Tuesday, August 8, 2017

கற்கள் சொல்லும் கலை நயம்


                                                                பகுதி - 1


"கற்கள் சொல்லும் கலை நயம்" என்ற இந்தப் புதிய தொடரில், நம் முன்னோர்கள் கட்டிய கோயில்களில் சிற்பக்கலையின் பயன்பாடு,  சிற்பத்தின் சிறப்புகள்,  கோவில்களின் அமைப்பு, கட்டுமானத் திறன், கலை நுணுக்கம், இன்ன பிற செய்திகளைக் குறித்துள்ள விளக்கங்களைத் தமது கட்டுரைகளினூடே அளிக்கவிருக்கிறார், சிற்பக் கலாநிதி திரு. ஸ்தபதி வே. இராமன் அவர்கள் ! படித்து இன்புறுவீர்களாக !




திருச்சிராப்பள்ளி – குளித்தலை சாலையில் 11 கி.மீ தூரத்தே அமைந்துள்ளது திருச்செந்துறை. காவிரிக்கரையின் மேல் இயற்கையான சூழ்நிலையில் அமைந்துள்ள இந்தக் கற்கோயிலை, திருச்சிக்குப் போகிற வருகிற யாரும் பார்க்காமல் இருக்க 
இயலாது !
  சிற்பக்கலை, கட்டடக்கலை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலுக்கருகில் அல்லுர், அந்தநல்லுர், திருப்பராய்த்துறை போன்ற  சிவத்தலங்களும், புகழ்பெற்ற குணசீலம் என்ற வைணவத் தலமும், சுற்றுலாத் தலமாக விளங்கும் முக்கொம்பும் உள்ளன.

  சைவமும் தமிழம் தழைக்கச் செய்த சம்பந்தர் பெருமான் திருப்பராய்த்துறை, அந்த நல்லுர் மற்றும் திருச்செந்துறை ஆகிய கோயில்களுக்குச் சென்ற பின்னர் திருக்கற்குடி சென்றதாகப் பெரிய புராணம் கூறுகிறது.
  முதலாம் பராந்தகச் சோழனின் மருமகளும்,  அரிகுல கேசரியின் மனைவியுமாகிய இருக்குவேளிர் குலத்தேவியான பூதி ஆதித்த பிடாரி என்னும் சோழப் பேரரசியால் கட்டமைக்கப்பட்டது இக்கோயில்.

  கிழக்கு நோக்கி  அமைந்த இக்கோயில், கருவறை, முகமண்டபம், மகாமண்டபம், பரிவார ஆலயங்கள், அம்மன் கோயில், கோபுரம், திருமதில் என்றவாறு இரு திருச்சுற்றுகளைப் பெற்றுப் பரந்தும் விரிந்தும் காட்சியளிக்கிறது. இதில் காலத்தால் மிகவும் பழைமை   வாய்ந்தது எனக் கருதப்படுவது கருவறையும், அதனுடன்  இணைந்த முக மண்டபமும் ஆகும். விமானம் கீழிருந்து இரண்டாம் நிலை வரை கல்லால் கட்டப்பட்டுள்ளது. நாற்புறமும் ஒரே அளவில் சமசதுரமாக அமைந்த இது  நாகர வகை விமானமாகும்.
  கருவறையில் வட்ட வடிவ ஆவுடையின் மேல் காணப்படும் லிங்கத்தின் மேற்பரப்பு பலாப்பழத்தின் தோல் போன்று சொர சொரப்பாக அமைந்துள்ளது. கோயிலின் தலமரமாக பலாமரமே பசுமையாக அடர்ந்து காணப்படுவது சிறப்பு.

இன்றைய மக்களால் சந்திர சேகர சுவாமி என்று அழைக்கப்படும் மூலவருக்கு திருச்செந்துறை உடையவர், பரமேசுவரர், கற்றளி பெருமானடிகள் போன்ற பெயர்களும் வழங்கப்பட்டுள்ளன.
இக்கோயில் இருக்குமிடத்தை ‘உறையூர் கூற்றத்து பிரம்மதேயம் ஈசானமங்கலம்’ என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது.


இரண்டு நிலை விமானம் 

இக்கற்கோயிலானது பாதக்கட்டு (அதிட்டானம்). பாதச்சுவர், கூரை, தளம், கழுத்து, சிகரம், தூபி, என அங்கங்களைப் பெற்று கம்பீரமான தோற்றத்துடனும் எழிலுடனும் காட்சியளிக்கிறது.


கற்கோயிலில் பூமியின் மேல் எழும் முதல் அங்கமே பாதக்கட்டு (அதிட்டானம்).எனப்படும்.  நார்த்தாமலை, எறும்பியூர், பெருங்குடி, கோபுரப்பட்டி,சோழமாதேவி ஆகிய இடங்களில் அமைந்துள்ள விமானங்களின் பாதக்கட்டு அமைப்பிலிருந்து, இங்கு முற்றிலும் மாறுபட்ட பாதக்கட்டு அமைந்துள்ளது. இக்கட்டுமானத்தை பிரதிபந்தம் என்பர் சிற்பியர். இதில் மகாபத்மம், உருள் குமுதம், யாளி முதலான உறுப்புகள் எழில் மிக்கதாய் செதுக்கப்பட்டுள்ளன.  யாளியும், மகரத்தலையும் நுணுக்கமாய் கலையம்சத்துடன் இங்கே வடிவமைக்கப் பட்டுள்ளன. சோழர் காலக் கட்டிடக் கலையில் சிறப்பிடம் பெறும் யாளி மற்றும் மகரத்தலையின் வளர்ச்சி நிலையை தஞ்சைப் பெரிய கோயில் கட்டுமானத்தில் காணலாம்.

