Saturday, August 12, 2017

தடங்களைத் தேடும் தடங்கள் 1/2

உத்தமசீலி சதுர்வேதி மங்கலம்

தடங்களைத் தேடும் தடங்கள்
தடம் 1 பயணம் 2


(எழுத்து/படங்கள் : திருச்சி பார்த்தி


கடந்தமுறை நாங்கள் பகிர்ந்த சில அனுபவங்களின்  தொடர்ச்சி இந்தப்  பகுதி.  வாருங்கள் பயணிப்போம் 🚶🚶🚶

'சிதிலமடைந்த (அ) உருமாற்றபட்ட இந்த இரு கோவிலைக்  காணவா, 25 கி.மீ பயணித்து வந்தோம்'  
என்ற சிறு அயர்ச்சி மனதில் நிழலாடியது!  ஆயினும் உள்மனது 'இங்கே ஏதோ ஒன்று இருக்கும்,  நிச்சயம்' என்று நினைத்த அந்நினைப்பு ஒருபுறம் இருந்தது,  அர்ச்சகர் கூறியது வேறு, நினைவில் வந்தது!
பசி வேறு வயிற்றைப்  பிசைந்தது,  சரி முதலில் சாப்பிடுவோம் என்று,  அருகேயுள்ள கம்மங்கூழ் கடையில், சிறிது பசியாறிவிட்டு,  கடைக்காரரிடம் சிறிது பேச்சுக்  கொடுத்தோம்,  'அருகே பழைய சிவாலயம் ஏதும் உள்ளதா ஆங்ஙான்?' என்று. அவர், 'வடக்கே சிறிது கொள்ளிடக்  கரையோரம் 4 கிமீ போனா ஒரு கோவில் இருக்கு, நல்ல பெரிய கோவில். சீக்கிரம் போங்க! நடை சாத்திடுவாங்க' என்று அவசரப்படுத்தினார்,
'ஆஹா, மகிழ்ச்சி ஆங்ஙான்' என்று அவருக்குப் பணத்தைக்  கொடுத்துவிட்டுக்  கிளம்பினோம்.  சரியான கிராமத்துப்  பாதை,  வழிநெடுக மண்தான்,  தார், மருந்திற்கும் கூட கண்ணில் படவில்லை.  எங்குகாணினும்,  சிறுசிறு முட்கள்,  சிறிய அரளைக்கல் வேறு,  வாகனம் பஞ்சர் ஆனால் அவ்வளவு தான்,  அருகே போய் ஆளைக்  கூட்டிவருவதற்குள் தாவுதீர்ந்துவிடும்!  மெல்லமாய் புதுமாப்பிள்ளை ஊர்வலம் போல் சென்றோம்,  பின் ஒருவாறு கோவிலைக்   கண்டோம்! 
கோவிலின் பிரம்மாண்டத்திற்கு முன் இதெல்லாம் ஒரு விஷயமல்ல என்று மண்டையில் உரைத்தது!  
நாங்கள் சென்றது வெள்ளிக்கிழமையாதல், கோவிலில்சிறிது கூட்டம் இருந்தது!  மணி சரியாக 12.30 ஆனது!  நடை சாத்தும் நேரம் விறுவிறுவென  குழாயடியில் கைகால்களை சுத்தம் செய்து மூலவரை தரிசிக்கச் சென்றோம்.
கோவிலின் சில விவரங்கள் கீழே:

திருவானைக்காவலிலிருந்து  கல்லணை செல்லும் வழியில் கொள்ளிடக்கரையில் அமைந்துள்ள இந்த .

ஊர், திருப்பாற்றுறை (எ) திருப்பாலத்துறை என்ற பெயர் கொண்டது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 59வது தலம் ஆகும்.




மூலவர்: ஆதிமூலேஸ்வரர் (திருமூலநாதர்)
உற்சவர்: சோமாஸ்கந்தர்
தாயார்: நித்யகல்யாணி
தல விருட்சம்: வில்வம்
நடையடைக்க நேரமானதால் அர்ச்சகர் வெளியேற அவசரப்படுத்தினார்.
சரி கோவிலைச் சுற்றி வரலாம் என்று சென்றால்.....




