Monday, November 6, 2017

தாழைபுரீஸ்வரர் ஆலயம் , செந்தாழை

தாழைபுரீஸ்வரர் ஆலயம் 
ஊர் : செந்தாழை 

கட்டுரை , படங்கள் ; கவின்மொழிவர்மன்


செந்தாழை மணங்கமழும் திரிவிதகங் காநதி சூழ் தேவர் போற்றும்
செந்தாழாம் பிகைபாகன் தாழைபுரீ சன்றிருமால் தேடிக் காணாச்
செந்தாளன் றிருவடிக்கு அடியார்கள் அடியார்தந் திறத்தைப்பேணி
செந்தாழைப் பணிந்துபவந் தீர்த்தின்ப வீட்டுநலஞ் சேர்ந்து வாழ்வாம்!

பொருள்;-

தாழை மலர்களில் கிடைத்தற்கரிதான ஒன்று செந்தாழை மலர்.

இயல்பாக எல்லா இடங்களிலும் வெள்ளை மற்றும் மஞ்சள் வண்ணத் தாழை மலர்களையே காணவியலும்.

இந்த ஊரில் சிறப்பாக செந்தாழை காணப்பட்டதால் மலரின் பெயரே ஊருக்கும் அமையப்பெற்றது.
இப்போது பாடலின் விளக்கத்தை காண்போம்.

செந்தாழை மணங்கமழும்

-செந்தாழம்பூவின் மணம் வீசுகின்ற,

திருவிதகங் காநதி சூழ் தேவர் போற்றும்-

கங்கையில்கூட இறைவனுக்கு கங்கையானவள் ஒரே பக்கமிருந்து வந்து மாலை அணிவிப்பதுபோல் இறைவனின் கழுத்தில் சூடிக்கொள்வாள்.

ஆனால் இங்கு கங்கையானவள் மூன்றுப்புறமிருந்தும் வந்து ஒருசேர இறைவனின் பாதகமலத்தில் மாலையென நின்று வெளியேறுகிறாள்.
அத்தகைய பெருமைவாய்ந்த இவ்வூருக்கு தேவர்கள் புடைசூழ வந்து வணங்கி இங்கு வரும் பக்தர்களுக்கு சகல செல்வங்களும் வழங்குவர் என்பது பொருள்.

செந்தாழாம் பிகைபாகன் தாழைபுரீ சன்றிருமால் தேடிக் காணா

இங்கு வீற்றிருக்கும் அம்பிகையின் பெயர் செந்தாழாம்பிகை.
செந்தாழாம்பிகையின் பாகன் என்பது அம்பிகைக்கு தனது சரிபாதியைக் கொடுத்தவன் என்பது பொருள்.

அத்தகைய செந்தாழாம்பிகை பாகனை தாழைபுரீசனை. செந்தாழையில் நிலைபெற்றிருக்கும் ஈசனை திருமால் தேடியும் கிடைக்காத என்பதுபோல் பாடல் தொடர்கிறது.

செந்தாளன் றிருவடிக்கு அடியார்கள் அடியார்தந் திறத்தைப்பேணி

அதாவது சிவனது அடியையும் முடியையும. காணவேண்டி திருமால் இந்த செந்தாழைவாசனின் அடியை காணமுடியாமல் இருக்கும் இந்த நாதனுக்கு ஈசனின் அடியார்களாகிய நாங்கள் அவரவர் எங்களின் சக்திக் கியன்றவாறு

செந்தாழைப் பணிந்துபவந் தீர்த்தின்ப வீட்டுநலஞ் சேர்த்து வாழ்வாம்

இங்கு செந்தாழை என்பது இறைவன் வாழும் இடத்தையும் சொல்லலாம்.
மூன்று கங்கையானவள் கூடுவதையும் கூறலாம்.
தாழைவா ழீசனையும் கூறலாம்.

அவ்வாறெனின் செந்தாழைப் பணிந்து-ஈசனை வணங்கி
 பவந்- பிறப்பு இல்லாத முக்தி நிலையை அடைந்து

 வீட்டுநலஞ் சேர்த்து வாழ்வாம்
வீடுபேறு அடைந்து இனிப்பிறவா நலம்பெற்று வாழலாம் என்று இப்பாடல் முடிவடைகிறது.

குறிப்பு;-

தற்போதுள்ள தாழைபுரீஸ்வரர் ஆலயம் அடியார்களால் எடுத்துக்கட்டப்பட்டது என்பதும் ஊரின் பழைய பெயர் செந்தாழைதான் என்பதும் பாடலின் மூலம் உறுதியாகிறது.
மேலும் இந்த கோவிலில் உள்ள லிங்கத்தில் பாணலிங்கமும் நந்தியும் மட்டுமே பழமையானது.

மேலும் இதன் மூலக்கோவிலானது தற்போது உள்ள கோவிலுக்கு தெற்கே மலையடிவாரத்தில் உள்ள ஒரு ஏரிக்கரையில் அமைந்திருந்திருக்கின்றது.,

முகாலய படையெடுப்பில் கோவில்களெல்லாம் அழிக்கப்பட்டப்போது எஞ்சிய பாகங்கள் தாழையாற்றின் வழியே அடித்துசெல்லப்பட்டு மண்ணில் புதையுண்டுக்கிடந்ததை மீட்டெடுத்து அடியார்கள் ஒன்றுகூடி தங்கள் திறமைக்கேற்ப இப்போதுள்ள ஆலயத்தை எடுப்பித்துள்ளனர்.
முன்பு கோவில் இருந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டோமே
யானால் மேலும் தகவல்கள் அறியப்படலாம்.

இன்று தம்மம்பட்டி என்றும் முன்பொரு காலத்தில் தர்மநகர் என்றும் வழங்கப்பட்ட தேவமரி என்னும் ஊரைப்பற்றி வேறொரு கட்டுரையில் காண்போம்.