பாதக் கட்டின் மேலெழும் பாதச் சுவரில் ஐந்து பத்தியமைப்பு முறையைப் பின்பற்றித் தூண்கள் இடம் பெற்றுள்ளன. மையப்பகுதி சற்று முன் வந்ததாய் அமைந்து கட்டிடத்தின் அழகைக் கூட்டுகிறது.  தூண்கள் கீழிருந்து மேலாக உடல் மாலைத் தொங்கல், மாலைக் கட்டு, தாமரைக் கட்டு, கலசம், குடம், பாலிகை, பலகை, வீரகண்டம், தரங்கப்போதிகை என்னும் உறுப்புகளைப் பெற்று. தொடக்க கால சோழக் கலைமுறையினை  வெளிப்படுத்தும் வகையில் அழகூட்டும் அணிகளாகக் காட்சியளிக்கின்றன.

  மாலைத் தொங்கல், பதக்கம், பலகை ஆகியவற்றில் செதுக்கப்பட்டுள்ள கருக்கணிகள் எனப்படும் நுட்பமான புனைவுகள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட வகையில் சிற்பிகளின் கற்பனை மற்றும் கலையாற்றலை வெளிப்படுத்தி, நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

கருவறைப் புறச்சுவரில் தென்புறம்  ரிஷபாரூடர், அக்கமாலை, மழு ஏந்தி, நின்ற நிலையில் இருப்பதைப் பிற கோயில்களில் காண்பது அரிது.
பூதகணங்கள், நாற்புறமும் பல்வேறு நிலைகளில் செதுக்கப்பட்ட வலபியின் மேலாக, கவிழ்ந்த நிலையில் கபோதகம் சற்று நீட்சியுடன் காட்சியளிக்கிறது. கபோதகத் தொங்கலில் சோழக்கலை முறையிலான சந்திர மண்டல அலங்கரிப்பு வரிசையாக அமைய, திருப்பங்களில் கொடிப்பாளை    கருக்கணி அலங்கரிப்புகள் கண்களைக் கவர்கின்றன. பூமி தேசமான யாழிவரியில் யாழிகளின் அணிவகுப்பு அழகுற செதுக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் கழுத்துப் பகுதியாகிய உள்ளடங்கிய கிரீவத்தின் நாற்புறங்களிலும் நடன மகளிர் சிற்பங்கள் வேறுபட்ட நிலைகளில் அமைந்திருக்க, விமான தேவதைகளாக, கிழக்கே ஆலிங்கன சந்திரசேகர், தெற்கே ஆலமர் அண்ணல், மேற்கே திருமால், வடக்கே நான்முகன் என்று இடம் பெறுகின்றனர்.

இக்கோயிலின் சுவர்ப்பகுதியில் ஏராளமான கல்வெட்டுகள் தெளிவாக ஒரே சீராக அழகுபட செதுக்கப்பட்டு பல வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கியுள்ளன.  அக்காலத்தில் நிலமளக்கப் பயன்படுத்தப்பட்ட அளவுகோல் ஒன்று கருவறையின் தென்சுவரில் செதுக்கப்பட்டு அதன் அருகிலேயே ‘நிலமளந்த கோல்‘ என்று கல்வெட்டாகவும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுகோல் பற்றி இவ்வூருக்கு அருகில் உள்ள அந்தநல்லூர் வட தீர்த்த நாதர் கோயில் கல்வெட்டில் ‘திருச்செந்துறை ஸ்ரீ் விமானத்து வெட்டிக்கிளடக்கும் பெருங்கோலால் நிலம் மூன்று மாவும்‘ என்று குறிப்பிடுவதால், இப்பகுதியில் நிலமளக்க இந்த அளவுகோலே பயன்பட்டது என்பதை உறுதி செய்ய முடிகிறது.

  செம்பியன் இருங்கோவேளான் என்ற பூதி ஆதித்தன் பிடாரன் என்பவன் இக்கோயிலில் ‘ பஞ்சமகா சப்தம் ‘ என்ற இசை வழி பாட்டிற்குத் தானம்  அளித்துள்ளான்.  கரடிகை, சங்கு, மத்தளம், காளம், வாய்ப்பாட்டு என்ற ஐந்தும் இக்கோயிலில் இசைக்கப்பட்டு,  நாதவெள்ள பரவசத்தில் வழிபாடுகள் நடந்தமையைக் கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன. இது போன்ற இசை வழிபாடு சோழமாதேவி கோயிலிலும் நடைமுறையில் இருந்தது நினைவிருக்கலாம். 

  ஒரு சோழப் பெண்ணரசியால் தோற்றுவிக்கப்பட்ட இக்கோயில், சோழப் பேரரசர்களாலும் விஜயநகர மன்னர்களாலும் போற்றி வழிபாடு செய்யப்பட்டதாகும்.  வரலாறு, கட்டடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் இக்கோயில்,  கண்டு இன்புறத்தக்க நம் கலைச்செல்வம்,  என்பதில் நமக்குப் பெருமை !

                 எழுத்து: சிற்பக் கலாநிதி ஸ்தபதி  வே. இராமன்
படங்கள்: இணையம், varalaru.com

                                                                                                                                             

1 comment:

  1. அருமை basic classes இருந்தால் இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள உதவும்

    ReplyDelete