Thursday, October 12, 2017

தடங்களைத் தேடும் தடங்கள் 2/1

தடங்களைத் தேடும் தடங்கள்
தடம் 2 பயணம் 1

நார்த்தாமலை - 1 

எழுத்தும் படமும் - முருகன் நடராஜன்

எழுதத்தூண்டிய பயணங்கள் - க


முதன்மைச் சாலையிலிருந்து ஒதுங்கி நின்ற அப்பைஞ்சுதைச் சாலையின் இருமருங்கிலும் வீடுகள். வண்ணக்குடங்களுடன் பெண்டிரும், விளையாடும் குழந்தைகளும், அங்கங்கு கூடிப் பேசிக்கொண்டிருந்த ஆண்களுமென இயல்போடிருந்த அச்சாலையின் இறுதியில் ஆளரவமற்ற மண்பாதை இணைந்தது. ஒன்பது குன்றுகளின் கூட்டமாம் நார்த்தாமலையின் ஒரு மலையாகிய மேல மலைக்குச் செல்லும் அம்மண் பாதையில்  புதர்களுக்கிடையே மிகுந்த களைப்புடன் நாங்கள் மூவரும் ஈருருளிகளில் பயணித்துக் கொண்டிருந்தோம்.  அன்றைய பயணத்தின் நிறைவாக  இருள் நெருங்கும் மாலைவேளையில் மேலமலையின் அடிவாரம் வந்தடைந்தோம்.


          சோர்வின் உச்சத்தில் இருந்த எங்களை மகிழ்வித்தனுப்ப ஊருணி வரவேற்றது. காலம் கருதித் திரும்புகையில் வருவதாகச் சொல்லிவிட்டு நீண்டு செல்லும் குன்றின் முக்கால் பங்கு உயரத்தில் அமைந்துள்ள விஜயாலய சோழீச்சுரம் நோக்கி நடந்தோம். 


நடக்கும் தூரம் தெரியாமலிருக்க எனக்கும் பார்த்திக்கும் இடையே சொல்லாடல் துவங்கியது. தஞ்சையை விஜயாலயர் கைப்பற்றியது முத்தரையரிடமிருந்தா இல்லை பல்லவரிடமிருந்தா என்று போய்க்கொண்டிருந்த சொல்லாடலை கவின் கவனித்துக் கொண்டிருந்தார். 

          நீண்டு சென்று கொண்டிருந்த சொல்லாடல் கோயிலின் வருகையில் கரைந்து போனது. மலைத்து நின்ற எங்கள் கண்முன்னே வட்ட வடிவ விமானம் கொண்ட ஒரு முதன்மைக் கோயிலும் அதைச் சுற்றி ஆறு சிறு கோயில்களும், முதன்மைக் கோயிலுக்கு எதிரே தூணுடன் கூடிய நந்தியும் காட்சியளித்தன. முதன்மைக் கோயிலில் சிவலிங்கம் காட்சியளிக்கிறது. 


மீதமுள்ள ஆறு கோயில்களிலும் வழிபாட்டுருவங்கள் காணப்படாததும் அதிலிரண்டின் விமானங்கள் உடைந்திருந்ததும் கவலையளித்தது. இருப்பினும் உச்சியிலிருந்து ஊரின் மூன்று திசைகளையும் பார்த்துக் கொண்டு இக்கோயிலை வழிபடுவதென்பது அருமையான ஒன்று.

          முத்தரையர்கள் மிக இரசித்து இக்கோயிலைக் கட்டியிருக்கின்றனர் என்றெண்ணுகையில் சற்றுமுன் நிகழ்ந்த எங்களின் சொல்லாடலும் அதிலிடம் பெற்ற மூவருக்கும் இக்கோயிலுக்கும் உள்ள தொடர்பும் நினைவு வந்தது. சாத்தன்பூதி என்ற முத்தரையரால் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் மழையால் இடிந்துபட, பின்னர் மல்லன் விடுமன் என்ற முத்தரையர்  சோழர்கள் காலத்தில் எடுத்துக்  கட்டியதென்று முதன்மைக்கோயிலின் கலை நயமிக்க வாயில் காப்போன் சிலைக்குக் கீழுள்ள கல்வெட்டு தெரிவிக்கின்றது. 


          மேற்குப் பார்த்த கோயில். முறையான வழிபாடின்றி காட்சியளிக்கின்றது. கோயிலுக்கு முன் மழைநீர் செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் வடக்கே நீண்டு செல்லும் மலையில் சில அடிகள் தொலைவில் ஆறடியில் அல்லி நிறைந்த பாழியொன்று உள்ளது. அங்கு சற்று அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். இருள் சூழத் துவங்கியது. 

          முற்றிலுமிருள்வதற்குள் கீழிறங்கியாக வேண்டிய கட்டாயத்தில் பிற இடங்களைக் காணாது விரைந்திறங்கினோம். இறங்கியதும் முன் கண்ட ஊருணியில் கால் நனைத்து நீர் பருகியதுடன் அன்றைய பயணம் நிறைவடைந்தது. காலத்தில் மாறாததென்று ஏதுமில்லை. அதற்கிந்த நார்த்தாமலையும் விதிவிலக்கல்ல. புராணத்திலே நாரதர் மலையென்று அழைக்கப்பட்டு ஆயிரத்தி முந்நூறு ஆண்டுகளுக்கு முன் நகரத்தார் மலையென்னும் பெயர்கொண்டு அன்றைய வணிகத் தலைமையகமாக விளங்கி, இன்று நார்த்தாமலையென்று பெயர் மருவி காலத்தில் கரைந்திருக்கும் இவ்விடத்தை எண்ணிக்கொண்டே பிரிந்து சென்றோம் மீண்டும் வருவதாய்க் கூறி....

தொடரும்😊