 ஆஹா,! வியந்தோம் என்றால் அது மிகையல்ல,  முழுக்க முழுக்க கல்வெட்டுகள், அழகிய சிற்பங்கள்! 
இன்றைய பயணமே இதைக்  காணத்தானோ  என்பது போல்அமைந்தது!




அர்ச்சகர் நச்சரிப்பு வேறு!  பின் அவரிடம்சென்று நம் குழுவின் நோக்கத்தையும்,  நாங்கள் கடந்துவந்த சிரமத்தையும் கூறி ஒருவாறு அரைமணிநேரம் அனுமதி பெற்றோம்!
கல்வெட்டுச்  சிறப்புக்களை சிறிது காண்போம்:


1.பராந்தகரின் 13,20 ஆட்சியாண்டு கல்வெட்டுகள்

2.கண்டராதித்தர் கல்வெட்டு
3.உத்தமசோழரின்  3,5,8,15 ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள்
4.ராஜராஜரின்12,14 ம் ஆட்சியான்டு கல்வெட்டுகள்
5.ராஜேந்திரரின் 3,5 ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள்
6.முதலாம் குலோத்துங்கனின் 12ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள்
7.விக்ரம சோழன் கல்வெட்டு 
8.சுந்தரபாண்டியனின் 9 ம் ஆட்சியாண்டு கல்வெட்டு
9.குலசேகர பாண்டியனின் 12 ம் ஆட்சியாண்டு கல்வெட்டு 
ஆகியன கிடைக்கின்றன
.

கல்வெட்டில் இவ்வூர் இறைவன் உறையூர் கூற்றத்து, தென்கரை பிரம்மதேயம், உத்தமசீலி சதுர்வேதி மங்கலத்து திருப்பாற்றுறை மஹாதேவர் என குறிக்கப்படுகிறார்.
அரசகுடும்பத்தினர் இங்கு நிறைய நிலதானம், திருவிளக்கு தானம்,  நெய்த்தானம் அளித்துள்ளனர்.
அவர்களின் பெயர்களைப்  பார்ப்போம்:
நங்கை பூதிமாதேவடிகள், அறிஞ்சிக்கை ஆதித்தன் நம்பிராட்டியார், 
மேலும் அதிகாரிகள் பலரும் நிவந்தம் கொடுத்துள்ளனர் :
அவர்கள் பெயர்கள் இதோ :செம்பியன் ஏழுவரையன் பாழிநக்கன்,  தென்னவன் இளங்கோவேளாயினான மறவன் பூதியார்,  நங்கை கற்றளிபிராட்டியார்,  நக்க நறிஞ்சிகை மாராயன், வீரசோழ இளங்கோவரையன், மாறன் குடித்தலையாச்சான், சிறைமீட்டான் திருவேங்கடமுடையான்,
இவர்கள் அல்லாது ஊர்மக்கள் சிலரும்தானம் கொடுத்துள்ளனர்,  
அவற்றில் சிலரதுபெயரைக்  காண்போம் :
பாண்டிநாட்டு அல்லூருடையான் கவனப்பி, கிளிஞலூர் கிழவன் மாகன், புறத்து வெளார் மணவாட்டி அல்லியரசியார், கிழவன் கொலோத்துங்க சோழ விஜயபாலன்.. 

பெரும்பாலும் கோவிலுக்கு நிவந்தம் கொடுத்தல்,  மாலைசாற்றுதல்,  நந்தாவிளக்கு தானமளித்தல்,  கோவிலுக்குரிய நிலங்கள் அவற்றை பராமரிக்கும் ஊழியர்கள்,  உவச்சப்பணி, இவற்றின் குறிப்பே அதிகம் காணக்கிடைக்கிறது!

உத்தமசோழரின் 13ம் ஆட்சியாண்டில் சித்திரைவிசு,  ஐப்பசி விசு நடத்த நிலதானம் கொடுத்துள்ளார். அதை ராஜராஜர் தனது 16 ஆம் ஆட்சியாண்டில் அதனை மேற்கோள்காட்டி விழா நடத்த மீண்டும் உத்தரவிடுகிறார்,  சுந்தரபாண்டியன் தனது 9வது ஆட்சியாண்டு கல்வெட்டில் அவரது அதிகாரியான கேரளாந்தக விழுப்பரையன் என்பவரது சிறைக்காவலிலிருந்து ஒருவர் தப்பிவிடுகிறார்,  கடமையை செய்யதவறிய அவரையும்,  அவரது மருகனையும், அவனது தம்பியையும் எவ்வாறு தண்டித்தார் சுந்தரபாண்டியர் என்ற குறிப்பும் உள்ளது! 

