4)

இதை விடவும் வலிமையான ஆதாரம் வேண்டுமென்றால் வடக்கே சிக்கிம் மாநிலத்தில் அமைந்திருக்கும் சோல கணவாய், சோல மலைத்தொடர் மற்றும் புலி மலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வடக்கிலிருந்து தெற்கு நோக்கிக் கள ஆய்வு மேற்கொண்டால் மட்டுமே கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
கரிகாலரின் காலம்:

கரிகாலரின் தந்தை மோரியரை எதிர்த்து ஓட்டிய உருவப் பஃதேர் இளஞ்சேட் சென்னி என்பதால் கரிகாலன் பொ.யு.மு (230-175) ஆக இருக்கலாம்.

கரிகாலரின் வடசெலவு பற்றி ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள் பலரும் குறிப்பிடும் காலம்

1.       மகத மன்னன் அசாதசத்து’வின் கடைசி காலம் அல்லது அவனது மகன் உதயனின் ஆட்சிக் காலம் (கி.மு 462 க்கு அண்மையில்)

2.       அசோகனுக்குப் பிற்பட்ட மௌரியர் காலம் (கி.மு. 232 – கி.மு. 184)

3.       புஷ்யமித்திர சுங்கனுக்குப் பிற்பட்ட காலம் (கி.மு. 148 – கி. மு. 27)

4.       கலிங்கத்தின் மகாமேகவாகன மன்னன் காரவேலனுக்கு பிற்பட்ட காலம் (கி.மு 170க்குப் பிற்பட்ட காலம்)

5.       ஆந்திரர் ஆட்சி குன்றிய காலம் (கி.பி. 163 – 300)

இந்த ஐந்து காலங்களையும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடக் காரணம் இந்தக் காலகட்டத்தில் தான் வடநாட்டு ஆட்சியாளர்கள் மிகவும் பலவீனமாக இருந்திருக்கிறார்கள். மேற்கண்ட மன்னர்களுக்குப் பிற்பட்ட பலவீனமான காலத்தில் தான் கரிகாலரால் வடக்கு நோக்கி படையெடுத்திருக்க முடியும் என நினைப்பது எந்த வகையில் சரி என்று தெரியவில்லை.

பிறப்பதற்கு முன்னே தந்தையையும், பிறகு தாயையும், வளரும் போது தனது நாட்டையும் இழந்து எதிரிகளால் கோட்டையில் சிறைவைக்கப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்ட காலத்தில் அங்கிருத்து தப்பித்  திரிந்து யாருடைய உதவியும் இல்லாமல் தனது நாட்டைக் கபளீகரம் செய்ய படையெடுத்த சேரர், பாண்டியர், சிங்கள மற்றும் ஒட்டுமொத்த தென்னகத்தின் பதினொரு வேளிர்களையும் வெண்ணியில் அழித்த பெரும் வீரன் கரிகாற் பெருவளத்தான். இப்படிப்பட்ட மாவீரனான கரிகாலன் ‘வடக்கே இருக்கும் ஆட்சியாளர்களின் வலிமை குன்றிய காலத்தில் தான் படையெடுத்து இமயத்தை அடைந்திருக்கமுடியும்’ என எண்ணி அவனது காலத்தை வரையறுக்க முயல்வது அவனது வீரத்தை அவமதிப்பதைப் போன்றது என்று கருதிகிறேன் நான்.

அடிக்குறிப்பு:

1.       ‘இராசாவளி’ என்பது இலங்கையின் வரலாற்றைக் கூறும் பிற்கால நூல். கரிகாலன் இலங்கையின்மீது படை யெடுத்துச் சென்று 12 ஆயிரம் இலங்கை மக்களைச் சிறை செய்து தன் நாட்டுக்குக் கொண்டு வந்து காவேரியில் அணை எழுப்பினான் என்று கூறுகிறது.

2.          புறநானூற்றின் 3 மூன்றாவது பாடலை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியாத காரணத்தினால் அப்பாடலில் வரும் ‘இரும்பிடர்த் தலை’ என்ற சொல்லைக் கொண்டு புறநானூற்றைத் தொகுப்பித்தவர் ‘இரும்பிடர்த்தலையர்’ எனும் பெயரை ஆசிரியர் பெயராக சேர்த்தார் என்ற கருத்தும் உண்டு. பழமொழி நானூறு பாடலும், அதன் கொலுக் குறிப்பும் ‘இரும்பிடர்த்தலையர்’ எனும் பெயர் கற்பனைப் பெயராக இருக்கும் என்ற கருத்தை பொய்யாக்கி இருக்கிறது.

கட்டுரை: சி.வெற்றிவேல்...

படம் : இணையம்


14 comments:

  1. அருமையான பதிவு

    ReplyDelete
  2. கவின்மொழிவர்மன்April 30, 2017 at 2:09 AM

    அருமையான் பதிவு.
    திக்கெட்டும் பரவட்டும் சோழன் புகழ்

    ReplyDelete
  3. உங்களின் இந்த சிறப்பான பதிவுக்கு நன்றி வெற்றிவேல்.... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  4. அருமை வாழ்த்துகள் நண்பரே..

    ReplyDelete
  5. அருமை நண்பா வாழ்த்துகள் பல

    ReplyDelete
  6. Useful information for history loving people and research groups to ponder upon.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. அருமையான பதிவு நண்பரே....

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. அருமையான ஆய்வுக் கட்டுரை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. ஆழமான வரலாற்று செய்திகள்

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள்

    ReplyDelete