வரலாற்றுத் தொன்மைகள் - 1
(செய்தி மற்றும் படங்கள் : திரு.சரவண ராஜா)
ஸ்ரீ விரூபாதீஸ்வரர் கோவில் ,வேப்பம்பட்டு கிராமம்,
கணியம்பாடி, வேலூர் .
அதிகம் கவனிக்கப்பட்டிராத இந்த சிவன் கோவில், விரூபாதீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. வேப்பம்பட்டு என்ற சிறிய கிராமத்தில் உள்ளது. கணியம்பாடி கிராமத்தின் நுழைவாயிலில் பென்னாத்தூர் இருப்புப்பாதை தாண்டியவுனேயே, சற்று தூரத்தில் வீதியோரத்திலேயே கண்ணில் படுகிறது இந்த அழகிய கோவில்.
பிற்காலச் சோழர் காலத்தியதான இக்கோவில் செவ்வக வடிவில் அமைந்துள்ளது. கருவறையின் வெளிச் சுவற்றில் 'கதை சொல்லும் சிற்பங்கள்' என்று அழைக்கப்படுகின்ற, சிவபெருமானின் கதைகளை விளக்குகின்ற சிலபல கதைகள் சிற்ப வடிவில் செதுக்கப்பட்டுள்ளன.
![]() |
| பிக்ஷாண்டார் |
கோவிலைச் சுற்றி இத்தகைய சிற்பங்களும், கிரந்தம் மற்றும் தமிழில் எழுதப்பட்டுள்ள சில கல்வெட்டுகளும் சேர்ந்து எண்ணிக்கையில் குறைந்தது ஒரு பதினைந்தேனும் இருக்கும். இக்கல்வெட்டுகளில் ஒன்றிலேயே இவ்வூரின் பெயர் செதுக்கப்பட்டுள்ளது. சோழர் காலம் முதலே இவ்வூரின் பெயர் வேப்பம்பட்டு தான் என்பதற்கு இக்கல்வெட்டு ஒரு சான்றாக நிற்கிறது.
இக்கோவிலின் முன்புறப் பகுதிகள் சிதைவடைந்திருந்த நிலையில், இக்கிராமத்தைச் சேர்ந்த, தீக்காராம் என்ற பெயருடைய ஓர் சிவபக்தர், தானே பணம் கொடுத்து இந்தக் கோவில் உள்ள நிலத்தை, கோவிலுடன் சேர்த்து வாங்கி, புனரமைப்புகள் செய்து, கோவிலைத் தானே பராமரித்தும் வருகிறார். தினப்படி பூஜைகள் நடத்தி வைத்து மக்கள் இறைவனை தரிசிக்க வழிவகைகள் செய்துள்ளார் ! இது மிகவும் பாராட்டத் தக்க ஒரு செயலன்றோ ! மேலும், கற்களின் நிறத்திலேயே ஒரு வண்ணப் பூச்சும் செய்து, அந்தப் பதினைந்து கதை சொல்லும் சிற்பங்களின் சிறப்பினை நம் அடுத்த தலைமுறையும் கண்டறிந்து கொள்ள வகை செய்திருக்கிறார் இவர். தனி மனிதனாக நின்று வரலாற்றை நிலைப்படுத்த இவர் செய்துள்ள இந்தப் பெரு முயற்சி மிகவும் போற்றத்தக்கதே !
![]() |
| கஜஸம்ஹாரம் |
கல்வெட்டுக்களைப் படித்து ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர்கள் இந்த இடத்திற்கும் சென்று, தமது ஆய்வுகள் மூலம் மேலும் பல புதிய செய்திகளை வெளிக்கொண்டு தருவாராக !


No comments:
Post a Comment