அரைமணிநேரம் முடிந்தது, அர்ச்சகர் முறைக்க ஆரம்பித்தார். பின் எங்கள் ஆர்வத்தைப்  பார்த்து மனமிறங்கி மூலஸ்தானத்தைப்  பூட்டிவிட்டு, வளாக சாவியை நம்பிக்கையுடன் கொடுத்துவிட்டுச்  சென்றார். வெயில் சுட்டெரித்தது!  வெறுங்காலில் அவ்வப்போது நிழலில் ஒதுங்கி தேடலைத்   தொடர்ந்தோம்.


சிற்ப சிறப்புகள் :



வீணைதாரர் 
இங்குள்ள வீணைதாரர் சிற்பம் மிக அழகானது,  வீணை உடைந்தாலும், பின்னர் புனரமைப்பில் சீர்செய்யப்பட்டுள்ளது
..
பிக்ஷாடனர் 
பிக்ஷாடனார் சிலை மிகவும் உயிரோட்டமாய் உள்ளது! காலுக்கும், கோஷ்டத்திற்கும் இடையேயுள்ள இடைவெளி கூட அழகாய் செதுக்கப்பட்டுள்ளது நனிசிறப்பு. 


நின்ற விநாயகர் 
விநாயகர் சிற்பம் நின்ற நிலையில் தெற்குப்புற சுவற்றில், தலைமேல் வெண்கொற்றக்  குடை, சாமரங்களுடன் அழகாய் செதுக்கப்பட்டுள்ளது!


மேலும் இங்கு உத்தமசீலி வாய்க்கால், ஆதிச்ச வாய்க்கால் என்று இருவாய்க்கால் இருந்ததற்கு கல்வெட்டு குறிப்புள்ளது! 
12.30 ற்கு ஆரம்பித்த தேடல் 4 மணிவரை நீடித்தது!

அர்ச்சகரே நடைதிறக்க மீண்டும் வந்துவிட்டார்.
இதற்குமேல் தேடினால் அவ்வளவு உசிதமில்லை என்று!
அர்ச்சகருக்கு நன்றியுரைத்துவிட்டு மனநிறைவுடன் கிளம்பினோம்.

தடத்தின் அடுத்த பயணத்தில பொன்னியின் செல்வனின் கதாநாயகன் "வந்தியத்தேவன்" இறந்ததாய் புரளி கிளம்பிய (🤣) திருநெடுங்களத்தில் சந்திப்போம்.


நன்றி

Friday, August 11, 2017

சிற்பங்களின் அடையாளம் - 9


சிற்பங்களை அடையாளம் காண்பதில் இன்று....
     " ரிஷபாரூடர்"


தர்மதேவதையே ரிஷபமாக மாறி சிவனை அடைந்தாள்
என்பார்கள்.. 

பெருமாளே காளை உருக் கொண்டு சிவனுக்கு வாகனமானார் என்பார்கள்...

இந்த ரிஷபம் வேறு.. நந்திதேவர் வேறு..

சிவபெருமான் ரிஷபத்தின் மீது சாய்ந்தபடி,  இடக்காலை
ஊன்றி, வலக்காலை ஒய்யாரமாக தாங்கி நிற்பார்.
சில சிற்பங்களில் பார்வதியும் இருப்பார்.

இதுவே ரிஷபாரூடர் ஆவார்.


அனைத்து ஆலயங்களிலும் தவறாமல் காணப்படுகிறார்.

பல வடிவங்களில் ரிஷபத்துடன் சிவன் இருக்கும் சிற்பம்
நம்மை பரவசமடையச் செய்யும்..

ரிஷபாந்தகரை நமக்கு அறிமுகம் செய்த பெருமை 
பல்லவச் சிற்பிகளையே சேரும்..

இது மாமல்லபுர ரிஷபாந்தகர். 

பொறுமையாய் நன்கு அவதானித்து சிற்பத்தைப் பாருங்கள்..

பரமேஷ்வரனின் ஒய்யார வடிவம்.. அவரது சிகை அலங்காரம்.. சடைமுடியை சுற்றிக்கட்டிய பட்டை.
ஒரு கரத்தை காளையின் மேல் வைத்து., ஒரு காலை
தரையில் ஊன்றி,  மறு காலை மடித்து,  உடம்பை
சாய்த்து,  ஒரு ஏகாந்த புன்னகை..

பார்த்துக்கொண்டேயிருக்கலாம் இதை..

(புகைப்படம் - Poetry in stone Vijay)                    

இது .. நம்ம புள்ளமங்கை ரிஷபாந்தகர்..

இதைவிட அழகாய் இவ்வுலகில் வேறொன்று உள்ளதோ..

புள்ளமங்கை கோபுரத்தில் இருக்கிறார்..

பொறுமையாய் .. சிற்பத்தை வரி வரியாய் பாருங்கள்.
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.. வர்ணிப்புக்கும்
அப்பாற்பட்ட ஒன்று....

ஒன்றை மட்டும் தவறவிடாதீர்கள்..

அந்தக்  காளை தன் நாவை நீட்டி .. தன் எஜமானின் தொடையை  வருடுகிறது.. அந்த ஸ்பரிசம் தந்த 
புளகாங்கிதம் எஜமானரின் முகத்தில் தெரிகிறது.

இதை நம் கண் முன் கொண்டுவந்த அந்த சோழ சிற்பியின்
மெனக்கெடலுக்கு எல்லைதான் ஏது..?

இறைவனுக்கு மட்டுமல்ல...
மனிதனுக்கும் காளைக்குமான தொடர்பு..
யுகம் யுகமாய் கடந்து இன்றும் தொடர்ந்து கொண்டுதான்
இருக்கிறது..


புகைப்படம் - Sangeerani & Karikalan
எழுத்து: மாரிராஜன் 

Tuesday, August 8, 2017

கற்கள் சொல்லும் கலை நயம்


                                                                பகுதி - 1


"கற்கள் சொல்லும் கலை நயம்" என்ற இந்தப் புதிய தொடரில், நம் முன்னோர்கள் கட்டிய கோயில்களில் சிற்பக்கலையின் பயன்பாடு,  சிற்பத்தின் சிறப்புகள்,  கோவில்களின் அமைப்பு, கட்டுமானத் திறன், கலை நுணுக்கம், இன்ன பிற செய்திகளைக் குறித்துள்ள விளக்கங்களைத் தமது கட்டுரைகளினூடே அளிக்கவிருக்கிறார், சிற்பக் கலாநிதி திரு. ஸ்தபதி வே. இராமன் அவர்கள் ! படித்து இன்புறுவீர்களாக !




திருச்சிராப்பள்ளி – குளித்தலை சாலையில் 11 கி.மீ தூரத்தே அமைந்துள்ளது திருச்செந்துறை. காவிரிக்கரையின் மேல் இயற்கையான சூழ்நிலையில் அமைந்துள்ள இந்தக் கற்கோயிலை, திருச்சிக்குப் போகிற வருகிற யாரும் பார்க்காமல் இருக்க 
இயலாது !
  சிற்பக்கலை, கட்டடக்கலை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலுக்கருகில் அல்லுர், அந்தநல்லுர், திருப்பராய்த்துறை போன்ற  சிவத்தலங்களும், புகழ்பெற்ற குணசீலம் என்ற வைணவத் தலமும், சுற்றுலாத் தலமாக விளங்கும் முக்கொம்பும் உள்ளன.

  சைவமும் தமிழம் தழைக்கச் செய்த சம்பந்தர் பெருமான் திருப்பராய்த்துறை, அந்த நல்லுர் மற்றும் திருச்செந்துறை ஆகிய கோயில்களுக்குச் சென்ற பின்னர் திருக்கற்குடி சென்றதாகப் பெரிய புராணம் கூறுகிறது.
  முதலாம் பராந்தகச் சோழனின் மருமகளும்,  அரிகுல கேசரியின் மனைவியுமாகிய இருக்குவேளிர் குலத்தேவியான பூதி ஆதித்த பிடாரி என்னும் சோழப் பேரரசியால் கட்டமைக்கப்பட்டது இக்கோயில்.

  கிழக்கு நோக்கி  அமைந்த இக்கோயில், கருவறை, முகமண்டபம், மகாமண்டபம், பரிவார ஆலயங்கள், அம்மன் கோயில், கோபுரம், திருமதில் என்றவாறு இரு திருச்சுற்றுகளைப் பெற்றுப் பரந்தும் விரிந்தும் காட்சியளிக்கிறது. இதில் காலத்தால் மிகவும் பழைமை   வாய்ந்தது எனக் கருதப்படுவது கருவறையும், அதனுடன்  இணைந்த முக மண்டபமும் ஆகும். விமானம் கீழிருந்து இரண்டாம் நிலை வரை கல்லால் கட்டப்பட்டுள்ளது. நாற்புறமும் ஒரே அளவில் சமசதுரமாக அமைந்த இது  நாகர வகை விமானமாகும்.
  கருவறையில் வட்ட வடிவ ஆவுடையின் மேல் காணப்படும் லிங்கத்தின் மேற்பரப்பு பலாப்பழத்தின் தோல் போன்று சொர சொரப்பாக அமைந்துள்ளது. கோயிலின் தலமரமாக பலாமரமே பசுமையாக அடர்ந்து காணப்படுவது சிறப்பு.

இன்றைய மக்களால் சந்திர சேகர சுவாமி என்று அழைக்கப்படும் மூலவருக்கு திருச்செந்துறை உடையவர், பரமேசுவரர், கற்றளி பெருமானடிகள் போன்ற பெயர்களும் வழங்கப்பட்டுள்ளன.
இக்கோயில் இருக்குமிடத்தை ‘உறையூர் கூற்றத்து பிரம்மதேயம் ஈசானமங்கலம்’ என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது.


இரண்டு நிலை விமானம் 

இக்கற்கோயிலானது பாதக்கட்டு (அதிட்டானம்). பாதச்சுவர், கூரை, தளம், கழுத்து, சிகரம், தூபி, என அங்கங்களைப் பெற்று கம்பீரமான தோற்றத்துடனும் எழிலுடனும் காட்சியளிக்கிறது.


கற்கோயிலில் பூமியின் மேல் எழும் முதல் அங்கமே பாதக்கட்டு (அதிட்டானம்).எனப்படும்.  நார்த்தாமலை, எறும்பியூர், பெருங்குடி, கோபுரப்பட்டி,சோழமாதேவி ஆகிய இடங்களில் அமைந்துள்ள விமானங்களின் பாதக்கட்டு அமைப்பிலிருந்து, இங்கு முற்றிலும் மாறுபட்ட பாதக்கட்டு அமைந்துள்ளது. இக்கட்டுமானத்தை பிரதிபந்தம் என்பர் சிற்பியர். இதில் மகாபத்மம், உருள் குமுதம், யாளி முதலான உறுப்புகள் எழில் மிக்கதாய் செதுக்கப்பட்டுள்ளன.  யாளியும், மகரத்தலையும் நுணுக்கமாய் கலையம்சத்துடன் இங்கே வடிவமைக்கப் பட்டுள்ளன. சோழர் காலக் கட்டிடக் கலையில் சிறப்பிடம் பெறும் யாளி மற்றும் மகரத்தலையின் வளர்ச்சி நிலையை தஞ்சைப் பெரிய கோயில் கட்டுமானத்தில் காணலாம்.

பாதக் கட்டின் மேலெழும் பாதச் சுவரில் ஐந்து பத்தியமைப்பு முறையைப் பின்பற்றித் தூண்கள் இடம் பெற்றுள்ளன. மையப்பகுதி சற்று முன் வந்ததாய் அமைந்து கட்டிடத்தின் அழகைக் கூட்டுகிறது.  தூண்கள் கீழிருந்து மேலாக உடல் மாலைத் தொங்கல், மாலைக் கட்டு, தாமரைக் கட்டு, கலசம், குடம், பாலிகை, பலகை, வீரகண்டம், தரங்கப்போதிகை என்னும் உறுப்புகளைப் பெற்று. தொடக்க கால சோழக் கலைமுறையினை  வெளிப்படுத்தும் வகையில் அழகூட்டும் அணிகளாகக் காட்சியளிக்கின்றன.

  மாலைத் தொங்கல், பதக்கம், பலகை ஆகியவற்றில் செதுக்கப்பட்டுள்ள கருக்கணிகள் எனப்படும் நுட்பமான புனைவுகள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட வகையில் சிற்பிகளின் கற்பனை மற்றும் கலையாற்றலை வெளிப்படுத்தி, நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

கருவறைப் புறச்சுவரில் தென்புறம்  ரிஷபாரூடர், அக்கமாலை, மழு ஏந்தி, நின்ற நிலையில் இருப்பதைப் பிற கோயில்களில் காண்பது அரிது.
பூதகணங்கள், நாற்புறமும் பல்வேறு நிலைகளில் செதுக்கப்பட்ட வலபியின் மேலாக, கவிழ்ந்த நிலையில் கபோதகம் சற்று நீட்சியுடன் காட்சியளிக்கிறது. கபோதகத் தொங்கலில் சோழக்கலை முறையிலான சந்திர மண்டல அலங்கரிப்பு வரிசையாக அமைய, திருப்பங்களில் கொடிப்பாளை    கருக்கணி அலங்கரிப்புகள் கண்களைக் கவர்கின்றன. பூமி தேசமான யாழிவரியில் யாழிகளின் அணிவகுப்பு அழகுற செதுக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் கழுத்துப் பகுதியாகிய உள்ளடங்கிய கிரீவத்தின் நாற்புறங்களிலும் நடன மகளிர் சிற்பங்கள் வேறுபட்ட நிலைகளில் அமைந்திருக்க, விமான தேவதைகளாக, கிழக்கே ஆலிங்கன சந்திரசேகர், தெற்கே ஆலமர் அண்ணல், மேற்கே திருமால், வடக்கே நான்முகன் என்று இடம் பெறுகின்றனர்.

இக்கோயிலின் சுவர்ப்பகுதியில் ஏராளமான கல்வெட்டுகள் தெளிவாக ஒரே சீராக அழகுபட செதுக்கப்பட்டு பல வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கியுள்ளன.  அக்காலத்தில் நிலமளக்கப் பயன்படுத்தப்பட்ட அளவுகோல் ஒன்று கருவறையின் தென்சுவரில் செதுக்கப்பட்டு அதன் அருகிலேயே ‘நிலமளந்த கோல்‘ என்று கல்வெட்டாகவும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுகோல் பற்றி இவ்வூருக்கு அருகில் உள்ள அந்தநல்லூர் வட தீர்த்த நாதர் கோயில் கல்வெட்டில் ‘திருச்செந்துறை ஸ்ரீ் விமானத்து வெட்டிக்கிளடக்கும் பெருங்கோலால் நிலம் மூன்று மாவும்‘ என்று குறிப்பிடுவதால், இப்பகுதியில் நிலமளக்க இந்த அளவுகோலே பயன்பட்டது என்பதை உறுதி செய்ய முடிகிறது.

  செம்பியன் இருங்கோவேளான் என்ற பூதி ஆதித்தன் பிடாரன் என்பவன் இக்கோயிலில் ‘ பஞ்சமகா சப்தம் ‘ என்ற இசை வழி பாட்டிற்குத் தானம்  அளித்துள்ளான்.  கரடிகை, சங்கு, மத்தளம், காளம், வாய்ப்பாட்டு என்ற ஐந்தும் இக்கோயிலில் இசைக்கப்பட்டு,  நாதவெள்ள பரவசத்தில் வழிபாடுகள் நடந்தமையைக் கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன. இது போன்ற இசை வழிபாடு சோழமாதேவி கோயிலிலும் நடைமுறையில் இருந்தது நினைவிருக்கலாம். 

  ஒரு சோழப் பெண்ணரசியால் தோற்றுவிக்கப்பட்ட இக்கோயில், சோழப் பேரரசர்களாலும் விஜயநகர மன்னர்களாலும் போற்றி வழிபாடு செய்யப்பட்டதாகும்.  வரலாறு, கட்டடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் இக்கோயில்,  கண்டு இன்புறத்தக்க நம் கலைச்செல்வம்,  என்பதில் நமக்குப் பெருமை !

                 எழுத்து: சிற்பக் கலாநிதி ஸ்தபதி  வே. இராமன்
படங்கள்: இணையம், varalaru.com